ஆசிய கண்டத்திலேயே, ஒரே கல்லில் செய்யப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலை, கோவை, புளியங்குளத்தில் உள்ளது.
இந்த சிலையின் உயரம், 19 அடி, அகலம், 11.5 அடி. இது, சூரிய காந்த கல்லில் செய்யப்பட்ட சிலை என்பது சிறப்பு. 'தேவேந்திர பிள்ளையார்' என, அழைக்கப்படுகிறார்.
பொதுவாக, கருங்கல்லில் மூன்று வகை உண்டு. முதல் வகை, சூர்ய காந்த கல். இந்த வகை கல், சூடாக இருக்கும். இதில், சிவன், காளி, துர்கை, வீரபத்திரர் மற்றும் அம்மன் ஆகிய, உக்கிர தெய்வங்களின் சிலைகள் செய்யப்படும்.
சந்திரகாந்த கல், குளிர்ச்சியாக இருக்கும். இதில், பெருமாள், பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, புத்தர் உள்ளிட்ட அமைதியான சுபாவம் கொண்ட கடவுளர் சிலைகள் செய்யப்படும்.
சூடும், குளிர்ச்சியும் இல்லாதது, அலிக்கல். இது, சுவாமி சிலை செய்ய பயன்படாது.
பொதுவாக, கல்லை தட்டினால் ஓசை வரவேண்டும். அப்படி ஓசை வரும் கல்லில் தான் கடவுளின் சிலைகளை செய்வர்.
கோவை, புளியங்குள பிள்ளையார், சூரியகாந்த கல்லில், கைதேர்ந்த, 10 சிற்பிகளை கொண்டு, சுமார், 190 டன் எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளார். துதிக்கை வலதுபுறமாக இருக்கும். வலம்புரி விநாயகரான இவருக்கு, நெற்றிக்கண் இருப்பதால், 'முக்கண் பிள்ளையார்' என்றும் அழைக்கப்படுகிறார்.
குண்டலினி சக்தியின் அடையாளமாக, இவர் வயிற்றைச் சுற்றி, பெரிய நாக பாம்பு (நாக அணி) உள்ளது. நாக தோஷம் உள்ளோர், இந்த பிள்ளையாரை வழிபட்டுச் சென்றால், அவர்களின் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். வலக்காலை ஊன்றி, இடக்காலை நீட்டி, அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
கோவை நகரின் மத்தியில் உள்ள இந்த கோவிலில் உள்ள விநாயகரை, புதிதாக தொழில் துவங்குபவர்கள், புதிய வாகனம் வாங்குபவர்கள் வழிபட்டால், நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!