Load Image
Advertisement

இது உங்கள் இடம்!

உறவுகள் பிணைந்திருக்க...
எனக்கு தெரிந்தவரது குடும்பத்தின், மூத்த சகோதரர், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று, நகரத்தில் குடும்பத்தோடு வசிக்கிறார். விவசாய வேலை செய்து, குடும்பத்தோடு கிராமத்தில் வசிக்கிறார், அவரது தம்பி.

அண்ணன் குடும்ப விசேஷங்களுக்கு, மனைவி, மகன், மருமகளோடு, முன்கூட்டியே வந்து, ஓடியாடி வேலை செய்வார், தம்பி. ஆனால், தம்பியின் வீட்டு விசேஷங்களுக்கு, அண்ணன் மட்டுமே வந்து விட்டு, உடனே புறப்பட்டு விடுவார்.

தம்பியிடம், 'உன்னையும், உன் குடும்பத்தாரையும் மதிக்காத, அண்ணன் குடும்பத்தை, நீயும் புறக்கணித்து, அவர்களின் விசேஷங்களுக்கு போகாமல் இருக்கலாமே...' என்று கூறுவர், ஊர் மக்கள்.

மெல்லிய சிரிப்பை உதிர்த்து, 'ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்களாக இருப்பினும், கோடி ரூபாய் கொடுத்தாலும், பிறவி குணத்தை மாற்றிட முடியாது. படிப்பு, பதவி, வசதி, பழக்க வழக்கங்கள் என, பல்வேறு சூழல்களால், ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவது சகஜம்.

'அதற்காக, உறவுகள் இல்லையென்று ஆகிவிடாது. ஏதாவது காரணத்தை முன்வைத்து, பிரிந்திருக்கும் உறவுகள் இணைய பார்க்கணுமே ஒழிய, வறட்டு கவுரவம் பார்த்து, பிரிவது நியாயமில்லை.

'கத்தரித்து பிரிப்பது கத்தரியின் இயல்பு; பிரிந்ததை இணைப்பது ஊசியின் இயல்பு. அண்ணன் குடும்பத்தார், கவுரவம் பார்த்து, கத்தரியாய் உறவை பிரிக்க நினைத்தாலும், நாங்கள், கவுரவம் பாராமல், ஊசியாய் உறவை இணைக்கவே எண்ணுகிறோம்...' என்றார்.

உறவுகள் பிணைந்திருக்க, அவரின் கருத்தே சரி. நாமும் இதை பின்பற்றி, உறவுகளில் கவுரவம் பாராமல் இருக்கலாமே!

-வடிவேல் முருகன், நெல்லை.

மொபைல் போனுக்கு இன்ஷூரன்சா... கவனம்!
என் நண்பர், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய மாடல் மொபைல் போனை வாங்கினான். அப்போது, கடையில் இருந்தவர், 'மொபைல் போன் டிஸ்பிளேவுக்கு இன்ஷூரன்ஸ் இருக்கு சார்... டிஸ்பிளே உடைந்தாலோ, பழுதானாலோ, இலவசமாக மாற்றித் தருவோம். அதற்கு ஒரு ஆண்டு இன்ஷூரன்ஸ் தொகை, வெறும், 600 ரூபாய் தான்...' என்றார்.

நண்பரும், 600 ரூபாயை கட்டி விட்டார்.

மறு மாதமே அந்த மொபைல் போன் கை தவறி விழுந்து, டிஸ்பிளே உடைந்து விட, அதை மாற்றித் தர சொன்னபோது, 500 ரூபாய் கேட்டிருக்கிறார், அந்த நபர்.

'எதற்கு...' என்றதற்கு, 'டிஸ்பிளே, 2,300 ரூபாய். அதற்கு நீங்கள் பணம் தரவேண்டாம். டிஸ்பிளேயை மொபைல் போனில் பொருத்தி தருவதற்கு கூலி, 500 ரூபாய்...' என்று கூறியுள்ளார்.

'டிஸ்பிளேயை என்னிடம் கொடுத்து விடுங்கள். எனக்கு தெரிந்த கடையில் பொருத்திக் கொள்கிறேன்...' என்றார், நண்பர்.

'எங்கள் இன்ஷூரன்ஸ் கம்பெனி விதிப்படி, நாங்கள் தான் பொருத்தி தருவோம். அதற்கு நீங்கள் கூலி, 500 ரூபாய் கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு சம்மதித்து தான் நீங்கள் கையெழுத்து போட்டிருக்கிறீர்கள்...' என்று சொல்லி, இன்ஷூரன்ஸ் விண்ணப்பத்தை காட்ட, அதிர்ந்து விட்டார், நண்பர்.

சரியாக படித்துப் பார்க்காமல், கையெழுத்து போட்டதை எண்ணி, நொந்து போனார், நண்பர்.

எந்த ஒரு இன்ஷூரன்ஸ் ஆனாலும் முழுமையாக படித்து, சந்தேகங்களை கேட்டு, தெளிவு பெற்ற பின், பணத்தை முதலீடு செய்யுங்கள், நண்பர்களே!

அ. பேச்சியப்பன், ராஜபாளையம்.

வியாபாரத்தோடு சேவை!
சமீபத்தில், அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நண்பரின் தந்தையை, நலம் விசாரித்து வர சென்றேன்.

நண்பரின் தந்தை, தேநீர் கேட்டதால், மருத்துவமனை காம்பவுண்டுக்குள் இருந்த கடைக்கு சென்று, டீ கேட்டேன்.

'உள்ளேயா, வெளியேவா...' என்று கேட்டார்.

'இது என்ன, சீட்டு விளையாட்டு போல உள்ளே, வெளியே என்கிறீர்...' என்றேன்.

'உள்ளே, என்றால், நோயாளிகளுக்கு, மூலிகை தேநீர். வெளியே என்றால், அவர்களின் பாதுகாப்பாளர்களுக்கும், பார்வையாளர்களுக்குமான தேநீர்.

'மேலும், நோயாளிகள், பால் கலந்த தேநீர் அருந்துவதை விட, துளசி, ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, புதினா, கொத்தமல்லி, கொய்யா இலை மற்றும் முருங்கைக் கீரை போன்ற பல்வேறு மூலிகைகளால் ஆன தேநீர் அருந்துவதே நல்லது. அவற்றை தயாரித்து தருவதை, சேவையாக செய்து வருகிறேன்...' என்றார்.

சேவை மனப்பான்மையுடன் செயல்படும் டீ கடைக்காரரை, மனதார வாழ்த்தி வந்தேன்.

ஆர். செந்தில்குமார், மதுரை.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement