Advertisement

இந்திர மாளிகை

தேவர் உலகத்தை ஆட்சி செய்து வந்த தேவேந்திரனுக்கு ஒருநாள் திடீரென ஒரு விசித்திரமான ஆசை ஏற்பட்டது. மிகப் பிரமாண்டமான மாளிகை ஒன்றினை கட்ட எண்ணினான். எனவே, தேவர் உலக சிற்பி வரவழைக்கப்பட்டான்.
""விஸ்வகர்மா, நீ எனக்காக நம்முடைய அமராபுரிப் பட்டணத்தில் மிகப் பிரமாண்டமான ஒரு மாளிகையை எழுப்பித் தரவேண்டும். அந்த மாளிகையைப் பார்ப்பவர்கள், ஈரேழு உலகங்களிலும் இதைப் போன்ற மாளிகையே கிடையாது என்று எண்ண வேண்டும்.
""அண்ட சராசரங்களில் இந்திர மாளிகையைப் போல ஒன்று கிடையவே கிடையாது என்ற பெரும்புகழை, அந்த மாளிகை எனக்குப் பெற்றுத் தர வேண்டும். எனவே, சித்திர விசித்திரங்களுடன் அகட, விகடங்கள் ஏற்படுத்தக் கூடிய ஒரு மாளிகையை எனக்குக் கட்டி கொடு,'' என்று கூறினான்.
விஸ்வகர்மா அதன்படி மிகவும் சிரமப்பட்டு ஒரு மாளிகையைக் கட்டினான். அதைக் கட்டி முடிக்க ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. தேவந்திரனை அழைத்து வந்து, மாளிகையைக் காண்பித்தான். ஆனால், தேவேந்திரன் திருப்தி அடைய வில்லை. இன்னும் சிறப்பாகச் செய்திருக்க லாமோ என்று அவனுள் ஓர் எண்ணம் தோன்றியது.
உடனே அவன் விஸ்வகர்மாவைப் பார்த்து, ""விஸ்வ கர்மா என்னுடைய வீரம் என்ன, பராக்ரமம் என்ன, செல்வச் செழிப்பு என்ன, என் பதவியின் உயர்வு என்ன, அழியாத தேவர்களின் தலைவனாக இருக்கும் என் தகுதி என்ன? இதை நீ ஒரு சாதாரண ஏழைக்குக் கட்டியது போல, தோன்றித் தோன்றி மறைந்து போகும் அற்ப மானிடப் பதர் களுக்குக் கட்டியது போலக் கட்டி விட்டாய். இதை என்னால் ஏற்க முடியாது. இதைவிட அற்புதமாகக் கட்டித் தா!'' என்று கூறினான்.
விஸ்வகர்மா, திடுக்கிட்டான்.
"என்னுடைய முழு வல்லமையையும், தொழில் திறமையையும் பயன்படுத்தி மாளிகை ஒன்றைக் கட்டித் தந்தால், அதிலேயே குற்றம் சொல்லுகிறான். இப்போது என்ன செய்வது? இதை விடச் சிறந்தது என்னால் கட்ட முடியாதே!' என்று மனதுக்குள் நொந்து போனான்.
எல்லாப் பிரச்னைகளையும் எளிதாக தீர்த்து வைக்கக் கூடிய நாரதர் தான் இதற்குத் தீர்வைச் சொல்ல முடியும் என்று எண்ணிய விஸ்வகர்மா விறுவிறுவென்று, நாரதரைத் தேடிச் சென்று அவர் கால்களில் விழுந்து அழுதான். நாரதர் அவனைத் தேற்றி விஷயம் கேட்டார்.
நடந்ததைச் சொன்னான் விஸ்வகர்மா.
""சரி, நீ போய் உன் சொந்த வேலையைக் கவனி. நான் இதைச் சுமுகமாகத் தீர்த்து வைக்கிறேன்,'' என்று அவனை அனுப்பி வைத்தார்.
தேவேந்திரனைச் சந்தித்தார் நாரதர்.
தேவேந்திரன் நாரதரை வரவேற்றான்.
அவன் மனதில், தான் கட்டியுள்ள மாளிகையை நாரதரிடம் காட்ட வேண்டும் என்று தோன்றியது. எனவே, அவரை அவன் மாளிகைக்கு அழைத்துச் சென்றான்.
எல்லாவற்றையும் அவர் சுற்றிப் பார்த்து முடித்தவுடன் தேவேந்திரன் நாரதரிடம் கேட்டான்.
""சுவாமி, இந்த மாளிகையை விட மிகச் சிறந்த மாளிகையை எங்காவது நீங்கள் பார்த்தது உண்டா?'' என்று பணிவுடன் கேட்டான்.
"எனக்குத் தெரிந்தவரை இத்தனைச் சிறப்பு மிக்க மாளிகையை நான் கண்டதே இல்லை. ஆனாலும் என்னை விட வயதில் மூத்தவர் ஒருவர் உண்டு. அவர்தான் மஹரிஷி லோமேசர். அவரும் என்னைப் போல நினைத்த இடத்துக்குச் செல்லக் கூடியவர். ஒருவேளை அவர் பார்த்திருந்தாலும் பார்த்திருக்கக் கூடுமே! அவரிடம் விசாரித்தால்தான் உண்மை தெரியும்.
தேவேந்திரன் லோமேசரிடம் கேட்க வேண்டுமே என்றான். நாரதர் மஹரிஷி லோமேசரை மனதால் தியானித்து அங்கே எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மறுகணமே அங்கே நீண்ட வெண் தாடியுடனும், இடையிலே கோவணத்துடனும், கையிலே ஒரு கமண்டலத்துடனும், தலையிலே ஒரு பாயுடனும், மஹரிஷி லோமேசர் தோன்றினார்.
அவரை வரவேற்றனர் இருவரும்.
தேவேந்திரன் அவரிடம், ""மஹரிஷி, தலையிலே ஏன் பாயைச் சுமந்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
""என்னைப் போன்ற அறிவில்லாத அற்ப ஆயுள் கொண்ட ஒரு ஜீவ ஜந்துவுக்குத் தனியாக ஒரு வீடு எதற்கு? அதை வைத்து என்னால் நிர்வாகம் பண்ண முடியாதே! நான் எங்கே போகிறேனோ அங்கே எனக்கு வீடாக இருந்து நிழல் தருவது இந்தப் பாய்தான். எனவே தான், இதைத் தலையிலே சுமந்து கொண்டிருக்கிறேன்,'' என்றான்.
ஆச்சரியமடைந்தான் தேவேந்திரன்.
""என்னது அற்ப ஆயுளா? உங்களுக்கா?''
""இதோ பார்! என்னுடைய மார்பில் ஒரு சின்ன பொற்காசு அளவுக்கு ரோமம் உதிர்ந்து விட்டதே. இப்படி எப்போது என் உடலில் உள்ள எல்லா ரோமங்களும் உதிர்ந்து போய் விடுமோ அப்போதே என் ஆயுள் தீர்ந்து விடும்,'' என்றார்.
""அப்படியானால் இந்த ரோமங்கள் எல்லாம் உதிர எவ்வளவு காலம் பிடிக்கும் உங்களுக்கு?'' என்று கேட்டான் தேவேந்திரன்.
""ஒரு பிரம்மாவின் ஆயுள் நூறு தேவ வருடங்கள். ஒவ்வொரு தேவ வருடத்துக்கும் முந்நூற்று அறுபத்து ஐந்து தேவ நாட்கள். ஒவ்வொரு தேவ நாட்களிலும் உன்னைப் போல பதினான்கு இந்திரர்கள் தோன்றி இறக்கின்றனர். இப்படி ஆயிரம் பிரம்மாக்கள் தோன்றி மறைந்தாலும், என் ரோமங்களில் கால்பகுதிதான் உதிர்ந்து போயிருக்கும்!'' என்றார்.
இப்படி லோமேசர் சொன்னதைக் கேட்டு நடுநடுங்கிப் போய் விட்டான் தேவேந்திரன்.
இத்தனை நீண்ட ஆயுள் பெற்ற ஒருவரே குடியிருக்க சிறு வீடு கூடக் கட்டிக் கொள்ளாமல் தலையில் பாயுடன் திரிகிறாரே! நான் அல்லவா அற்ப ஆயுள் உள்ளவன். எனக்கென்று மிகப் பிரமாண்டமான வீடு கட்ட ஏற்பாடு செய்ததும் இல்லாமல், கட்டிய வீட்டிலும் குறைகள் பல சொல்லி, விஸ்வகர்மாவைக் கடிந்து பேசி விட்டேனே! நான் எவ்வளவு பெரிய மடையன்?
லோமேசருக்குப் பெரிய கும்பிடு போட்டு விட்டு, விஸ்வகர்மாவை அழைத்து எனக்கு வீடு கட்டியது பரம திருப்தி. இதுவே போதும் என்று கூறிவிட்டான். விஸ்வகர்மா திருப்தி அடைந்து நாரதருக்கு நன்றி கூறினார்.
லோமேசரும், நாரதரும் அர்த்த புஷ்டியுள்ள புன்னகையை உதிர்த்துக் கொண்டனர்.
***

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement