Load Image
Advertisement

மானாவாரி நெல் சாகுபடி நுட்பங்கள்

ஆவணி, புரட்டாசி முதல் தை மாதம் வரை புழுதி விதைப்புக்கு உகந்த பருவம். மானாவாரிக்கு ஏற்ற அண்ணா 4 ரகம் 100 முதல் 105 நாட்கள் வயதுடையது. ஏக்கருக்கு 14.80 குவிண்டால் கிடைக்கும். டி.கே.எம் 15 ரகம் 115 முதல் 120 நாட்கள் வயதுடையது, ஏக்கருக்கு 16.80 குவிண்டால் கிடைக்கும். வறட்சியை தாங்கி வளரும். பாரம்பரிய ரகங்களான சித்திரகார், கருங்கார், ஜோதிமட்டை மானாவாரிக்கு ஏற்றவை.


நிலம் தயாரிப்பு

கோடை மழை பெய்தவுடன் நிலத்தை மூன்று முறை நாட்டு கலப்பை அல்லது ஐந்து கலப்பையால் உழுதால் களைகளின் விதைகள், சிறுகளைகள், பூச்சிகளின் கூண்டுப் புழுக்களை அழிக்கலாம். முன்பருவ மழை தொடங்கியவுடன் ஏக்கருக்கு 40 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இட்டு 2 முறை உழுதால் மண்கட்டிகள் உடைந்து நிலம் பண்பட்டு விதை முளைப்பதற்கு உதவும்.


விதை நேர்த்தியும் விதைப்பும்


ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு கரைசலை 1:1 விகிதத்தில் விதையுடன் கலந்து 16 மணி நேரம் ஊற வைத்து பிறகு நிழலில் உலர்த்த வேண்டும். இதனால் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் ஏற்படும் வறட்சியை எதிர்த்து பயிர் வளரும். ஏக்கருக்கு 30 முதல் 40 கிலோ விதையை நிலத்தில் துாவி விதைக்க வேண்டும் அல்லது நாட்டு கலப்பையால் உழுதபின் வரிசை முறையில் விதைக்க வேண்டும்.

நெல் விதைக்கும் கருவி இருந்தால் குறைந்தளவு விதையை சரியான இடைவெளியில் விதைக்கலாம்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பாக விதைத்தால் தான் அதிக வளர்ச்சி மற்றும் உற்பத்தி கிடைக்கும்.


பின்செய் நேர்த்தி

விதைக்கும் போது ஒரே இடத்தில் அதிக பயிர்கள் முளைத்திருக்கும். விதைத்த 12 முதல் 15 நாட்களுக்கு பிறகு செடிகளை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் விதைகளை துாவ வேண்டும். களை கொத்து கருவியால் கிளறிவிடுவதன் மூலம் சரியான எண்ணிக்கையில் பயிர்களை பராமரிக்கலாம்.


களை மேலாண்மை

விதைத்த 21 முதல் 27 நாட்களுக்குள் கையால் முதல் களை, 35 முதல் 42 நாட்களுக்குள் 2வது களை எடுக்க வேண்டும். ஆள் பற்றாக்குறை இருந்தால் 'பிஸ்பைரிபாக் சோடியம்' களைக்கொல்லியை பயிர் முளைத்து 2 முதல் 3 இலைகள் வந்தவுடன் ஏக்கருக்கு 100 மி.லி வீதம் தெளிக்க வேண்டும். பிறகு 45வது நாளில் ஒருமுறை கையால் களை எடுக்க வேண்டும்.


உரம் மற்றும் உரமிடுதல்


கோடையில் ஆட்டுக்கிடை அமைத்து மண்வளத்தை பெருக்கலாம். அடியுரமாக 2 டன் தொழுஉரத்துடன் 50 கிலோ சூப்பர் பாஸ்பேட், 50 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். விதைத்த 25ம் நாளில் 40 கிலோ யூரியா, 25 கிலோ பொட்டாஷ் 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரமிட வேண்டும்.


நானோ யூரியா பயன்பாடு


எதிர்பார்த்த அளவு மழை இல்லையெனில் பயிர் வளர்ச்சி குறைந்து விடும். நானோ யூரியா எனும் திரவ தழைச்சத்தை விதைத்த 25ம் நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. கலந்தும் 45வது நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மி.லி கலந்து இலைவழியாக தெளித்தால் மகசூல் அதிகரிக்கும்.


பூச்சி மற்றும் நோய் மேலாண்மை


குலைநோய், இலைப்புள்ளி நோய், பாக்டீரியாவால் இலை கருகல் போன்றவை நெற்பயிரை தாக்கும். விதைகளை திரம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியால் விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 60 கிலோ வேப்பம்புண்ணாக்கை இடுவதன் மூலம் நோய் பரவலை குறைக்கலாம்.

நோய் தாக்குதல் தென்பட்டால் ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்பெண்ணெய் கலந்தோ அல்லது 400 மி.லி. வேப்பங்கொட்டை சாறு கலந்தோ இலைவழியாக தெளித்து கட்டுப்படுத்தலாம். தண்டுத்துளைப்பான், பச்சை தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

- மகேஸ்வரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்புஅருண்ராஜ், சபரிநாதன் தொழில்நுட்ப வல்லுநர்கள்சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் தேனி, 96776 61410



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement