சைனஸ் பிரச்னை ஒருமுறை வந்து விட்டால், வாழ்நாள் முழுதும் இருக்கும் என்பதெல்லாம் தவறான அபிப்ராயம். காரணத்தை கண்டறிந்து சிகிச்சை செய்தால், நிரந்தரமாக நிவாரணம் கிடைக்கும்.
மூக்கடைப்பு, மூக்கில் இருந்து நீர் வடிவது, தும்மல், சளி, தொண்டையில் புண், தலைவலி போன்றவை பொதுவான அறிகுறிகள். மூக்கில் இருந்து நீர் வடிவதை நிறுத்த தேவையான ஆன்டிபயாடிக் மருந்துகளை ஐந்து நாட்கள் தர வேண்டும். இதில் சரியானால் அப்படியே விட்டுவிடலாம். திரும்பவும் வந்தால், வேறு ஆன்டிபயாடிக் மருந்துகளை தருவோம்.
அதிலும் சரியாகவில்லை என்றால், 'எண்டோஸ்கோபி, சி.டி., ஸ்கேன்' பரிசோதனைகள் தேவைப்படும்; 15 நிமிடங்களில் சோதனை முடிந்து விடும்.
அதில், மூக்கின் தண்டு வளைந்து இருப்பது, மூக்கின் வழியாக திறக்கும் சைனஸ் துளை அடைபட்டு இருப்பது, எலும்பு வளைந்து இருப்பது உட்பட என்ன காரணத்தால் சைனஸ் பிரச்னை என்பது தெளிவாகி விடும். சி.டி., ஸ்கேன் எடுத்தால் எவ்வளவு துாரம் சைனஸ் பாதிப்பு உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மூக்கைச் சுற்றி நான்கு சைனஸ் அறைகள் உள்ளன. இவற்றில்ஏதாவது ஒன்றோ அல்லது நான்கோ பாதிக்கப்படலாம். சைனஸ் பகுதியில் உள்ள எலும்பு வளைந்தோ, அடைபட்டோ இருந்தால், சளி வெளியில் வராமல், உள்ளேயே அடைத்துக் கொள்ளும்; நீண்ட நாட்கள் அப்படியே இருப்பதால் தொற்று ஏற்படும்.
இந்த சோதனைகளில் மருந்து மட்டுமே போதுமா, அறுவை சிகிச்சை தேவையா என்பதும் தெரிந்து விடும். வளரும் போதே எலும்பின் அமைப்பில் ஏற்படும் மாற்றம் தான் பிரச்னைக்கு காரணம். அடிக்கடி தலை குளிப்பது, 'ஏசி'யில் இருப்பது, ஒவ்வாமை போன்றவை இந்தப் பிரச்னையை துாண்டி விடும் காரணிகள்.
இதை கவனிக்காமல் அப்படியே விடுவதால், காதில் வலி, தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு, சைனஸ், கண்களுக்கு இடையில் மெல்லிய எலும்பு தான் இருக்கும்.
இந்த எலும்பின் வழியாக தொற்று கண்களுக்கு சென்று சீழ் பிடிக்கலாம். கண்களுக்குள் அழுத்தம் அதிகமாகி, நரம்புகள் பாதிக்கப்படும். வலி, வீக்கம் இருக்கும். சரியான நேரத்தில் சிகிச்சை செய்யாவிட்டால், பார்வை இழப்பு, கேட்கும் திறனை இழப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
ஐந்து வயதிற்கு மேல், எந்த வயதிலும் சைனஸ் பாதிக்கலாம். குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளர்வது, மூக்கின் உள்ளே பின்புறம் திசுக்கள் வளர்ச்சி பெரிதானால், சைனஸ் அறிகுறிகள் சேர்ந்து வரும். சளி வெளியில் வராமல் தடுக்கும்.
டாக்டர் சுந்தர் கிருஷ்ணன், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர், சென்னை. 95000 40702
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!