கேன்சர், கட்டிகள், உடல் கோளாறுகள், விபத்தால் ஏற்படும் எலும்பு சிதைவு, குறிப்பாக முகம், கழுத்து எலும்பு இழப்பிற்கு பின், அப்படியே விட்டு விடாமல், 'கிரேனியோ பேசியல் சர்ஜரி' எனப்படும் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை வாயிலாக, பாதிக்கப்பட்ட பகுதியை பழைய நிலைக்கு கொண்டு வருகிறோம்.
தனி நபரின் முக அமைப்பு, எலும்பு நீள, அகலத்திற்கு ஏற்ப, 'டைட்டானியம்' உலோகத்தில், சிதைந்த பாகத்தை பிரத்யேகமாக வடிவமைத்து பொருத்துகிறோம்.
மோடேபாங்க் மோடிசே, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 21 வயது இளைஞர். அவர் பிறவிக் கோளாறுடன் பிறந்தவர். இயல்பான முகத் தோற்றம் இவருக்கு இல்லை. தாடை எலும்புகள், பற்கள், மூக்கு என்று முகத்தில் உள்ள பல பாகங்கள் இல்லை. தாடை முன் பக்கமாக நீண்டு இருந்தது.
இதனால், உணவை மெல்லவோ, சுவைக்கவோ முடியாது. 21 வயது வரையிலும் திரவ உணவு மட்டுமே தரப்பட்டது. பள்ளி செல்ல முடியாமல், சக வயதினருடன் பழக இயலாமல் பல சமூக பிரச்னைகள் அவருக்கு இருந்தன. அங்கிருக்கும் டாக்டர்கள் வாயிலாக இவரைப் பற்றி தெரிந்தது. நேரில் சென்று பார்த்தேன். அவரின் பிரச்னைகள் புரிந்தன.
மறு சீரமைப்பு செய்ய முடியுமா என்று அவரின் குடும்பத்தினர் என்னை கேட்டனர். அவரின் முக அமைப்பை 'சி.டி., ஸ்கேன்' செய்து எடுத்து வந்து, அதை வைத்து, '3டி' எனப்படும் முப்பரிமாண முறையில், இந்த முகத்தை இயல்பாக எப்படி மாற்றியமைக்கலாம் என்று, 'வெர்ட்சுவல் சர்ஜிக்கல் பிளானிங் சாப்ட்வேர்' உதவியுடன் திட்டமிட்டோம்.
நோயாளியின் குறை என்ன, எப்படி சரி செய்யலாம், மறுசீரமைப்பு செய்த பின் முகம் எப்படி இருக்கும் என்று முழு விபரமும் இந்த தொழில்நுட்பத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு, காட்சிகளாக பார்க்க முடியும். இதனால் துல்லியமாக முக சீரமைப்பு செய்யலாம்.
தென் ஆப்ரிக்காவில் இருந்த மோடேபாங்க் மோடிசேவை வரவழைத்து, முதல் கட்டமாக 10 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, அவரின் மூக்கு, தாடை, முக அமைப்பை செயற்கையாக மாற்றியுள்ளோம். பல் மருத்துவரின் உதவியோடு செயற்கை பற்களும் பொருத்தப்பட்டு உள்ளது. எந்த சுவையும் தெரியாமல், உயிர் வாழ வேண்டிய தேவைக்காக மட்டும் திரவ உணவுகளை 21 ஆண்டுகளாக சாப்பிட்டவர், இன்று சாதம், பருப்பு, கேக் என்று திட உணவுகளை சாப்பிடத் துவங்கியுள்ளார்.
ஒவ்வொருவரின் எலும்பும் தனிப்பட்ட நீள, அகல அமைப்பில் இருக்கும். தனிநபரின் தேவைக்கு ஏற்ப டைட்டானியத்தில், 3டி தொழில்நுட்பத்தில் செய்து பொருத்துகிறோம். இதற்கென்றே இருக்கும் பிரத்யேக குழுவில் நான்கு டாக்டர்கள், 11 பொறியாளர்கள் உள்ளனர்.
செயற்கை எலும்புகள் பொருத்திய பின், இயல்பாக வாழ முடியும். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த தொழில்நுட்பத்தில் அரசு மருத்துவமனை உட்பட, 1,000 பேருக்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து, செயற்கை எலும்பை பொருத்தியுள்ளோம்.
அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள், தங்கள் நோயாளியின் சி.டி., ஸ்கேன் உட்பட தேவையான பரிசோதனை ரிப்போர்ட்டுகளை அனுப்பினால், முக, இடுப்பெலும்பு அல்லது உடலின் எந்த பாகத்தில் இருக்கும் சிதைந்த எலும்பை மறுசீரமைப்பு செய்ய தேவை என்றாலும், அதை துல்லியமாக செய்து தருகிறோம்.
டாக்டர் என்.ஜான் நேசன்,
முக சீரமைப்பு மருத்துவர்,
சென்னை
63011 23938
drjohn@ctars.in
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!