இருபத்தி மூன்று வயது பெண்ணிற்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டு அழைத்து வந்தனர். அதிக உடல் எடை இல்லாமல் இயல்பாகவே இருந்தார். அவரின் ரத்த சொந்தங்களில் இவ்வளவு சிறிய வயதில், இதுவரையிலும் இப்படி ஒரு பிரச்னை யாருக்கும் வந்ததில்லை என்றும் சொன்னார்கள்.
கொரோனா தொற்றுக்கு பின், இதயத்தில் மட்டுமல்ல; உடல் முழுதும் உள்ள ரத்தக் குழாய்களில் சுருக்கம், அடைப்பு, அழற்சி போன்ற பாதிப்புகளை அதிகம் பார்க்க முடிகிறது.
கொரோனா வைரஸ் தான் காரணமாக இருக்கலாம் என்பது கணிப்பாக இருந்தாலும், உறுதி செய்ய எந்த தரவுகளும் நம்மிடம் தற்போது இல்லை. பெரிய அளவில் ஆராய்ச்சி செய்தால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.
செயற்கை வால்வு பொருத்தியவர்கள், ரத்த உறைவை தடுக்கும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டாலும், தொற்றுக்கு பின், மூச்சு திணறலோடு நிறைய பேர் வருகின்றனர். சோதனையில், செயற்கை வால்வின் உள்ளே ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது.
இளம் வயதினருக்கு எதிர்பாராமல் மாரடைப்பு வரலாம். முதன்முறையாக வரும் போதே அறிகுறிகள் தீவிரமாக இருக்கலாம். ஆனால், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், மார்பு பகுதியில் லேசாக வலி இருந்து, வாயு பிரச்னை என்று அலட்சியம் செய்திருப்பர். மருத்துவ அறிவியலைப் பொறுத்த வரை, வாயு என்றால் வயிறு, குடல் சம்பந்தமானது. உடல் முழுதுக்கும் செல்லாது. ஆனால், எதை எடுத்தாலும் வாயு தொல்லை என்று சொல்வது நம்மிடம் சகஜமாக உள்ளது.
மாரடைப்பு வந்துவிட்டால், எவ்வளவு சீக்கிரம் மருத்துவ சிகிச்சை தருகிறோமோ, அந்த அளவு தசைகளை காப்பாற்றலாம். இதய தசைகளுக்கு ரத்த ஓட்டம் செல்லாவிட்டால் செயலிழந்து, தழும்பாகிவிடும். ஆரோக்கியமான இதயத்திற்கு ஒரே வழி உடலுழைப்பு தான். உடம்பு எப்போதும் சோம்பேறித்தனமாக இருக்கவே கூடாது. தனியாக உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், குறைந்த அளவு உணவு சாப்பிட்டு, நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதிக அளவில் கீரைகள், பழங்கள், நட்ஸ் சாப்பிடலாம்.
காபி, கிரீன் டீ குடிப்பது நல்லது என்று பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அவர்கள் சொல்வது நாம் தினசரி குடிக்கும் காபி இல்லை. பால், சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய இருப்பதால், ரத்த ஓட்டத்திற்கு நல்லது. ரத்தக் குழாய் அடைப்பை தடுக்கும்.
நாள் முழுதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டிய சூழலில் தனியாக நேரம் ஒதுக்கி, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, தசைகளுக்கான 'ஸ்ட்ரெச்சிங்r பயிற்சி அவசியம் செய்ய வேண்டும்.
டாக்டர் கார்த்திகேயன்,
இதய அறுவை சிகிச்சை நிபுணர்,
ஓமந்துாரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை,சென்னை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!