Load Image
Advertisement

குறுவைக்கேற்ற மாற்றுப்பயிர்த் திட்டம்

மாற்றுப் பயிர்த்திட்டம் என்பது மண்வளத்திற்கேற்ப மாறுபட்ட காலநிலைகளை சமாளித்து புதிய பயிர் வகைகளை புகுத்தி மொத்த வருமானத்தை பெருக்கும் முறை.

மாற்றுப் பயிர்த் திட்டம் என்றதும் பொதுவாக நெற்பயிருக்கு மாற்றுப்பயிர் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் நெல்லுக்கு மாற்றுப்பயிர் கிடையாது. அப்படி செய்தால் அது உணவு ஆதாரத்தை பாதிக்கும். குறிப்பாக குறுவைப் பருவத்தில் போதிய மழையின்மை மற்றும் உரிய நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் நெற்பயிர் சாகுபடி பாதிக்கப்படுவதோடு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

குறுவைப் பருவத்தின் போது குறைந்து வரும் நீர்த்தேவையை கருத்தில் கொண்டு நெல், கரும்பு, வாழை சாகுபடி பரப்பளவைக் குறைக்கலாம். மாற்றாக, குறைந்த நீர்த்தேவை உள்ள எண்ணெய் வித்துக்கள், பயறுவகைகள், பருத்தி, மக்காச்சோளம், காய்கறிப் பயிர்களை அதிக பரப்பளவில் பயிர் செய்யலாம். மொத்த சாகுபடி பரப்பில் 10-12 சதவீதம் வரை பல்லாண்டு பயிர்களான மா, சப்போட்டா, சவுக்கு, முந்திரி, கொய்யா பழ மரங்களை பராமரிக்கலாம்.


மாற்றுப் பயிர்த்திட்டத்தின் நோக்கம்

குறைந்த வயதுடைய பயிர்களில் உயர் விளைச்சல் ரகங்களை பருவத்திற்கேற்ப பயிரிடலாம். வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுள்ள பயிர்களை தேர்வு செய்ய வேண்டும். அதிக நீர்த்தேவையுள்ள நீண்ட காலப் பயிர்களை தவிர்ப்பது நல்லது. மண்வளத்தை பாதுகாக்கும் பயறுவகை பயிர்களையும் கால்நடை தீவனப் பயிர்களையும் அதிகமாகப் பயிரிடலாம்.


ஆற்றுப்பாசனத்திற்கான மாற்றுத்திட்டம்

சராசரியான மழை, நீராதாரம் கிடைக்கும் எனில் நெல் சாகுபடி செய்யலாம். நீர் வரத்து ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கால தாமதம் ஏற்பட்டால் நேரடி நெல் விதைப்பு செய்தும், குறுகிய கால நெல் ரகங்களை தேர்வு செய்யலாம். வறட்சியான மற்றும் குறைந்த மழையளவு உள்ள ஆண்டுகளில் பயறு வகைகள் மற்றும் காய்கறிகளை பயிர்செய்யலாம்.


மானாவாரிக்கான திட்டம்

மே மாதத்தில் பெய்யும் மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து களைகள் இல்லாமல் நிலம் தயாரிக்க வேண்டும். மழைநீரை சேமித்து நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்கலாம். குறுவைப் பருவத்தில் குறுகிய கால பயறுவகை, தானியப் பயிர்களை பயிரிடலாம். எள், நிலக்கடலை பயிர்களை மணற்பாங்கான நிலங்களில் சாகுபடி செய்யலாம். பசுந்தாள் உரங்களை பயிர் செய்து அதை மண்ணில் உழுவதால் மண் வளம் அதிகரிக்கும். அடுத்து வரும் சம்பா, தாளடி பருவ நெல்லின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மண்ணின் தன்மைக்கேற்ப சூரியகாந்தி, பருத்தியை தேர்வு செய்யலாம்.


திட்ட தொழில் நுட்பங்கள்

நெல் பயிரிட வேண்டிய இடங்களில் உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களைத் தேர்வு செய்து திருந்திய நெல் சாகுபடியும், நேரடி நெல் விதைப்பும் பின்பற்றலாம். மக்காச்சோளம், பருத்தி பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் வீரிய ஒட்டு ரகங்களை விதைநேர்த்தி செய்து சமச்சீர் உரமிட்டு விளைச்சலை அதிகரிக்கலாம்.

ஆற்றுப்பாசன மாற்றுத்திட்டத்திற்கு வறட்சியான ஆண்டில் ஜூன் முதல் ஆகஸ்டில் மக்காச்சோளம், பயறு வகைகள், வெண்டை,எள், பசுந்தாள் பயிர்களையும் ஆக. முதல் ஜன. வரை பயறு வகை, பருத்தி பயிர்களையும் ஜன. முதல் மே முதல் சூரியகாந்தி பயிரிடலாம். கிணற்றுப்பாசனத்திற்கான வறட்சி ஆண்டுக்கு ஆக. முதல் டிச. வரை மக்காச்சோளம், டிச. முதல் மார்ச் வரை எள் பயிரிடலாம்.

மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2017, 2018ல் மாற்றுப்பயிர்த் திட்டத்திற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் பாசிப்பயிறு (கோ 8) , எள் (டி.எம்.வி.7) மற்றும் பனிவரகு வறட்சியைத் தாங்கி நல்ல மகசூலைக் கொடுத்தது. இப்பயிர்களை மிகவும் வறட்சியான ஆண்டுகளில் பருவமழை தொடங்கும் முன் விதைத்து, கிடைக்கும் மழையைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம். தமிழகத்தில் 280 முதல் 320 மி.மீ. வரை தென்மேற்கு பருவமழை கிடைக்கிறது. இந்த மழையளவு இருந்தாலும் பாசன பகுதிகளில் நீர் திறப்பு இல்லையென்றால் பல இடங்களில் குறுவையில் விவசாயம் செய்வதில்லை. பாசனப்பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காத காலங்களில் விதைநேர்த்தி செய்யப்பட்ட பாசிப்பயறு (கோ 8), எள் (டி.எம்.வி.), பனிவரகு சாகுபடி செய்யலாம்.

- சுப்பிரமணியன் திட்டஒருங்கிணைப்பாளர்ஆதித்யன், ராகவேந்திரன் உதவி பேராசிரியர்கள்வேளாண்மைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்மதுரை - 625 104



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement