Load Image
Advertisement

இன்று புதிதாய்...

''அடுத்த புதன் கிழமை, என் அப்பாவும், அம்மாவும், அமெரிக்காவிலிருந்து வர்றாங்க,'' பிரகடனம் போல சொன்னாள், சுஜி.

''அதுக்கு இப்போ என்ன செய்யணும்,'' விட்டேத்தியாக பதிலளித்தான், பரசு.

''இவ்வளவு நாள், என் அண்ணனோட, நியூஜெர்சியில இருந்தாங்க. அவனும், அங்க இருக்கிற அவனோட பிசினெசெல்லாம், 'க்ளோஸ்' பண்ணிட்டு, இங்க வர, 'ஐடியா'வில் இருக்கான். அதுக்கு ரெண்டு வருஷம் ஆகும்.''

''சரி.''

''அதுவரைக்கும் என் பெற்றோரை நாம தான் பார்த்துக்கணும். வயசானவங்க, தனியா இருக்க முடியாது. நான் இதை ஏற்கனவே சொல்லியிருக்கேன்.

''நாம் ரெண்டு பேர், குழந்தை, அவங்க ரெண்டு பேர். அஞ்சு பேருக்கு, இந்த வீடு பத்தாது. பக்கத்து மெயின் ரோட்ல இருக்கிற, 'ப்ளாட்'டுக்கு நாம எல்லாரும் போயிட வேண்டியது தான்,'' என்றாள், சுஜி.

''ரெண்டு மாசத்துல, என் அப்பா, அம்மா இங்க வந்துடுவாங்க. அம்பாசமுத்திரத்துல, அப்பாவால தனியா விவசாயம் பார்க்க முடியல. என்னை, இங்க வேலையை, 'ரிசைன்' பண்ணிட்டு, அங்க விவசாயம் பார்க்க வரச்சொன்னாரு.

''நான், 'இப்போதைக்கு வர முடியாது. அங்க எல்லாத்தையும் குத்தகைக்கு விட்டுட்டு, இங்கேயே வந்துடுங்க'ன்னு சொன்னேன். அவரும் ஒரு வழியா ஒத்துகிட்டு, இங்கேயே வர்றாருன்னு சொல்லி இருந்தேனே,'' என்றான்.

பரசுவின் விளக்கத்தை கேட்கும் மனநிலையில் இல்லை, சுஜி.

''அதுக்கென்ன இப்போ?'' என்றாள்.

''என் அப்பா, அம்மா வர்றதினால, மெயின் ரோட்ல இருக்கிற, 'ப்ளாட்'டுக்கு, 'அட்வான்ஸ்' கொடுத்திருக்கறதை ஞாபகப்படுத்தறேன்னு சொல்றேன்.''

''சரி, இந்த வீட்டை காலி பண்ண வேண்டாம். உங்க அப்பா, அம்மா இங்க இருக்கட்டும். நாம, 'ப்ளாட்'டுக்கு போயிடலாம்.''

''ஏன், உங்க அப்பா, அம்மா இங்க இருக்க மாட்டாங்களா?''

அதற்கு பின், வாக்குவாதம் முற்றி, சாப்பிடாமலேயே இருவரும், தங்கள் அலுவலகம் சென்று விட்டனர்.

''இந்த வீட்டை காலி பண்ணி, சாமான் எல்லாத்தையும் புது வீட்டுக்கு கொண்டு போகணும். அடுத்த மாசத்திலிருந்து, குழந்தை அங்கிருந்து தான் ஸ்கூலுக்கு போகணும்,'' என, உறுதியாக கூறினாள், சுஜி.

''இந்த வீட்டை தான் காலி பண்ண போறதில்லையே, அப்புறம் என்ன அவசரம். எல்லாம் மெதுவா, 'ஷிப்ட்' பண்ணிக்கலாம்,'' என்றான்.

''எனக்கென்ன... ரெண்டு வீட்டுக்கும் நீங்க தான் வாடகை கொடுக்க போறீங்க.''

அத்துடன் அன்றைய குடும்ப சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இடையில், அம்பாசமுத்திரத்திலிருந்து, வீட்டு சாமான்களை ஏற்றி அனுப்பி விட்டதாக, பரசுவின் அப்பா சங்கரனிடமிருந்து செய்தி வந்தது.

''சிலதை இங்கேயே ஒரு அறையில வைச்சு பூட்டியாச்சு. வீட்டையும் வாடகைக்கு விட்டாச்சு,'' என, போனில் தகவல் சொன்னார், சங்கரன்.

இதை, சுஜியிடம் சொல்லாமல் தவிர்த்து விட்டான், பரசு.

ஞாயிற்றுக் கிழமை காலை, அவன் வீட்டு வாசலில் லாரி வந்து நின்றது. புது வீட்டுக்கு சென்று, லாரியில் இருந்த சாமான்களை இறக்கி விட்டு வந்தான், பரசு.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, வாசல் கதவை திறந்தவள், ''நான் இவ்வளவு சொல்லியும், நீங்க பாட்டுக்கு சாமான் எல்லாத்தையும் அங்க இறக்கிட்டு வந்திருக்கீங்க,'' என்றாள், சுஜி.

''சாமான்கள் மட்டும் தான் அங்க இருக்க போகுது. என் பெற்றோர், இந்த பழைய வீட்டில் தான் இருக்க போறாங்க.''

''எங்க அப்பா, அம்மா, இந்த வீட்டுக்கு வர மாட்டாங்க. புது, 'ப்ளாட்'ல தான் இருக்கப் போறாங்க,'' என்றாள், சுஜி.

''யார் வேண்டாம்ன்னா!''

'சரியான பட்டிக்காடு, ஊஞ்சல் பலகையெல்லாமா எடுத்துட்டு வர்றது. பக்கத்து, 'ப்ளாட்'ல இருக்கறவங்க என்ன நினைப்பாங்க...' என, புது, 'ப்ளாட்'டில் சுஜி புலம்பியதை கண்டு கொள்ளவில்லை, பரசு.

பரசுவின் அப்பாவும், அம்மாவும் நிலங்களின் குத்தகை மற்றும் உள்ளூர் மாரியம்மன் கோவில் திருவிழா முடிந்த பின் வருவதாக கூறினர்.

இடையில், சுஜியின் அப்பா ராமனும், அம்மாவும், அமெரிக்காவிலிருந்து வந்து விடவே, அவர்களை புது, 'ப்ளாட்'டிலேயே தங்க வைத்தாள். சுஜியும், குழந்தையும், அன்று அவர்களுடனேயே இருந்தனர். பரசு மட்டும் தனியாக பழைய வீட்டிற்கு வந்து விட்டான்.

ஊஞ்சல் பலகையை பார்த்து, ''ஆஹா, ஊஞ்சல் பலகை. இதுல ஆடி எவ்வளவு வருஷம் ஆச்சு. உடனே, கூடத்தில் மாட்டிட வேண்டியது தான். தென்காசியில நாலுகட்டு வீட்ல, நடு ஹால்ல கால வீசி வீசி...'' என, தன் சிறு வயது நிகழ்வை பகிர்ந்தார், ராமன்.

தந்தையை, முறைத்து பார்த்தாள், சுஜி.

''இந்த சுகமெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது. நீ ஒரு பட்டணத்து பைத்...''

''முழுசா சொல்லுங்க, உங்களால தான், நான் பட்டணத்துல இருக்கேன். அமெரிக்கா போயும் பட்டிக்காட்டு புத்தி எனக்கில்ல,'' என, விதண்டாவாதமாக பதிலளித்தாள், சுஜி.

வீட்டிற்கு தேவையான சாமான்கள் எல்லாம், 'ப்ளாட்'டில் இருந்ததால், ராமன் தம்பதியர் சமைத்து சாப்பிட வசதியாக இருந்தது. குழந்தையும், தாத்தா - பாட்டியிடம் ஒட்டிக்கொண்டாள்.

''நாளைக்கு, உங்க அப்பா, அம்மா, நெல்லை எக்ஸ்பிரஸ்ல வரபோறாங்களே, என்ன செய்யப் போறீங்க?'' என்றாள், சுஜி.

பதில் எதுவும் சொல்லவில்லை, பரசு.

மறுநாள் காலை கதவைத் திறந்த சுஜியின் அம்மா, ''வாங்க அண்ணா, அண்ணி,'' என்று, பரசுவின் அப்பா, அம்மாவை வரவேற்றார்.

''வாங்க சம்பந்தி, ரயில் பயணமெல்லாம் சவுகரியாமா இருந்ததா,'' சங்கரனை விசாரித்தார், ராமன்.

''பரவாயில்லை. உங்க அமெரிக்கா வாழ்க்கையெல்லாம் எப்படி இருந்தது. அங்க இருந்துட்டு இங்க வந்து இருக்கறது கஷ்டமா இல்லையா?'' என்றார், சங்கரன்.

''நீங்க வேற, எப்படா இந்தியா வருவோம்ன்னு இருந்தோம். ஆனா, தென்காசியில தான் இருக்கணும்ன்னு ஆசை. இப்போதைக்கு தென் சென்னையில இருக்கோம்,'' நகைச்சுவையாக சொன்னார், ராமன்.

பரசுவின் வீட்டில் பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தது.

''உங்க அப்பா, அம்மாவை, ஏன் புது 'பிளாட்ல' கொண்டு போய் விட்டுட்டு வந்தீங்க. அவங்க இங்கதானே இருக்கணும்.''

''இதபார், உனக்கு, உங்கப்பா, அம்மா, புது 'ப்ளாட்'ல இருக்கணும் அவ்வளவுதானே. அவங்க அங்கதான இருக்காங்க, அதோட நிப்பாட்டிக்க. இப்போ, குழந்தையை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பற வழிய பாரு. உன் சண்டை சச்சரவெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்.''

''உங்க அப்பா, அம்மா, என் பெற்றோருடன் எவ்வளவு நாளைக்கு எப்படி இருக்க போறாங்கன்னு பார்க்கலாம்.''

''நல்லா அருமையா பாரு. உன்கிட்ட இருக்கிறதை விட சவுகரியமா இருப்பாங்க.''

இப்படியே ஒரு வாரம் சென்ற நிலையில், சங்கரன் தம்பதிக்கும், ராமன் தம்பதிக்கும் நன்றாக ஒத்துபோயிற்று.

சங்கரனது பணத்தை பாதுகாப்பாகவும், லாபகரமாகவும் முதலீடு செய்வதில், சுஜியின் அப்பா ராமனது அனுபவமும், அறிவும் உதவியாக இருந்தது.

வீட்டுக்கு தேவையான பொருட்களை தரம் பார்த்து, விலையை தெரிந்து வாங்குவதில் சங்கரனது திறமை பயனுள்ளதாக இருந்தது.

சங்கரனது விவசாய அறிவு, ஆன்மிகத்தில் நாட்டம், தியானம் போன்றவை, ராமனை கவர்ந்தன.

''நீங்க இங்க பண்றத தான், யோகான்னு பேர் சொல்லி அமெரிக்காவுல லட்ச லட்சமா சம்பாதிக்கறாங்க...'' என்றார், ராமன்.

சம்பந்தியின் ஆழ்ந்த ஞானம், ராமனுக்கு பெருமையாக இருந்தது; ராமனின் யதார்த்தமான உலக அணுகுமுறை சங்கரனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

''நீங்க அமெரிக்காவுல இவ்வளவு வருஷம் இருந்தும், ஸ்லோகம் சாமி பாட்டுன்னு அத்தனையும் விடாம இருக்கீங்க,'' என, மனமாற பாராட்டினாள், பரசுவின் அம்மா.

''அண்ணி, உங்களுக்கு தெரியற விஷயத்துக்கு முன்னால இதெல்லாம் ஒண்ணுமேயில்ல. எவ்வளவு விதவிதமா சமைக்கறீங்க. நாட்டுபுற பாடல் எவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க,'' என சொல்லி, மாய்ந்து போனாள், சுஜியின் அம்மா.

இப்படி இங்கு வசந்தகால தென்றல் வீசிக்கொண்டிருந்தது. ஆனால், பரசுவின் வீட்டில் அக்னி நட்சத்திர அனல்காற்று அடித்துக் கொண்டிருந்தது.

''உங்கப்பா, அம்மா, எப்ப இங்க வரப் போறாங்க?''

அமைதியாக இருந்தான், பரசு.

''உங்ககிட்டதான் கேக்கறேன்?''

''முதல்ல கண்ணாடியை பார்த்து, இந்த கேள்வியை கேளு. அதுக்கப்பறம் எங்கிட்ட கேளு!''

''எங்க அப்பா, அம்மா இங்க ஏன் வரணும்? அவங்க அமெரிக்காவுல இருந்தவங்க. இந்த வீடெல்லாம் அவங்களுக்கு சரிபடாது. அம்பாசமுத்திரத்திலிருந்து வந்தவங்களுக்கு இந்த வீடு நல்ல வசதியா தான் இருக்கும்!''

''அமெரிக்காவாயிருந்தாலும் சரி, அம்பாசமுத்திரமாயிருந்தாலும் சரி, எது வசதி, எது வசதியில்லேங்கறதெல்லாம் அவங்கவங்க மனசைப் பொறுத்தது.''

''அப்படின்னா உங்க அப்பா, அம்மாவை இங்க வரச் சொல்லுங்க, நாம அங்க போயிடலாம்.''

மவுனமாய் இருந்தான், பரசு.

''இந்த மாசம் முடியறதுக்கு, ஒரு வாரம் தான் இருக்கு. அடுத்த மாசத்திலேர்ந்து, குழந்தை புது, 'ப்ளாட்'லேர்ந்து தான் ஸ்கூலுக்கு போகணும்.''

அன்று மாலை-

''கீழே, 'வாக்கிங்' போயிட்டு வரலாம் வாப்பா,'' என்றாள், சுஜி.

''உங்கூடயா!''

''ஏன் எங்கூட வரதுக்கென்ன?''

''இல்ல, கொஞ்ச நேரங்கழிச்சு, நாங்க நாலு பேருமே மெதுவா போயிட்டு வருவோமே,'' என்றார், ராமன்.

''இன்னிக்கு நீ மட்டும் என்னோட வா,'' என்று, அப்பாவை அழைத்தாள், சுஜி.

'வாக்கிங்' செல்லும்போது, ''அப்பா, என் மாமனார் - மாமியாரை, இப்ப இருக்கற வீட்டுக்கு அனுப்பிட்டு, நாங்க இங்க வரலாம்ன்னு இருக்கோம்?'' என்றாள், சுஜி.

''அப்படியா!''

''ஆமா, வர்ற, ஒண்ணாம் தேதியிலேர்ந்து பாப்பா, இங்கிருந்து தான் ஸ்கூலுக்கு போகணும். அதுவுமில்லாம, உங்க ரெண்டு பேரையும் பார்த்துகறதா அண்ணங்கிட்ட நான் சொல்லியிருக்கேன்,'' என்றாள், சுஜி.

''உன் சவுகரியம் போல செய்ம்மா,'' என்றார், ராமன்.

'ப்ளாட்'டிலிருந்து ஸ்கூலுக்கு போய் வரவும், பாட்டி, தாத்தாக்களுடன் இருப்பதும், குழந்தைக்கு சந்தோஷமாகவே இருந்தது. சில நாட்கள் அங்கேயே துாங்கி, அடுத்த நாள் ஸ்கூல் போவதும், குழந்தைக்கு மிகவும் பிடித்து விட்டது.

ஞாயிற்று கிழமை, பரசுவுடன், சுஜியும் வந்தாள். ஒரு முடிவுடன் சுஜி வந்திருப்பது தெரிந்தது.

''அப்பா நாங்களும் இங்க...'' என, அவள் பேச்சை முடிக்க விடவில்லை.

ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த ராமன், ''எங்க நாலு பேர்ல, ரெண்டு பேர், நீங்க இருக்கற வீட்டுக்கு போகணும். நீங்க இங்க வர்றீங்க அதுதானே. நாங்க நாலு பேரும் இங்கேயே இருந்துக்கறோம். இது எங்களுக்கு வசதியா இருக்கு.

''குழந்தை இங்கிருந்தே ஸ்கூலுக்கு போயிட்டு வரட்டும். நானோ, இல்ல உன் மாமனாரோ குழந்தையை தினமும் ஸ்கூலுக்கு அழைத்து போய் விட்டுட்டு வர்றோம். குழந்தையும் எங்களோட நல்லா ஒட்டிக்கிச்சு.

''எங்க நாலு பேருக்குமே குழந்தையோட இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த குடியிருப்புல, எங்க வயசுல நிறைய பேர் இருக்கறதால எங்களுக்கும் நல்லா பொழுது போகுது.

''பேசாம, நீங்க ரெண்டு பேரும் அங்கேயே இருந்துக்கோங்க. குழந்தை, இங்கேயும் அங்கேயும் இருக்கட்டும். உங்களுக்கு இப்ப தான் கல்யாணம் ஆச்சுன்னு நினைச்சுக்கறோம். நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா, தனி குடித்தனம் இருந்துகோங்க,'' என்றார், ராமன்.

சுஜியின் கண்களில் அனல் பறந்தது. அங்கிருந்த நாலு பெரியவர்களின் உதடுகளில் புன்னகையும், கண்களில் குறும்பும் வெளிப்படையாகத் தெரிந்தன.
ரவி சுப்ரமண்யம்வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement