எல்லா ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் டெங்கு வைரஸ் பரவுவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்தை விடவும் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. கொரோனா வைரஸ் போல, இதிலும் மரபணு மாற்றம் ஏற்பட்டு உள்ளதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதில் மரபணு மாற்றம் நடக்க வாய்ப்பில்லை. பருவநிலை மாற்றம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக டெங்கு பாதிப்பு ஏற்படாத பிரான்சில் இம்முறை இருக்காது. வங்க தேசத்திலும் பாதிப்பின் தீவிரம் அதிகம்.
டெங்கு பாதிப்பை உறுதி செய்ய, வழக்கமாக செய்யப்படும் ஆன்டிபாடி பரிசோதனையில், எதிர்பணுக்கள் இருப்பது தெரிந்தாலும், இவை டெங்குவை எதிர்க்க உருவானவை தானா என்பதை உறுதி செய்ய முடியாது. பி.சி.ஆர்., ரத்தப் பரிசோதனை செய்தால், டெங்குவை உண்டாக்கும் மரபணு இருக்கிறதா என்பதை சொல்ல முடியும்.
சிகிச்சை
டெங்கு பாதிப்பிற்கென்று பிரத்யேக சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறிகளுக்கு ஏற்பவே சிகிச்சை தரப்படுகிறது. பப்பாளி இலை சாறிலிருந்து தயாரான 'கேரிபில்' மாத்திரைகளை டாக்டர்கள் சிபாரிசு செய்கின்றனர். பப்பாளி சாறு சாப்பிட்டால் டெங்கு பாதிப்பு வராது என்று பலரும் சாப்பிடுகின்றனர். இது தட்டணுக்களை அதிகரிக்குமா என்பது பற்றிய உறுதியான ஆய்வுகள் இல்லை.
தட்டணுக்கள்
டெங்கு பாதித்தால், மூன்று - ஐந்து நாட்கள் காய்ச்சல் இருக்கும். இந்த நாட்களில், உடல் வலி, தலைவலி போன்ற உபாதைகள் இருக்கலாம். ஆனால், எந்த ஆபத்தும் வராது. ஐந்தாவது நாளின் முடிவில், காய்ச்சல் சரியான பின், கவனம் தேவை. காரணம், டெங்கு பாதிப்பில் தட்டணுக்கள் குறைவது பிரதான பிரச்னை இல்லை.
டெங்கு வைரசிற்கும் நோய் எதிர்ப்பணுக்களுக்கும் நடக்கும் போராட்டத்தில், நுண்ணிய ரத்தக் குழாய்களில் சிறு துளைகள் ஏற்பட்டு, ரத்தத்தில் இருக்கும் திரவப் பிளாஸ்மா வெளியில் கசியும். வயிறு, நுரையீரலைச் சுற்றி நீர் சேரலாம். இதுதான் ஆபத்து. பலரும் நினைப்பது போல தட்டணுக்கள் குறைவது அபாயம் இல்லை.
தட்டணுக்களின் எண்ணிக்கை 10,000த்திற்கு குறைவாக இருந்தால், தட்டணுக்கள் ஏற்றினால் போதும. 50,000த்திற்கு கீழ் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில் வீட்டில் வைத்தே பராமரிக்கலாம் என்ற உலக சுகாதார மையம் கூறுகிறது.
சில டாக்டர்கள் தட்டணுக்களை அதிகப்படுத்த ஸ்டிராய்டு ஊசிகளை போடுகின்றனர். இதில் உடனடியாக தட்டணுக்கள் அதிகமாவது போல தோன்றும். அடுத்த சில நாட்களில் சிக்கல்கள் வரும். இது தவறான முறை.
நீராகாரம்
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பது தான் டெங்கு பாதிப்பில் முக்கியம். முடிந்தவரை வாய் வழியாகவே திரவ உணவுகளை குடிக்க வேண்டும். நரம்புகள் வழியே குளுக்கோஸ் ஏற்றினால், ரத்த நாளங்களில் கசிந்து, அதிக வீக்கத்தை எற்படுத்தும். நான்காவது நாளிலிருந்து, பசி உணர்வு இருக்காது. பித்தப் பையில் வீக்கம் வரலாம்.
காய்ச்சல் என்றவுடன் ரொட்டி, கஞ்சி மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதும் கிடையாது. நன்கு பசி இருந்து, சாப்பிட முடிந்தால், வழக்கமான உணவையே சாப்பிடலாம். சாப்பாட்டிற்கும் காய்ச்சலுக்கும் சம்பந்தமே இல்லை. அது போன்று குளிக்காமல் இருப்பதும் கூடாது. சுத்தமாக உடலைப் பராமரிப்பதும் முக்கியம்.
வாந்தி வரும் உணர்வு இருந்தால், கஞ்சி, சூப், ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ள பழச்சாறு குடிக்கலாம். காய்ச்சல் சரியான பின், இயல்பாக வேலைகளை செய்ய முடிந்தால், எந்த பரிசோதனையும் தேவை இல்லை. மாறாக, சோர்வு, உடம்பில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள், குறிப்பிட்ட நாட்களுக்கு முன் மாதவிடாய் வருவது, அதிக ரத்தப் போக்கு, சிறுநீர் மலத்தில் ரத்தம் வருவது, மலம் கறுப்பாக போவது, வயிறு உப்புசம், சுவாசிப்பதில் சிரமம், இவையெல்லாம் டெங்குவிற்கான எச்சரிக்கை அறிகுறிகள். இந்த நிலையில் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
டாக்டர் டி.சுரேஷ்குமார்
தொற்று நோய் சிறப்பு மருத்துவர், சென்னை. 94441 86807
வாசகர் கருத்து (3)
0 .....
நன்றி. மருத்துவம் எவ்வளவோ வளர்ந்துள்ள இந்த உலகில், பல நோய்களுக்கு மருந்து இல்லை. முடிந்த வரை நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்வது மட்டுமே நம்மால் செய்து கொள்ள இயலும் நோய் தடுப்பு. சுத்தமான, கெடுதல் தராத உணவுகளை உண்பது, மற்றும் உடல் உழைப்பு தரும் வேலைகளை அல்லது உடற்பயிற்சி செய்வது மட்டுமே எதிர்ப்பு சக்தியை வளர்க்கும்.
நன்றி ஆனாலும் ஐந்துக்கு மூல காரணம் என்ன? இன்ட்ரெய மாசு அதிகரிப்பு தான் அன்று இந்த டெங்கு எல்லாம் இல்லை கொசுக்கள் இருந்தன ஆனாலும் அவைகள் கட்டுக்குள் இருந்தன காரணம் அவைகள் வளரும் நீர் நிலைகளில் அந்த கொசுவின் மொட்டைகளி உன்னவாக கொண்ட மீன் வகைகள் இருந்தன ஆனல் இன்று உள்ள குளத்தில் மீன்களை பார்ப்பதே அரிதாகி விட்டது காரணம் நீர் மாசு படுத்தல் தொழில் சாலை கழிவுகள் மற்றும் பிற மாசுபடும் நடவடிக்கையால் இந்த வகை மீன்கள் அரிதாகி விட்டது .அரசுகள் நீர் நிலை சுத்தப்படுத்தி இந்த வகை மீன்களை வளர்க்க வேண்டும் இதன் மூல கொசுவை கட்டு படுத்தலாம் செய்வார்களா ????