சமூக வலைதளங்களில் துரித உணவுகளை 'சீலியாக் புட்' என்று தவறாக புரிந்து, தகவல்களை பரிமாறுகின்றனர். பலரும் அது பற்றி கேட்கின்றனர். இவ்வகை உணவைக் குறைத்தால், செரிமானம் தொடர்பான கோளாறுகள் வராது என்றும் தவறாக புரிந்து கொள்கின்றனர்.
நம் நாட்டில் ஹரியானா, பஞ்சாப் என்று குறிப்பிட்ட சில மாநில மக்களுக்கு, குளுட்டன் உள்ள தானியங்களை, குறிப்பாக கோதுமை சாப்பிடும் போது, மரபியல் ரீதியில் சில செரிமானக் கோளாறுகள் வருகின்றன.
குளுட்டன் என்பது தானியங்களில் உள்ள ஒருவித புரதம். 'பார்லி, ஓட்ஸ்', கோதுமையில் அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட மரபணுவில் கோளாறு உள்ளவர்களுக்கு இதை சாப்பிடும் போது, நம் உடலுக்கு ஒத்து வராத புரதம் இது என்று நினைக்கும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, அதற்கு எதிராகச் செயல்படுகிறது. இதற்கு, 'ஆட்டோ இம்யூன் டிசீஸ்' என்று பெயர். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரவரின் மரபணுவிற்கு ஏற்ப பல உடல் கோளாறுகள் வருகின்றன. குறிப்பாக, சவுராஷ்டிரா மக்கள் மத்தியில் ரத்த சிவப்பணுக்கள் குறைவால் தலசீமியா என்ற நோய் வருகிறது. இதன் அறிகுறிகளாக வயிற்றுப் போக்கு, செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். சிறுகுடலில் உறிஞ்சப்படும், சாப்பிடும் உணவின் சத்துக்கள், உணவு சரியாக செரிமானம் ஆகாததால் அப்படியே வெளியேறுகின்றன.
இதனால், ஊட்டச்சத்து குறைபாட்டில் இரும்புச் சத்து குறைவதால், 'வைட்டமின் பி12' குறையும். கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து குறைந்து, உடல் எடை குறைய ஆரம்பிக்கும். நம்மில் சிலர், சப்பாத்தி சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது என்று சொல்வர். இது சீலியாக் தொடர்பானது இல்லை. தொடர்ந்து பழக்கத்தில் இல்லாத உணவை சாப்பிடுவதால் வரும் கோளாறு இது. அதிக அளவில் வெளியில் சாப்பிடுவதால், வேறு விதமான செரிமானக் கோளாறுகள் வரலாம்.
கொரோனா தொற்றுக்கு பின், ஐ.பி.டி., எனப்படும் 'இரிட்டபிள் பவல் டிசீஸ்' என்ற வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, எடை குறைதல், இரும்புச் சத்து குறைபாடு, சாப்பிட்டவுடன் மலம் கழிப்பது போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இதனால், உணவு குழாயின் உட்புறம் சுருங்கி விடுகிறது. இது, மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். இதுவும் ஆட்டோ இம்யூனாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
டாக்டர் பி.மகாதேவன்,
ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர், சென்னை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!