Load Image
Advertisement

சகுந்தலா டீச்சர்!

''ஏய்... நான் போகணும்; ஸ்கூலுக்கு லேட்டாச்சு,'' என, கைக் கடிகாரத்தை திருப்பி பார்த்துவிட்டு பதறினாள், ராதிகா.

மார்பில் புரளும் இரட்டை சடை. மை இல்லாவிட்டாலும் மானாய் மருளும் விழிகள். அதில் சந்துருவின் மீதான காதல், கண்டபடி பிரகாசித்தது.

பள்ளிக் கூடம் அருகே இருந்த பூங்காவில், யாரும் பார்த்து விடாதபடி, மரங்களின் மறைவில் சந்துருவும், ராதிகாவும் அமர்ந்திருந்தனர்.

அவன் பார்வை படும் இடங்களில் எல்லாம், விரல்களும் பட முயன்றுக் கொண்டிருக்க, ''ச்சீ... விடுடா; நான் போறேன். தினமும் நான், 'லேட்'டா வர்றேன்னு, அந்த சகுந்தலா டீச்சர் என்னைத் திட்டிக்கிட்டே இருக்காங்க,'' என்று சிணுங்கியபடியே, விரல்களை தட்டி விட்டு எழுந்தாள். பெஞ்சிலிருந்த புத்தகங்களை எடுத்து, மார்போடு அணைத்துக் கொண்டாள்.

''லேட்டா போனா தானே திட்டுது, அந்த டீச்சர்... பேசாம, 'லீவு' போட்டுடு; நாம, 'ஜாலி'யா சினிமாவுக்குப் போகலாம்.''

''ஐயோ... வேற வினையே வேண்டாம்,'' பதறியபடி பள்ளிக்கூட பாதை தேடி, ஓடினாள்.

பள்ளிக்கூடம் வரும்போது, பாதி பாடம் நடந்துக் கொண்டிருந்தது. வழக்கம் போல், தாமதமாக வந்த, ராதிகாவை கண்ணாடி வழியே முறைத்தார், சகுந்தலா டீச்சர்.

''தினமும் இப்படி, 'லேட்'டா வர்றியே, உனக்கு வெட்கமாயில்ல... இன்னிக்கு, என்ன காரணம் சொல்லப் போற?'' சீறினார்.

''பஸ் லேட், டீச்சர்,'' தலையை நிமிர்த்த முடியாமல் சொன்னாள், ராதிகா.

கையிலிருந்த புத்தகத்தை மேசையில், 'படார்' என்ற சத்தத்துடன் போட்டுவிட்டு அவளருகே வந்து, ''தினம் உனக்கு பஸ், 'லேட்'டாகுமா... உன்னை மாதிரி எத்தனை பொண்ணுங்க கிராமத்துலேர்ந்து பஸ்ல வராங்க. அவங்களெல்லாம் இப்படித்தான், 'லேட்'டா வர்றாங்களா?

''உனக்கு படிப்பு மேல ஆர்வம் இல்லை. உன்கிட்ட ஏதோ தப்பு இருக்கு,'' என டீச்சர் சொல்லவும், மற்ற மாணவியர் தலையோடு தலை வைத்து, 'கிசுகிசு'த்து சிரித்தனர்.

அவள் தினமும், சந்துருவை சந்தித்து வருவது, அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதனால் தான் இந்த சிரிப்பு.

'டீச்சரிடமும் சொல்லியிருப்பரோ... அதனால் தான், நேற்று வரை உபயோகிக்காத, 'ஏதோ தப்பு' என்ற வார்த்தையை அவர் உபயோகித்து இருக்கிறாரோ!'

''இன்னைக்கு பூரா நீ வெளியில் நில்லு. நாளைக்கும் நீ சீக்கிரம் வரலைன்னா, வீட்டுக்குப் போயிடு,'' என கத்திவிட்டு, மறுபடியும் விட்ட பாடத்தை எடுக்கத் துவங்கினார், சகுந்தலா டீச்சர்.

வெளி வராண்டாவில் நிற்க வைத்த, சகுந்தலா டீச்சரின் மீது வெறியாகவும், பெருத்த அவமானமாகவும் இருந்தது, ராதிகாவிற்கு.

மற்ற வகுப்பிற்கு செல்லும், ஆசிரியர்களும், மாணவ - மாணவியரும், அவளை இளக்காரமாகப் பார்த்து, சிரித்து பேசுவதும் இன்னும் அசிங்கமாக இருந்தது.

எப்படியாவது டீச்சரை பழிவாங்க வேண்டும் என்ற வெறி, தோரணம் கட்டி தொடர்ந்து கொண்டேயிருந்தது.

ராதிகாவின் முகத்தை கையில் ஏந்திய சந்துரு, எப்பொழுதும் இருக்கும் காதல் ததும்பும் முகத்தில், சோர்வும், களைப்பும், சோகமும் படர்ந்திருப்பதைக் கண்டான்.

''என்னாச்சு ராதி... முகமெல்லாம் சோகமாயிருக்கு, ஸ்கூல்ல ஏதாவது பிரச்னையா?'' என கேட்டான், சந்துரு.

''ஒண்ணுமில்லை,'' என சமாளித்தாள்.

''ஏய் ராதி... ரொம்ப போரடிக்குது. ஒரு நாளைக்கு, நீயும், நானும், ஸ்கூலையும் காலேஜையும், 'கட்' அடிச்சுட்டு, வெளியே எங்காவது போய், 'ஜாலி'யா சுத்தலாம். என்ன சொல்ற?'' என்றான்.

ஏதோ யோசனையாய் நகத்தை கடித்து கடித்து துப்பினாள், ராதிகா.

''என்ன யோசிக்கிற?''

''எனக்கும் உன் கூட வெளியே எங்காவது, 'ஜாலி'யா சுத்தணும்ன்னு ஆசை தான். ஆனா, வீட்டுக்கு தெரிஞ்சா, என்ன பண்றது?''

இருவரும் யோசித்தனர். இறுதியில், ராதிகாவின் கண்களில் குஷியும், கூடவே வஞ்சகமும் மின்னியது.

''ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்,'' என்றாள்.

''ஒரே கல்லுல ரெண்டு மாங்காயா?''

''ஆமாம். நாம சந்தோஷமா, 'என்ஜாய்' பண்றோம். அதே சமயம், என் டீச்சரை பழி வாங்கறோம்.''

''டீச்சரை பழி வாங்கப் போறோமா... எந்த டீச்சரை, எதுக்காக அவங்களை பழி வாங்கணும்?''

''கணக்கு டீச்சர் சகுந்தலாவை!''

''ஏன்?''

''தினமும் நான், 'லேட்'டா போறேன்னு திட்டுவாங்க. ஆனா, இன்னைக்கு அந்த பிசாசு என்ன செஞ்சுது தெரியுமா... வகுப்புக்கு வெளியே என்னை நிக்க வச்சுடுச்சு, சனியன். எனக்கு, எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா?

''டீச்சர்ஸ் எல்லாம் நக்கலா பார்த்ததோட இல்லாம, அவங்க பங்குக்கு என்னை திட்டிட்டுப் போனாங்க. அந்த சகுந்தலா டீச்சர், எல்லாருக்கு முன்னாடியும் என்னை என்ன சொன்னாங்க தெரியுமா? 'என்கிட்ட என்னமோ தப்பு இருக்காம்...' க்ளாஸ்ல எல்லாரும் சிரிச்சு, தங்களுக்குள் பேசினாங்க.''

''யாராவது சொல்லி இருப்பாங்களோ?''

''இருக்கலாம். என்னோட தப்பை, என் பெற்றோரிடமும், பிரின்ஸ்பல்கிட்டேயும் சொல்லி, இன்னும் என்னை அவங்க அவமானப்படுத்துறதுக்கு முன், நான் அவங்களை அவமானப்படுத்தணும்.''

''எப்படி? அவங்களை, யாராவது, 'ஜென்ட்ஸ்' டீச்சரோட சேர்த்து வச்சு, சுவத்துல எழுதிடலாமா?''

''ச்சே... அதெல்லாம் பழைய, 'ஸ்டைல்' பழி வாங்கல். எனக்கொரு ஐடியா...''

''சொல்லு.''

''நாம ரெண்டு பேரும், 'ஜாலி'யா எங்காவது சுத்தலாம். மறுநாள் என் வீட்டுக்கு போய், லெட்டர் எழுதி வச்சுடுவேன்.''

''என்னான்னு?''

''சகுந்தலா டீச்சர், தினமும் எனக்கு, 'பனிஷ்மென்ட்' தந்து, வெளியில நிக்க வைக்கிறதால... அவமானம் தாங்காம, ஸ்கூலுக்கு போகாமல், தற்கொலை பண்ணிக்கப் போறேன். என்னை யாரும் தேட வேண்டாம்ன்னு, லெட்டர் எழுதி வெச்சுடுவேன்.''

''அடிப்பாவி...''

''எங்க கிராமமே திரண்டு, ஸ்கூல் வாசல்ல நிற்கும். 'பனிஷ்மென்ட்' தந்த டீச்சரை, சரமாரியா அடிக்கும். வழக்கு பதிவாகும். பேப்பர், 'வாட்ஸ் ஆப்' குழு, 'யு டியூப்'ன்னு, சகுந்தலா பிசாசோட பேர் நாறும். சொல்ல போனா, நிர்வாகம், டீச்சரை வேலையை விட்டு துாக்கும்,'' என சொல்லி, பெரிதாக சிரித்தாள்.

''அடிப்பாவி, என்னமா யோசிக்கிற?'' கண்களை விரித்து வியந்தான், சந்துரு.

''அதான் சொன்னேனே, 'ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்'ன்னு. ஒரு பக்கம், நாம, 'ஜாலி'யா இருக்கலாம்; இன்னொரு பக்கம், டீச்சருக்கு தர்ம அடி. என்னை தேடுவாங்க. மறுநாள், மனம் மாறி தற்கொலை முயற்சியை கைவிட்டுட்டதா அழுது, நாடகம் போட்டா, எங்க அம்மா - அப்பா, மனம் உருகி நம்பிடுவாங்க,'' என்றாள்.

''செம ஐடியா,'' என, அவளை அணைத்து, பாராட்டி, முத்தம் கொடுத்தான்.

மறுநாள் காலையில், வழக்கம்போல் வேண்டுமென்றே வகுப்பிற்கு தாமதமாக வந்தாள். இன்று, சகுந்தலா டீச்சரின் கோபம், இன்னும் அதிகரிக்கும். 'நேற்று, வெளியில் நிற்க வைத்தும், இவளுக்கு புத்தி வரவில்லையே...' என, தண்டனையை அதிகப்படுத்துவாள்; அடித்தாலும் ஆச்சரியம் இல்லை. ராதிகா எதிர்பார்ப்பதும் அதைத்தான்.

'மேலே கையை வைக்கட்டும். அதையே காரணமாக கடிதத்தில் எழுதி வைக்கிறேன். கிழவி ஜெயிலுக்கு போகட்டும்...' என, எண்ணியபடி வந்தவளுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.

சகுந்தலா டீச்சர், பள்ளிக்கு வரவில்லை. ஏன் என விசாரித்ததில், அவருக்கு உடம்பு சரியில்லை என, மாணவியர் பேசிக் கொண்டனர்.

அன்று சனிக்கிழமை, பள்ளிக்கூடம் அரை நாள்.

பள்ளிக்கூடம் சீக்கிரம் முடிந்து விட்டதால், வகுப்பு மாணவியர் அனைவரும், சகுந்தலா டீச்சரை பார்த்து வர கிளம்பினர்.

இவளையும் வர வற்புறுத்தினர். போக பிடிக்கவில்லை என்றாலும், டீச்சர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் கோலத்தைப் பார்க்க, மனம் விரும்பியது.

'எனக்கு, 'பனிஷ்மென்ட்' கொடுத்தேல்ல. அதான், ஆண்டவன் உனக்கு தண்டனை தந்துட்டான். ஆனாலும், நான் சும்மாவிட மாட்டேன். உன்னை அவமானப்படுத்தி, ஊர் ஜனங்க முன் அடிவாங்க வச்சு, ஜெயில் வரைக்கும் போக வைக்கலேன்னா, என் பெயர் ராதிகா இல்லை...' என, கறுவினாள்.

மாணவியர் அனைவரும், சகுந்தலா டீச்சர் வீட்டிற்கு சென்றனர். வெறுப்புடன் உள்ளே நுழைந்தாள், ராதிகா.

கசங்காத காட்டன் புடவையில், பளிச்சென்று உயர்த்தி போட்ட கொண்டை, கண்ணாடியுடன், கம்பீரத்துடன் எப்போதும் இருப்பார்; இன்று, பழைய புடவையில், கலைந்த தலையும், வீங்கிய கண்களுமாய் காட்சியளித்தார், சகுந்தலா டீச்சர்.

பழிவாங்கத் துடித்த அவள் மனதை கூட பிசைவதாக இருந்தது, அந்தக் காட்சி. வாங்கி வந்திருந்த பழங்கள், பிஸ்கட்டை கொடுத்தாள், வகுப்பு லீடர் தமயந்தி.

'டீச்சர், உடம்புக்கு என்ன?' இதே கேள்வியை, அனைவரும் மாற்றி மாற்றி கேட்டனர்.

''உடம்புக்கு ஒண்ணுமில்லை; மனசுக்கு தான்...'' என்ற சகுந்தலா டீச்சரின் கண்களில், அருவி பெருகியது.

'என்னாச்சு டீச்சர்?' என கேட்டு, பதற்றமான மாணவியரை, பக்கத்து அறைக்கு அழைத்து சென்றாள், சகுந்தலா டீச்சர்.

அருகிலிருந்த பெரிய புகைப்படத்தைக் காட்டி, ''இது, என் மகள் சந்திரா. இப்ப உயிரோட இல்லை. இன்னிக்கு அவளுடைய நினைவு நாள். உங்களின் வயது தான் இருக்கும்.''

அழகான அந்த இளம் பெண்ணைப் பார்த்து, அதிர்ந்தனர்.

'டீச்சர்...' என்றனர்.

''ரெண்டு வருஷத்துக்கு முன், உங்க வயசுல, ப்ளஸ் 2 படிக்கிறபோது தான், அவ செத்துப் போனா.''

'எப்படி டீச்சர்?'

''தற்கொலை.''

'டீச்சர்?'

''ஒரே மகள். சின்ன வயசுலயே, அப்பாவை இழந்துட்டா. அதனால, ரொம்ப செல்லமா வளர்த்ததன் விளைவு. பதின் பருவத்துல வர்ற இனக் கவர்ச்சியை காதல்னு நினைச்சு, ஒருத்தனோட பழகினா. எனக்குத் தெரியலை.

''அளவுக்கு மீறி நான் தந்த சுதந்திரம், அவளுக்கு எமனாகிடுச்சு. பாவி மக, தப்பு பண்ணிட்டா. எனக்கு தெரிஞ்சா, நான் உயிரை விட்டுடுவேன்னு அவ தற்கொலை பண்ணிக்கிட்டா.

''அதுக்குப் பிறகு, எனக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாம போயிடுச்சு. வேலையை இங்க மாத்திக்கிட்டு வந்துட்டேன். உங்களையெல்லாம் பார்க்கும்போது, என் மக ஞாபகம் தான் வருது.

''மகளை இழந்துட்டேன். எனக்குன்னு இனி வாழ்க்கையில யாரு இருக்கா... உங்களை மாதிரி மாணவிகள் தானே? என் பொண்ணு விஷயத்துல, 'லிபரலா' இருந்ததால தான், உங்ககிட்ட நான், 'ஸ்ட்ரிக்ட்'டா இருந்தேன்,'' என, வழியும் கண்ணீரை துடைத்து கொண்டார்.

சகுந்தலா டீச்சர் சொல்ல சொல்ல, ராதிகாவுக்குள், 'பளார் பளார்' என, அறைவதைப் போலிருந்தது. அவள் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

அடுத்த நாளிலிருந்து, சீக்கிரமாகவே வகுப்பிற்கு முதல் மாணவியாக வரத் துவங்கினாள், ராதிகா.

பாவம் சந்துரு... பூங்காவில் காத்திருந்து, வெறுத்துப் போனான்.

ஆர். சுமதிவாசகர் கருத்து (3)

  • M Selvaraaj Prabu - Kanjikode, Palakad,இந்தியா

    அருமை. ஒரே மாதிரி கதை கருவும், களமும் உள்ள கதைகளை பார்த்து, படித்து நொந்து போன என் போன்றவர்களுக்கு இந்த கதை ஒரு திருப்தியை தந்தது. கதை கரு பழையதனாலும் அதை எடுத்து சொன்ன விதமும் களமும் புதிது. வாழ்த்துக்கள் ஆசிரியரே

  • Govindaswamy Nagarajan - Nashville, Tennessee,யூ.எஸ்.ஏ

    மிகவும் அருமையான கதை . இதுபோல் பல விதமான கதைகளை கொடுத்தால் பல இளம் பெண்களை காப்பாற்றலாம் .

  • Prasanna Krishnan R -

    nice story

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement