Load Image
Advertisement

பிரம்மச்சாரியின் மகள்!

மன நிறைவுக்கு ஒரு தெய்வம் என்றால், சந்தோஷி மாதாவைக்கு குறிப்பிடுகின்றனர், வடமாநில மக்கள்.

எந்த வீட்டில் சகோதரர்களால், சகோதரிகள் நன்றாகக் கவனிக்கப்படுகின்றனரோ, அந்த வீட்டில் மட்டுமே மன நிறைவு இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. இதற்கு உதாரணமாக, சந்தோஷி மாதாவுக்கு கோவில் எழுப்பி, வழிபடுகின்றனர். இவள், ஒரு பிரம்மச்சாரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகரை தமிழகத்தில் பிரம்மச்சாரியாக கருதுகிறோம். ஆனால், வட மாநிலங்களில், சித்தி, புத்தி என்ற துணைவியருடனும், சுபம், லாபம் (சுப், லாப்) என்ற ஆண் குழந்தைகளுடனும், சந்தோஷி என்ற பெண் குழந்தையுடனும் அவர் அருள்பாலிக்கிறார்.

சந்தோஷியின் வரலாறு சுவையானது...

ஒருமுறை, தேவலோகத்தில் ரக் ஷா பந்தன் விழா நடந்தது. சகோதரர்கள், தங்கள் சகோதரிகளின் கையில் ரக் ஷை எனும் பாதுகாப்பு கயிறு கட்டி, பரிசுகளை வழங்கினர். சகோதரிகளின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

இதை விநாயகரின் பிள்ளைகளான சுபம், லாபம் சகோதரர்கள் வேடிக்கை பார்த்தனர். தங்களுக்கும் ஒரு சகோதரி இருந்தால், அவளையும் இப்படி மகிழ்ச்சிப்படுத்தி இருக்கலாமே என்ற ஏக்கம் அவர்களுக்குள் எழுந்தது. இந்த சமயத்தில் கலகக்காரரான, நாரதர் அங்கு வந்தார்.

குழந்தைகளின் வாடிய முகத்தைக் கண்டு, அதற்கான காரணத்தைக் கேட்க, தங்கள் ஏக்கத்திற்கான காரணத்தை கூறினர்.

'இவ்வளவு தானா விஷயம். உங்களுக்கும் ஒரு சகோதரி கிடைப்பதற்கான நேரம் வந்து விட்டது. என்னோடு வாருங்கள்...' என, விநாயகரிடம் அழைத்துப் போனார்.

'குழந்தைகளே, இவருடன் உங்களுக்கென்ன வேலை. இவர் சரியான கலகக்காரர் ஆயிற்றே...' என, நாரதரை கேலி செய்தார், விநாயகர்.

நாரதரும் அதை ரசித்தார்.

'விநாயகரே, கலகம் செய்ய இங்கு நான் வரவில்லை. இந்தக் குழந்தைகளின் கலக்கம் தீர்க்க இங்கு வந்துள்ளேன்...' என்று சொல்லி, குழந்தைகளின் விருப்பத்தை தெரிவித்தார்.

'அதற்கென்ன ஏற்பாடு செய்தால் போயிற்று...' என்ற விநாயகர், தன் அருகிலிருந்த சித்தி, புத்தியை பார்த்தார். அவர்கள் நாணத்தில் தலை குனிந்தனர்.

உடனே, தாய் பார்வதி, அத்தை லட்சுமி, கல்வித்தாய் சரஸ்வதி ஆகியோரை வரவழைத்தார், விநாயகர். அவர்கள், நடந்ததை அறிந்து, சித்தி, புத்தியின் உடலிலிருந்து திரட்டிய சக்தியைக் கொண்டு, ஒரு பெண் குழந்தையை உருவாக்கினர்.

சந்தோஷப்பட்டனர், சகோதரர்கள். சந்தோஷம் தர வந்தவளுக்கு, சந்தோஷி என பெயரிட்டனர். இவளை வணங்க உகந்த நாள் வெள்ளிக்கிழமை.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து, 10 கி.மீ., துாரத்திலுள்ள, லால்சாகர் என்ற ஊரில், சந்தோஷி மாதாவுக்கு கோவில் உள்ளது. இங்குள்ள சிலை மிகவும் பழமையானது.

சகோதரிகளின் வாழ்வு சிறக்க நினைக்கும் சகோதரர்கள், இங்கு ஒருமுறை வந்து செல்லலாம்.
தி. செல்லப்பா



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement