அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...
என் வயது, 14; பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன். வகுப்பில், ஒரு தகவலை அறிந்தேன். அதாவது, 'குயில்கள் தங்களது முட்டைகளை, காகத்தின் கூட்டில், திருட்டு தனமாய் போட்டு விடும். குயில்களின் முட்டைகளை அடைகாத்து, காகங்கள் குஞ்சு பொரிக்கும்...' என கூறினார் என் உயிரியல் ஆசிரியர்.
குயில்களின் இது போன்ற செயல் துர்நடத்தையா... அதற்கு என்ன காரணம்... எனக்கு புரியும்படி விளக்கி சொல்லுங்க ஆன்டி...
இப்படிக்கு,
ஆர்.முகமது தவுபீக்.
அன்பு மகனே...
இந்திய காகத்தின் விஞ்ஞானப் பெயர், 'கார்வஸ் ஸ்பெலன்டென்ஸ்' என்பதாகும். குயில்களின் அறிவியல் பெயர், 'யூடிநமிஸ் ஸ்கோலோபேசஸ்' எனப்படும்.
காகத்தின் ஆயுள், 13 ஆண்டுகள். அவற்றின் குரல் நாரசமாய் காதுகளை கரகரவென அறுக்கும். குயில்களின் குரல் மிக இனிமையாக இருக்கும்.
காகங்கள் சுறுசுறுப்பானவை. உணவை கூட்டத்துடன் பகிர்ந்து கொள்ளும்.
குயில்கள் சோம்பேறித்தனம் மிக்கவை. அவை தனக்காக கூட்டை கட்டாது; முட்டைகளையும் தானே அடையும் காக்காது.
குயிலை ஆங்கிலத்தில், 'பாரசைட்டிக் பறவை' என்பர். தன் இனத்தை, பிறர் உழைப்பில் பெருக்கும் தன்மை உடைய பறவை.
ஒரு பருவத்தில், காகம் சராசரியாக ஆறு முட்டைகளை இடும். அவை இளம் நீல பச்சை நிறத்தில் காணப்படும். எடை, 12 கிராம் வரை இருக்கும்.
குயிலின் முட்டை இளம் சாம்பல் பச்சை நிறமாக இருக்கும்.
காகங்கள் கூடு கட்ட இரண்டு வாரம் வரை ஆகும். கூடு கட்டிய பின் தொடர்ந்து, ஆறு நாட்கள் முட்டை இடும். அடைகாத்து, 18 நாட்களில் குஞ்சு பொரிக்கும்; குஞ்சுகளை பராமரிக்க, நான்கு வாரங்கள் எடுத்துக்கொள்ளும். காகக்குஞ்சுகள், 38 நாட்களில் பறக்க கற்று கொள்ளும்.
அக்கா குயில், தவிட்டுக் குருவி கூட்டில் முட்டையிடும். சுடலைக்குயில், கேப் புல்புல் என்ற பறவை கூட்டில் முட்டையிடும். பிரைன் பீவர் வகை குயில்கள், பாக்சர் பறவை கூட்டில் முட்டை இடும்.
காகத்தின் ஒரே கூட்டில் குயில் முழுவதுமாக முட்டைகளை இட்டு விடாது. ஒரு கூட்டில், ஒரு முட்டையை தான் இடும். சில நேரங்களில், தன் கூட்டில் முட்டை இட வரும் குயிலை கொத்தி விரட்டி விடும் காகம்.
காகங்கள், ஜோடியாகவோ அல்லது கூட்டமாகவோ கூட்டை காவல் காக்கும். காகத்தின் தாக்குதலிருந்து தப்பிக்க குயில்கள் மரத்தோடு மரமாக பதுங்கி கொள்ளும்.
குயில் முட்டையிடுவதை நேரடியாக பார்க்கா விட்டால், முட்டைகளின் எண்ணிக்கை தெரியாமல், அனைத்தையும் அடைகாத்து குஞ்சு பொரிக்கும் காகம்.
குயில்களின் செயலைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன...
சுய உழைப்பில் சம்பாதித்து, சொந்த வீடு கட்டி, பத்து மாதம் சுமந்து குழந்தை பெற்று, அவர்களை ஆளாக்க வேண்டும் என்பதே... இந்த பாடத்தை, காகத்தின் கூட்டில் முட்டையிடும் குயிலை பார்த்து தெரிந்து கொள். வாழ்க்கை இனிமையாக அமையும்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!