அன்புள்ள பிளாரன்ஸ்...
நான், 26 வயதான இளைஞன். ஒரு பிளாட்டை, வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியிருக்கிறேன். எனக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். இன்னொரு நேரு மாமா ஆக விருப்பம். ஆனால், எங்கள் குடியிருப்பில், குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்க முயன்றாலோ, கொஞ்சி விளையாட முயன்றாலோ, குழந்தைகள் என்னை முறைத்து, ஓடி விடுகின்றனர்.
தாய்மார்களும், தங்கள் குழந்தைகளை துாக்கி பதுங்கி விடுகின்றனர். ஏன் இப்படி அற்பதனமாக நடந்து கொள்கின்றனர். இது பற்றி விளக்கம் தாருங்கள்.
இப்படிக்கு,
ஆர்.மணிமாறன்.
அன்பு சகோதரருக்கு...
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த, ஐந்து ஆண்டுகளில், 250 சதவீதம் கூடியிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 4,155 குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில், 15 நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒரு குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறது. குழந்தைகள், உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, வாய் வார்த்தைகள் வழியாக, மன ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாசார ரீதியாக துன்புறுத்தப்படுகின்றன. இதை தடுக்க, மத்திய அரசு போக்சோ சட்டத்தை, 2012ல் அறிமுகப்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை, 1098 அல்லது 04365 - 224998 அல்லது 14417 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
உறவுக்கார ஆண்களையே நம்ப முடியாத காலத்தில், அந்நிய பிரம்மச்சாரி ஆணை தாயும், குழந்தைகளும் எப்படி நம்புவர்... அவர்கள் உன் விஷயத்தில், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது தான்.
நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என, தொடுதல்களை குழந்தைகள் வகை பிரிப்பதற்கு பதிலாக, முற்றிலும் தொடுதலையே அனுமதிக்காமல் இருப்பது உத்தமம்.
உன் போன்ற ஆண்களுக்கு சில அறிவுரைகள் கூற விரும்புகிறேன்...
* குழந்தைகளுக்கு ஏதேனும் இனிப்போ, பரிசு பொருளோ அளிக்க விரும்பினால், பெற்றோரின் அனுமதியுடன் கொடுப்பது நல்லது
* எந்த பெண் குழந்தையையும், கையில் எடுத்து கொஞ்சாதீர்
* எந்த ஆணாவது குழந்தையிடம் தவறாக நடக்க முயற்சிப்பதை பார்த்து விட்டால், அதை பெற்றோர், காவல் துறையிடம் புகார் செய்யுங்கள்
* இளைஞர்கள் தகுந்த வயதில், திருமணம் செய்து கொள்ள வேண்டும். தங்கள் சொந்த குழந்தைகளை கொஞ்சுவதை யார் தடுக்க முடியும்
* ஒவ்வொரு ஆணும், குழந்தைகள் துஷ்பிரயோகத்துக்கு எதிரான மன தெளிவை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்
* குழந்தை திருமணம், வீட்டுக்கு உள்ளேயும், பள்ளிக்குள்ளேயும் குழந்தைகளின் மீதான வன்முறைகள், குழந்தைகள் கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்கள், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத உலகை அனைவரும் சேர்ந்து நிர்மாணிப்போம்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!