சிகரெட் பழக்கத்தால் கேன்சர், இதய நோய்கள், ரத்த நாளக் கோளாறுகள், பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, கண் நோய்கள், காசநோய் அபாயம், வயிற்றுப் புண் தொடர்பான சிக்கல்களுடன், சில வகை சிறுநீரகக் கோளாறுகள் வருவதும் தெரிய வந்துள்ளது.
சிகரெட் தயாரிப்பதற்கான மூலப்பொருள் புகையிலை. இதில் உள்ள நச்சுத் துகள்கள், வேதிப் பொருட்கள், புகைப்பவர்களையும், அருகில் இருப்பவர்களையும், அடுத்த தலைமுறையையும் பாதிக்கும். சுற்றுச்சூழலையும், மரபியல் மாற்றம் வாயிலாக விலங்குகளையும், தாவரங்களையும் கூட பாதிக்கிறது. 4,500 விதமான நச்சுப்பொருட்கள் உள்ள சிகரெட்டை, எத்தனை குறைவாக புகைத்தாலும் பாதிப்பு ஒரே மாதிரி தான் உள்ளது.
இவற்றில், நுரையீரல், வாய், குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள், ரத்தம் என, அனைத்து உறுப்புகளிலும் கேன்சரை உண்டாக்கும் 68 வகையான நச்சுப் பொருட்கள் உள்ளன. மரபணுவின் அமைப்பையே மாற்றும் திறன், சிகரெட்டில் உள்ள நச்சு ரசாயனப் பொருட்களுக்கு உள்ளன.
ஆரோக்கியமான செல்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இவை, கேன்சர் பாதிப்பிற்கு முந்தைய சிறு கட்டிகளை, பெருங்குடலில் உருவாக்குகிறது. இது, மலக்குடல் கேன்சராக மாறுகிறது.
கடந்த 2020ல் எடுத்த புள்ளி விபரப்படி, புகையிலை பொருட்களின் பயன்பாடு, கேன்சர் பாதிப்பை ஆறு மடங்கு அதிகரிக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் சிகரெட் பிடிக்கும் போது, ரத்தத்தில் கலக்கும் நச்சு மற்றும் வேதிப் பொருட்களை, சிறுநீரகங்கள் வடிகட்டி வெளியில் அனுப்புகின்றன. சிறுநீரகங்களில் படியும் இந்த நச்சுத் துகள்கள் கேன்சரை உண்டாக்குகின்றன.
புகைப்பதால் வரும் கேன்சருக்கு சிகிச்சை செய்தாலும், சிகிச்சைக்கு முழு பலன் கிடைக்காத நிலையும் உள்ளது. மற்ற கேன்சரைப் போல இல்லாமல், இதில் பாதிப்பு மீண்டும் வருவதும், வெகு சீக்கிரமே மற்ற உறுப்புகளுக்கு பரவும் தன்மையும் அதிகமாக உள்ளது. மற்றவர்களை விடவும் சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு கேன்சர் வரும் அபாயம் 10 மடங்கு அதிகம்.
சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் உடனடியாக அதை விட முயற்சி செய்வது, நல்ல பலன் தரலாம். முதலில் நிகோடினுக்கு மாற்றாக உள்ளதை உபயோகித்து, சிறிது சிறிதாக முற்றிலும் தவிர்க்க முயற்சிக்கலாம்.
உலகம் முழுதும் உள்ள ஆய்வில், எவ்வளவு விரைவாக சிகரெட் பழக்கத்தை விட்டு விட்டு, தினசரி உடற்பயிற்சி, யோகா, தியானம், 'ஆன்டி ஆக்சிடென்ட்' அதிகம் உள்ள உணவுகள் என்று எவ்வளவு விரைவாக ஒழுங்குமுறைக்கு திரும்புகிறோமோ, அத்தனை விரைவாக சிதைந்த செல்கள் புதுப்பிக்கப்பட்டு, ஆரோக்கியமானதாக மாறுவது தெரிய வந்துள்ளது.
டாக்டர் என்.தினகரன்,
முன்னாள் பேராசிரியர்,
குடல், இரைப்பை துறை,
அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனை,
சென்னை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!