Load Image
Advertisement

தீப வகைகள்!

கோவில், வீடு உட்பட எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், விளக்கு ஏற்றுவது நம்முடைய முக்கியமான சம்பிரதாயமாக உள்ளது. அப்படி ஏற்றப்படும் விளக்குகளில் எத்தனை வகை உள்ளது, அவை எங்கெங்கு ஏற்றப்படுகிறது, எந்த மாதிரியான திரியை பயன்படுத்தலாம், விளக்கு ஏற்றி வழிபடுவதால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்:

சித்ர தீபம்: நடுவீட்டில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலமிட்டு, அதன் மீது ஏற்றப்படுவது.

மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது.

ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில், உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படுவது. கார்த்திகை மாதம், சதுர்த்தி நாளில், இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

ஜல தீபம்: தீபத்தை ஏற்றி, நதி நீரில் மிதக்க விடப்படுவது.

படகு தீபம்: கங்கை நதியில், மாலை வேளையில், வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும், மிதக்க விடுவது.

சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுவது.

மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோவில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம், பவுர்ணமி அன்று, மாலை வேளையில், சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது.

அகண்ட தீபம்: மலை உச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது.

மாவிளக்கு தீபம்: அரிசி மாவில், வெல்லம் போட்டு, இளநீர் விட்டு பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து, நெய் ஊற்றி, திரி போட்டு ஏற்றுவது.

தீபத்தில், மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும், 'தீப லட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம்.

திரிகளின் வகைகள்...

பொதுவாக, பருத்தி பஞ்சு திரி கொண்டே தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இத்திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றினால், குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

* தாமரை மலரின் தண்டுப் பகுதியை வெயிலில் காய வைத்து, அதில் திரி தயார் செய்து தீபம் ஏற்றினால், முன்வினை பாவங்கள் நீங்கி, நிலையான செல்வம் வரும்.

* வாழைத் தண்டை காய வைத்து, அடித்து, பஞ்சு போலாக்கி திரி தயார் செய்து தீபம் ஏற்றினால், முன்னோர் சாபம், தெய்வ குற்றம் நீங்கி, நலமான வாழ்வு கிடைக்கும். மேலும், இது குடும்ப அமைதி, மன சாந்தி, குழந்தைப் பேறு ஆகியவற்றையும் தரும்.

* வெள்ளெருக்கம் பட்டையை ஊற வைத்து, காய வைத்து அடித்து நாறாக்கி, திரியாக திரித்து தீபம் ஏற்றி வழிபட்டால், செல்வம் பெருகும்.

* புதிய வெள்ளை நிற துணியை பன்னீரில் நனைத்து, காய வைத்து திரியாக்கி, தீபம் ஏற்றி வழிபட, அனைத்து நல்ல பலன்களும் கிடைக்கும்.

* தீபம் ஏற்றியவுடன், தீபத்தில் முப்பெரும் தேவியர் வந்து விடுவர். ஆகையால், தீபத்தின் திரியைத் துாண்டி விட்டு பிரகாசமாக்கலாம். திரியின் கசடை கீழே தட்டக் கூடாது. கையால் சுண்டி கால் படாத இடத்தில் போட்டு விடவும்.

தீபத்தை தானாக அணைய விடக்கூடாது. தீபத்தை அணைய வைக்கும்போது, வாயால் ஊதவோ, கைகளால் விசிறவோ கூடாது.

பூக்களால் அல்லது கற்கண்டால், தீபத்தின் சுடரை அணைய வைக்கலாம். சிறு குச்சியைக் கொண்டு திரியை, எண்ணெயில் அமிழ்த்தியும் அணைய வைக்கலாம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement