Load Image
Advertisement

உரிமை!

தனலட்சுமிக்குள் உண்டான தவிப்பு, இப்போது பெரும் பாறாங்கல்லாய் உருவெடுத்து நெஞ்சில் ஏறி அமர்ந்திருந்தது. காலையில் ஆரம்பித்த படபடப்பு, இரண்டு மணிநேரம் ஆகியும் இன்னும் குறையவில்லை.
ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கப் போன சசிரேகா, இன்னும் வரவில்லை.
இரண்டு தெரு தள்ளியிருக்கும் ஏ.டி.எம்., போய் வர, இத்தனை நேரமா என, படபடப்பு இருந்தது. இருப்பினும், வந்ததும் அவளை எதிர்கொள்ள தைரியம் இல்லாததால், வராமலேயே எங்காவது இருந்துவிட்டு மெதுவாக வந்தால் போதும் எனத் தோன்றியது.

ஏன் வரவில்லை. நேராக அம்மா வீட்டிற்குப் போய் விட்டாளா... அங்கே போய் உட்கார்ந்து கொண்டு கை கொட்டி சிரிக்கிறாளா?
இந்நிலையில், அவளால் எப்படி சிரிக்க முடியும். எத்தனை பெரிய இழப்பு அவளுக்கு? என்னை நக்கல் செய்து, அவளால் சிரிக்க முடியுமா?
சிரிக்க முடியாவிட்டாலும், என்னைப் பற்றி கேலியாக பேசாவிட்டாலும், எத்தனை இழப்புகள் இருந்தாலும் அதையும் மீறி அவளுடைய மனம் நினைக்காதா?
'மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் தாலியறுக்க வேண்டும்...' என்ற, மாமியாரின் வன்மம் இங்கே இருக்கிறதே... அதைப்போல், 'புருஷன் செத்தாலும் பரவாயில்லை. மாமியார் தன் காலில் விழ வேண்டும்...' என, மருமகள் மனம் மட்டும் நினைக்காதா?
ஏன் நினைக்காது, பழி வாங்க காத்திருக்கும் மனம், சமயம் பார்க்காதா... அந்த சமயத்தை சந்தர்ப்பம் உருவாக்கித் தந்து விட்டதே... அவள் மன ஓட்டம், 'இனிமே இந்த கிழவி என்கிட்டத்தான் கை நீட்டி காசு வாங்கணும்...' என்று தானே இருக்கும்.
இதை நினைத்து நினைத்து தான், கூனிக் குறுகிப் போனாள், தனலட்சுமி.
ஒருபக்கம், 'ச்சே... பெத்த புள்ளையே போயிட்டான். இனிமே எனக்கு என்ன பெரிய மானம், அவமானம் வேண்டி இருக்கிறது...' என, எண்ணினாள்.
அதுவும், ராணி போல் வாழ்ந்தவளுக்கு... ஆட்சி அதிகாரத்தை தன் கையில் வைத்திருந்தவளுக்கு... கஜானாவின் சாவியை தன் இடுப்பில் சொருகி இருந்தவளுக்கு... மருமகளாக இருந்தாலும், அவளிடம் கை நீட்டி காசு வாங்க வேண்டும் என்றால், அது எப்படி இருக்கும்; அதுவும் தனக்கு உரிமையான ஒன்றை?
ஒரே நொடியில் எல்லாம் தலைகீழாக மாறிப் போய் விட்டதே. விதிதான் இப்படி திருப்பிப் போட்டு விட்டதா?
கீழிருந்த கை மேலாகவும், மேலிருந்த கை கீழாகவும் மாறியது விதியா? இல்லை, கடவுள் எனக்கு கொடுத்த தண்டனையா?
இப்போது, மருமகளின் ஒரே எதிரியாக, அவள் எதிரே நிற்பதைப் போல் இருந்தது. அதுவும் நிராயுதபாணியாக.
அன்றைக்கு அவளும் அப்படித்தானே நின்றாள். அதுவும், கணவன் என்ற பெரிய பாதுகாப்பு இருந்தும்!
நினைவுகள் அவள் விரும்பா விட்டாலும் புரண்டோடியது. அவள் வெற்றிப் புன்னகையுடன் சிரித்த நிமிடங்களெல்லாம், இப்போது, புரையோடிய புண்ணைக் கிளறுவதைப் போலிருந்தது.

கண்ணாடி எதிரே கேசத்தை சீர் செய்து கொண்டிருந்த உத்தமனிடம், 'என்னங்க...' என்றாள், சசிரேகா.
'சொல்லு சசி...'
'எனக்கு, 500 ரூபாய் வேணும்...'
'எதுக்கு?'
'ப்ளவுஸ் எடுத்து, தைக்க கொடுக்கணும்...'
'சரி, அதுக்கு ஏன் என்னைக் கேட்கற?'
'ம்... உங்களைக் கேட்காம பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட போயா கேட்கறது?' என்றாள் எரிச்சலாக.
'உனக்கு ரொம்ப கொழுப்புத் தான். என்கிட்ட ஏன் கேட்கற, அம்மாக்கிட்ட போய் கேட்க வேண்டியது தானேன்னு சொன்னேன்...'
'நான் எதுக்கு உங்கம்மாக்கிட்ட போய் கேட்கணும்?'
'வீட்டோட வரவு, செலவையெல்லாம் அம்மா தானே பார்த்துக்கறாங்க...'
'அதுக்காக, என் தேவைகளுக்கு நான் எப்படி அவங்ககிட்ட போய் கை நீட்றது? நானும் பலமுறை உங்களுக்கு சொல்லிட்டேன். உங்க அம்மாக்கிட்ட உங்களோட சம்பளப் பணத்தை எதுக்கு அப்படியே கொடுக்கறீங்க... எனக்கும் நிறைய செலவிருக்கும்ல, எனக்குன்னு கொஞ்சம் பணம் கொடுங்களேன்...' என்றாள்.
'முழு சம்பளத்தையும் அம்மாக்கிட்ட கொடுத்து தான் பழக்கம். இப்ப, திடீர்னு அதிலேர்ந்து பணத்தை எடுத்துட்டு கொடுத்தா, அம்மா என்ன நினைப்பாங்க... பொண்டாட்டி வந்ததும், மாறிட்டான்னு நினைக்க மாட்டாங்களா?'
'நினைக்கட்டுமே. அப்ப, என் செலவுக்கு என்ன பண்றதாம்?'
'நீ, அம்மாக்கிட்ட கேட்டு வாங்கிக்க...'
'என்னால முடியாது. நீங்க, என் புருஷன். உங்களோட சம்பாத்தியத்தை எடுத்து செலவு பண்ற உரிமை எனக்கும் உண்டு. எனக்கு அவங்கக்கிட்ட போய், 100 ரூபாய், 200 ரூபாய் கொடுங்கன்னு கை நீட்டி நிற்க அசிங்கமாயிருக்கு...' என்றாள், சசிரேகா.
'ஈகோன்னு சொல்லு...'
'அப்படித்தான் வச்சுக்கங்களேன். என் புருஷனோட பணத்தை இன்னொருத்தங்கக்கிட்ட கை நீட்டி கெஞ்சி வாங்கறது, எனக்கு சுயமரியாதையில சூடு வைக்கிற மாதிரி இருக்கு. எனக்குன்னு தனியா கொஞ்சம் பணம் கொடுத்துடுங்க. வாசல்ல பூக்காரி வந்தா, ஒரு முழம் பூ வாங்கக் கூட, என்கிட்ட காசு இல்லை. அசிங்கமாயிருக்கு...' என்றாள்.
'சாரி, சசி... என்னால அப்படி உனக்கு தனியா பணம் தர முடியாது. உனக்கு வேண்டிய பணத்தை அம்மாக்கிட்ட நீ கேட்டு வாங்கிக்க...' என்றான்.
கையில் வைத்திருந்த புடவையை துாக்கி எறிந்துவிட்டுப் போனாள், சசி.
லேசாக திறந்திருந்த கதவு வழியே அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த, தனலட்சுமி, உதட்டைப் பிதுக்கி இளக்காரமாக சிரித்தாள்.
'அடியேய்... இந்த வீட்ல, என்னை மீறி எதுவும் நடக்காதுடி. என்கிட்ட பணம் கேட்க உனக்கு தன்மானம், தடுக்குதா? என்கிட்ட கையேந்தி தான் நீ வாழணும்...' என, மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

சசிரேகாவின் நடவடிக்கையையே கவனித்து வந்ததால், இன்னொரு நாள் இதை கேட்க நேர்ந்தது.
செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்த உத்தமனுக்கு காபியை கொடுத்தவாறே, 'என்னங்க...' என்று ஆரம்பித்தாள், சசிரேகா.
'ம்... சொல்லு!'
'நான் வேலைக்குப் போகலாம்ன்னு இருக்கேன்...'
'இப்ப, நீ வேலைக்குப் போகணும்ன்னு
என்ன அவசியம்?'
'வேலைக்கு எதுக்குப் போவாங்க? பணத்துக்காக தான்...'
'இப்ப, இந்த குடும்பத்துல என்ன அதிகப்படியான பணத்தேவை வந்துட்டுது?'
'குடும்பத்துக்கு பணத்தேவை இல்லாம இருக்கலாம். கை செலவுக்கு எனக்கு பணம் வேணும்...'
'உன் செலவுக்கு, யாரு பணம் இல்லைன்னு சொன்னது?'
'ஒவ்வொரு முறையும் உங்க அம்மாக்கிட்ட போய், அஞ்சுக்கும், பத்துக்கும் நிக்கறது எனக்கு பிடிக்கலை. படிச்சிருக்கேன், கல்யாணத்துக்கு முன் வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிச்சுக்கிட்டுத் தானே இருந்தேன். இப்ப நான் எதுக்கு மத்தவங்க கையை எதிர்ப்பார்க்கணும்?'
ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த தனலட்சுமிக்கு பகீரென்றிருந்தது.
'இவள் வேலைக்கு போய், சொந்தமா நாலு காசு சம்பாதித்தால் அவ்வளவு தான். என்னை, 10 காசுக்கு மதிக்க மாட்டாள். காலம் முழுவதும், என்னிடம் கை நீட்டி, காசு வாங்க வேண்டும், இவள்...' என, மனதில் வெறித்தனமாக சிந்தித்தாள்.
'சசி, நீ வேலைக்குப் போறதைப்பத்தி எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை. ஆனா, அம்மா சம்மதத்தோட போ...' என்று, எழுந்துப் போய் விட்டான்.
பத்ரகாளியை போல் அவதாரம் எடுத்தாள், சசிரேகா. ஆனால், பாய்ந்து யாரையும் குத்தி குதறி குடலை கிழிக்க முடியவில்லை. விஷயம், தனலட்சுமியிடம் வந்த போது, 'வேலைக்குப் போகக் கூடாது...' என்று, கண்டிப்புடன் சொல்லி விட்டாள்.
சசிரேகா கையில் நாலு காசு வந்துவிடக் கூடாது என நினைத்தாள், தனலட்சுமி. ஆனால், இப்போது, விதி எல்லா காசையும் அவள் கையில் எடுத்து போய் குவித்து விட்டது.

சாதாரண காய்ச்சல் என்று படுத்தான், உத்தமன். தொடர்ந்து அந்த தொற்று, இந்த தொற்று என நீண்டு, நுரையீரல் பழுதாகி, 'கேன்சர்' என்று சொல்லி, இரண்டே மாதத்தில் சிகிச்சை பலனின்றி, மூச்சு திணறி இறந்தான்.
பெரிய இடி தான். மீண்டு எழ, வெகு நாட்கள் ஆனது. எழுந்த போது தான் தெரிந்தது, எல்லாம் கை மாறி விட்டது என்று.
மகனுக்கு வரவேண்டிய அத்தனை பணமும், சசிரேகாவின் பெயரில், வங்கியில் டெபாசிட் ஆகியிருந்தது.
மாதா மாதம் வரவேண்டிய வட்டி பணமும், அவள் கணக்கில் தான் வந்தது. அவள் எடுத்து வந்து,
சோறு போட்டால் தான், இவள் சாப்பிடலாம்
என்ற நிலை.
மகன் போனது ஒரு பக்கம் பெரிய இடி என்றால், அதைவிட பெரிய இடி, இது தான். அவனுக்கான பணத்துக்கு சொந்தக்காரி நீ இல்லை என்ற உண்மை, தனலட்சுமியின் ஆணவத்தை, அதிகாரத்தை வேரோடு அசைத்து விட்டது.
மகன் இருக்கும் வரை, அவன் கொண்டு வந்து தன்னிடம் தரும் பணத்தை, மிக கர்வமாக வாங்கி செலவழித்ததும், இன்று, தன் செலவிற்கு மருமகளை எதிர்ப்பார்த்து நிற்கும் நிலைமை வந்ததும், அவளை குத்திக் குதறியது.

இந்த மாதத்திற்கான பணத்தை எடுக்கப் போயிருக்கிறாள்,
சசிரேகா.
என் மருந்து, மாத்திரை செலவுகளுக்கு அவளிடம் கையேந்த வேண்டுமா? எப்படி கேட்பேன், இப்படி ஒரு நிலைமை ஏன் எனக்கு? அவமானம் பிடுங்கித் தின்றது. ஒரு முழக் கயிற்றில் தொங்கி விடலாம் போலிருந்தது.
பணத்தை எடுத்து வரும் அவள், என்னை எப்படிப் பார்ப்பாள்?
'பைத்தியக்காரி, அன்னைக்கு எல்லா பணத்தையும் கையில வச்சுக்கிட்டு என்னை பிச்சைக்காரி மாதிரி நடத்துனியே... உண்மையில் அவருடைய பணத்திற்கெல்லாம் நான் தான் சொந்தக்காரி...'
என, எகத்தாளமாகப் பார்ப்பாளா?
அவமானத்தில்
அவள் சுருண்டு கொண்டிருக்கும் போதே கேட்டைத் திறந்து உள்ளே வந்தாள், சசிரேகா.
அவளை எதிர்கொள்ளும் சக்தி இல்லாமல், பூஜை அறைக்குள் சென்று, ஒளிந்து கொள்ள முயன்றாள், தனலட்சுமி.
''அத்தை...'' சசிரேகாவின் குரல் இழுத்து நிறுத்தியது.
அவள் திரும்பும் முன், பக்கத்தில் வந்து நின்றிருந்தாள், சசிரேகா.
''அத்தை... இந்தாங்க உங்க மகனோட பணம்,'' என, தனலட்சுமியின் கையில் பணத்தை வைத்ததுமே, கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.
''சசி...'' தனலட்சுமியின் குரல் தடுமாறியது.
''அத்தை... அவர், ஒவ்வொரு மாசமும் சம்பளம் வாங்கிட்டு வந்து மன நிறைவோட உங்க கையில தருவார். நீங்களும் மனசு பூரா பெருமையும், பூரிப்புமா வாங்கிப்பீங்க. அந்த நிறைவும், பூரிப்பும், எப்பவும் அவர் இல்லைன்னாலும் இந்த வீட்ல இருக்கணும்,'' என, சசிரேகா சொல்ல சொல்ல, மருமகளை கட்டியணைத்து கதறினாள், தனலட்சுமி.

- ஆர். சுமதி



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement