Load Image
Advertisement

அதிமேதாவி அங்குராசு - வளம் காக்கும் வனம்!

வளம் அற்றதாக ஒதுக்கப்பட்ட கட்டாந்தரை கடும் உழைப்பால், மரங்கள் நிறைந்த வனமாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரியை ஒட்டியது பூந்துறை கிராமம். இங்கு, கட்டாந்தரையாக இருந்த, 100 ஏக்கர் பரப்பில் மரங்கள், செடிகள், கொடிகள் வளர்த்து வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஆரண்யா வனம் மற்றும் சரணாலயம் என அழைக்கப்படுகிறது.

இந்த காடு பற்றி பார்ப்போம்...

புதுச்சேரி அருகே பூஞ்சேரி கிராமத்தை ஒட்டி, 50 ஏக்கர் நிலத்தை ஆரோவில் நிர்வாகம் வாங்கியது. அதே பகுதியில் பயனற்று கிடந்த நிலத்தை காடு வளர்ப்புக்காக, தமிழக அரசு ஒதுக்கியது. கரடு முரடான இதில், சில பனை மரங்கள் மட்டும் இருந்தன. அந்த பகுதியை, உலர் வெப்ப மண்டல வகை காடாக்கும் திட்டம் தீட்டப்பட்டது.

நிலம் வளமின்றி இருந்ததை கண்டறிந்தனர் மண்ணியல் நிபுணர்கள். மண் வளத்தைப் பெருக்க, மழைநீரை சேமிப்பதே சிறந்த வழி. இதற்காக, ஆங்காங்கே வரப்புகள் அமைக்கப்பட்டன.

இதனால், அங்கு பெய்யும் மழைநீர் வெளியேறாமல் தடுக்கப்பட்டது. அந்த தண்ணீர் தேங்கி பூமிக்கடியில் சென்றதும் மண்ணில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. சுற்று வட்டாரப் பகுதியில், நீர் வளம் பெருகியது. கட்டாந்தரையில் புல், பூண்டுகள், சிறிய தாவரங்கள் முளைத்து பசுமையாக படர்ந்தது.

தொடர்ந்து, இந்த பகுதியில் இயல்பாக வளரும் தாவர விதைகள் சேகரிக்கப்பட்டன. அவை, விதைக்கப்பட்டன. கன்றுகளாக்கியும் நடப்பட்டன. அவை, செழித்து வளர துவங்கின. கடினமான உழைப்பால் தற்போது, மரம், செடி, கொடிகள் என, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்ந்துள்ளன. அவை அடர்ந்து பசுமை போர்த்திய வனமாகி விட்டது.

இது, உலர் வெப்ப மண்டல காட்டு வகையை சேர்ந்தது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு, உலகில் பல தாவரங்கள் அழிந்து விட்டதாக பட்டியலிட்டுள்ளது. அப்படி கருதப்பட்டவற்றில் சில இங்கு உள்ளன.

இந்த வனத்தில்...

* சேராங்கொட்டை, சப்போட்டாவின் தாய் மரமான கணுபலா, மலைப்பூவரசு, செம்மரம், கருங்காலி, வேங்கை, துரிஞ்சை போன்ற அபூர்வ மர வகைகள் வளர்ந்துள்ளன

* அபூர்வமான மாங்குயில், பச்சைப்புறா, கொண்டலாத்தி, அமட்டகத்தி உள்ளிட்ட, 240 பறவையினங்கள் இங்கு வாசம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது

* முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, மரநாய், நரி, தேவாங்கு, உடும்பு, எறும்புத்தின்னி, புனுகு பூனை, நட்சத்திர ஆமை மற்றும், 20 வகை பாம்பு இனங்களின் வசிப்பிடமாக உள்ளது. இங்கு வெப்ப அளவு மிகவும் குறைவாக உள்ளது. இது பல்லுயிரினங்கள் பெருக வாய்ப்பாக உள்ளது. புவி வெப்ப மயமாதல் பிரச்னையை இது போன்ற காடுகள் தீர்க்கும்.

இந்த பகுதியில், பெரிய ஓடை ஒன்று உள்ளது. இதை பாதுகாத்து, பொருத்தமான இடங்களில், உரிய மரங்கள் வளர்த்து அற்புத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அருகே பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு மையம் உள்ளது.

காட்டை பார்வையிட பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் வருகின்றனர். அவர்களுக்கு சூழல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. காட்டை பராமரிக்கும் பயிற்சியும் தரப்படுகிறது. இயற்கை பற்றி அறியவும், ஆய்வு செய்யவும் துாண்டுகிறது இந்த வனம்.

வரப்புகள், சிறிய நீர்த்தேக்கம் மற்றும் நீர் கசிவு குட்டைகளால் தான் இந்த காடு உருவாகியுள்ளது. நிலத்தடியில் நீர் சேமிக்கப்படுவதால் மண் வளம் பெறுகிறது. இது பல்லுயிரினங்கள் பெருக வாய்ப்பாக உள்ளது. உயிரினங்களை காடு மட்டுமே காக்கும்.

கற்றுத்தரும் காடு!

ஆரண்யா வனம் உருவாக, வாழ்வை அர்ப்பணித்துள்ளார் சரவணன். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். குடும்பத்தினருடன் வனத்திலே தங்கியுள்ளார். ஆரோவில் வல்லுனர்களின் ஆலோசனையுடன் கடின உழைப்பால், 25 ஆண்டுகளில் இதை உருவாக்கி சாதித்துள்ளார்.

அவர் கூறியது:

இந்த பூமி வருங்கால தலைமுறையினருக்கானது. இதில், இயற்கை வளங்கள் பெருகினால் தான் சிறப்பாக வாழ முடியும். அதற்கு, இது போன்ற காடு வளர்ப்பதே சிறந்த வழி.

காடு எப்போதும் கற்றுத்தந்து கொண்டே இருக்கும். மரங்களும் அவற்றின் இலை வடிவங்களும், மலர்களும், கனிகளும் பருவ மாற்றங்களை நினைவூட்டும். புதுமை நிறைந்தபடியே இருக்கும்.

இந்த காட்டில் ஒவ்வொரு உயிரினத்தையும் அறிவேன். அவற்றிடம் கற்றுக் கொண்டே இருக்கிறேன். இங்கு வரும் மாணவ, மாணவியருக்கும் அவற்றை கற்றுக்கொடுக்கிறேன். கடின உழைப்பால் எதையும் உருவாக்க முடியும் என எடுத்துக்காட்டுகிறது இந்த காடு.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement