'பிராமண குலத்தில் பிறந்ததால், பூணுால் போட்டுள்ளேன். சந்தியாவந்தனம் செய்கிறேன். மற்றபடி இந்த குலத்தவர் கடைப்பிடிக்க வேண்டிய எந்த நியமங்களையும் நான் செய்வதில்லை. இதற்கு என்ன தண்டனை எனக்கு கிடைக்கும்?' என்று காஞ்சி மஹா பெரியவரிடம் ஒருமுறை கேட்டேன்.
அதற்கு அவர், 'ராத்திரி, பகல் என்று எந்த நேரத்தில் யார் வந்தாலும், ஏழை, பணக்காரன், திருடன், கொள்ளை அடிப்பவன், இந்த ஜாதி, அந்த மதம் என்று எந்த வேறுபாடும் பார்க்காமல், வைத்தியம் செய்து கொண்டிரு. அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள். நீ பெரிய மகானாக இருப்பாய்' என்று ஆசீர்வதித்தார்.
இது நடந்தது 1962ம் ஆண்டு. அவரே எனக்கு ஸ்டெதஸ்கோப், ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் கருவி உட்பட கிளினிக் ஆரம்பிக்க தேவையான அடிப்படை மருத்துவ கருவிகளை வாங்கிக் கொடுத்தார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சொன்னதை அப்படியே செய்து வருகிறேன். - இப்படி சொல்லும் டாக்டர் வி.ராமமூர்த்தி, தன்னுடைய மருத்துவ சேவை அனுபவங்களை 'தினமலர்' நாளிதழுடன் பகிர்ந்து கொண்டார்.
நான் சிறுவனாக இருந்த போது, சாதுர்மாஸ்ய விரதம் அனுசரிப்பதற்காக காஞ்சி பெரியவர் எங்கள் ஊரில் மூன்று மாதங்கள் தங்கி இருந்தார்.
அவர் உடன் வந்த யானை, ஒட்டகத்திற்கு தென்னை மட்டை உட்பட தீனி போடுவது, மடம் ஊழியர்களுக்கு சமையல் செய்து தருவது போன்ற கைங்கர்யங்களை என் அப்பா செய்தார். அதனால் பெரியவருக்கு அப்பாவை தெரியும். திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமம் என் சொந்த ஊர். ஏழ்மையான விவசாயக் குடும்பம் என்னுடையது. மருத்துவக் கல்லுாரியில் சேர்வதற்கு முன்பிருந்தே, அனைவருக்கும் உதவியாக இருப்பேன்.
யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், மருந்து, மாத்திரை வாங்கித் தருவேன். கடைக்குச் சென்று மருந்து வாங்கி தந்தாலே இத்தனை நிம்மதி, மகிழ்ச்சி அடைகின்றனரே... நாமே டாக்டராகி, இவர்களுக்கு உதவி செய்தால் எத்தனை உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது.
டாக்டராக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். என்னுடைய இந்த முடிவை யாரும் ஏற்க வில்லை. 'உன்னால் முடியாது. டாக்டருக்குப் படிக்க நிறைய செலவு செய்ய வேண்டும். உன்னிடம் வசதி இல்லை. யார் தருவர்?' என்று கேட்டனர்.
ஒருவர் எனக்கு உதவுவதாக கூறுகிறார் என்றதும், 'முதலில் அப்படித்தான் சொல்வர். கடைசிவரை யாரும் உதவி செய்ய மாட்டார்கள். உன்னை தவிக்க விட்டு விடுவர்' என்றனர்.
கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன். எட்டாம் வகுப்பு வரை என் கிராமத்தில் படித்து, அரசு உதவித் தொகை பெற்று, நன்னிலத்தில் 11ம் வகுப்பு வரை படித்தேன். இறுதித் தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் இன்டர்மீடியட் முதல் ரேங்கில் தேறினேன்.
கடந்த, 1953ம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தேன். என் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஆர்.நாராயணசாமி படிப்பிற்கு உதவினார்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படித்தேன். முதலியார் சமூகத்தைச் சேர்ந்த சில பெரியவர்கள், முதுகலை மருத்துவப் படிப்பு படிக்க வைப்பதாக என்னிடம் கூறினர்.
அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சி பெற்று கல்லுாரி பேராசிரியராக இருக்கலாம் என்றும் கூறினர். எனக்கு விருப்பம் இல்லை. ஒரு துறையில் சிறப்பு பயிற்சி பெற்றால், அதன்பின் கிராமத்திற்கு செல்வது சிரமம்.
என் ஊருக்குச் சென்று ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று வைராக்கியத்தோடு சென்று விட்டேன். கடந்த 64 ஆண்டுகளாக மயிலாடுதுறையில் மருத்துவ சேவை செய்தேன். என் மகன் டாக்டர் சீனிவாசன், நரம்பியல் நிபுணர். சென்னையில் இருக்கிறார். எனக்கும் 88 வயதாகிறது. அதனால் என் மகனுடன் இருக்கலாமே என்று, ஒரு மாதத்திற்கு முன் சென்னை வந்து விட்டேன்.
இத்தனை நாட்களாக இருந்த இடத்தை விட்டு சென்னையில் இருப்பது பிடித்திருக்கிறதா என்றால், நான் பழகிக் கொண்டேன். அதுவுமில்லாமல், வாழ்க்கையில் பின்னால் திரும்பி பார்ப்பதைவிட, நேராக முன்னோக்கி பார்க்க வேண்டும் என்பது தான் என் கொள்கை.
இத்தனை காலமாக,1 ரூபாய், 2 ரூபாய் வாங்கி, என்னால் முடிந்த மருத்துவ சேவையை ஆயிரக்கணக்கானவர்களுக்கு தந்தேன். யாரிடமும் கை நீட்டி பணம் வாங்கியதில்லை.
கிளினிக்கில் ஒரு பெட்டி இருக்கும். அதில் முடிந்ததை இட்டுச் செல்வர்.
என் மனைவிக்கு எந்த விருப்பமும் கிடையாது. புடவை, நகை என்று எதுவும் கேட்டதில்லை. இத்தனை ஆண்டுகளில் நான் ஒரு கார் கூட வாங்கவில்லை.
இனி என் மகனுக்கு உதவியாக இருக்கலாமே என்று தோன்றியது. என் மகனும் என் வழியை பின்பற்றி, முடிந்தவரை சேவை மனப்பான்மையுடன் இருக்கிறார். டாக்டரான என் மருமகள் வீட்டை, குழந்தைகளை கவனிப்பதற் காக, பயிற்சியை விட்டு விட்டாள். என் மருத்துவ சேவை சென்னையிலும் தொடரும்.
டாக்டர் வி. ராமமூர்த்தி
பொதுநல மருத்துவர், சென்னை 94437 54440
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!