முதலில் யாருக்கு போன் செய்யலாம் என்று யோசித்த சாரதா, மருமகள் வித்யாவை அழைத்தாள்.
''நல்லாயிருக்கியா?''
''இருக்கேன் அத்தை...''
''எப்ப கிளம்பற?''
''நாளைக்கு காலையில...''
''கார், 'புக்' பண்ணிட்டேன்; இன்னைக்கு புறப்பட்டு நான் அங்க வரேன்.''
''எதுக்கு அத்தை, உங்களுக்கு தேவையில்லாத வீண் அலைச்சல். நீங்க வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப் போறதில்ல. பிரியறதுங்கிறதுல இரண்டு பேரும் உறுதியா இருக்கோம்...'' இறுகிய குரலில் பேசினாள், வித்யா.
''இருக்கட்டும்மா. நான் வர்றது உன்னை பார்க்கறதுக்கு. உனக்கும், என் மகனுக்கும் ஒத்துப் போகலை; அது வேற விஷயம். அம்மா வீட்டிற்கு போன பின், சந்தர்ப்பம் கிடைக்குமான்னு தெரியல.
''காலேஜுக்கு இரண்டு நாள், 'லீவு' சொல்லிட்டேன். என்னைப் பொறுத்தவரை, மரியாதையுடன் ஒரு நல்ல மருமகளா இந்த ஒரு வருஷம் எங்க குடும்பத்தில் இருந்திருக்கே. வந்து பார்த்தால் தான் மனசு திருப்திப்படும்,'' என்றாள், சாரதா.
அடுத்து மகன் ரவிக்கு போன் செய்ய, ''என்னம்மா இது, உனக்கென்ன பைத்தியமா. அவளே, 'உன்னோடு என்னால் சேர்ந்து வாழ முடியாது'ன்னு கிளம்புறா. இந்த நேரத்துல நீ ஏன் இங்க வரணும். அதான் இரண்டு பேரும், விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடிவு பண்ணிட்டோம்,'' என்றான்.
''சரிப்பா, எனக்கு தான் எல்லாத்தையும் முன்கூட்டியே சொல்லிட்டியே... ரெண்டு மாசம் கர்ப்பமா இருக்கான்னு தெரியும். மனசு கேட்கல, நான் வந்து பார்த்துட்டு வரேன்,'' என்றாள், சாரதா.
''அப்புறம் உன் இஷ்டம், இங்க வந்து எங்களைச் சேர்த்து வைக்கலாம்ன்னு நினைக்காதே. அது கனவிலும் நடக்காது,'' உறுதியாக சொன்னான், ரவி.
ரவிக்கு மூன்று வயது இருக்கும்போது, அதிகமான குடிப்பழக்கத்தால் கல்லீரல் கெட்டு, உயிரை விட்டார், அவனது அப்பா. படித்த படிப்பு கை கொடுக்க, காலேஜில் லெக்சரராக வேலை பார்த்து, தனி மனுஷியா நின்று, ரவியை வளர்த்து, ஆளாக்கினாள், சாரதா.
சென்ற ஆண்டு தான், ரவிக்கும், வித்யாவுக்கும் திருமணம் நடந்தது. சாரதாவுக்கு வேலை கோயம்புத்துாரில். சென்னையில் வேலை காரணமாக, வித்யாவுடன் அங்கு குடித்தனம் நடத்தினான், ரவி.
பிரியமாகத் தான் நடந்து கொண்டாள், வித்யா. ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இருவரிடமும், சின்னச் சின்ன விரிசல், கோபமாக விஸ்வரூபமாகி, ஒருமனதாகப் பிரிந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
இன்றைய தலைமுறைக்கு விவாகரத்து என்பது, சர்வ சாதாரணம். அதில் பெரியவர்கள் தலையிட முடியாது. எங்க வாழ்க்கையை நாங்க தான் தீர்மானிக்கணும். ஒதுங்கிப் போவதைத் தவிர வேறு வழியில்லை. மனதில் குழப்பமும், கவலையும் சூழ, அதை ஒதுக்கி வைத்து, ஊருக்குப் புறப்பட்டாள், சாரதா.
''அத்தை, வாங்க!''
வரவேற்ற வித்யாவின் முகத்தில் சோர்வு, மசக்கையாக கூட இருக்கலாம்.
''ரெண்டு மாசம் முடிய போகுதா, வித்யா?''
''ஆமாம் அத்தை, இனி இவன் தான் எனக்கு துணை. என் வாழ்க்கையின் பிடிப்பே மகன் தான்!''
சிறிது நேரம் அவளை உற்றுப் பார்த்து, ''இந்த மாதிரி சமயத்துல எப்படி உன்னால இப்படியொரு முடிவு எடுக்க முடிஞ்சது?''
''வேற வழியில்லை, தினமும் போராட்டமாக வாழ பிடிக்கலை. எதற்கெடுத்தாலும் கோபம், சண்டை. அவர் சம்பாத்தியத்தில் நான் வாழறேன்னு இளக்காரம். என்னாலும் முடியும் அத்தை,'' என்றாள்.
''சரிம்மா, உன்னை கஷ்டப்படுத்த விரும்பல. அது உன் இஷ்டம். இப்ப கர்ப்பமா இருக்கியே, அதப்பத்தி ரவி எதுவும் சொல்லலையா?''
''யார், உங்க பிள்ளையா? 'நீயே வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். அப்புறம் நீ எப்படி போனா எனக்கென்ன'ங்கிற மாதிரிதான் நடந்துக்குறாரு. நான் மாசமாக இருப்பதை அவர் பெரிதாகவே நினைக்கல. சரி விடுங்க, காபி போடவா, அத்தை?''
''இருக்கட்டும்மா, நான் ரவியை பார்த்துட்டு வரேன்.''
மாடி ஏறி, மகன் இருக்கும் அறையினுள் நுழைந்தாள்.
''அம்மா... வந்ததும், மருமகளைப் பார்த்துட்டியா... என் மேல குறையா சொல்லி இருப்பாளே... சுத்த வேஸ்ட். அம்மா, இவளோடெல்லாம் என்னால வாழ முடியாது; வாழ்க்கையே நரகமாகிடும். அதுக்கு ஆரம்பத்திலயே பிரியறது பெட்டர்.
''என்னம்மா மவுனமா இருக்கே, ஏதாவது சமாதானம் பேசலாம்ன்னு நினைச்சா, சுத்தமா மறந்துடு. கவலைப்படாத, பரஸ்பர விவாகரத்து. ஆறு மாதத்தில் விவகாரத்து கிடைச்சுடும். அப்புறம் பார்க்கலாம்,'' என்றான்.
எவ்வளவு சர்வ சாதாரணமாக சொல்கிறான்.
''இப்ப அவ, மாசமா இருக்கா, ரவி. அதைப் பத்தி யோசிச்சியா?''
''இதுல யோசிக்க எதுவும் இல்ல. என்ன வேணும்ன்னாலும் முடிவு பண்ணிக்கட்டும். அவ விஷயத்தில் இனி நான் தலையிடப் போறதில்ல. சுதந்திரமா வாழணும்ன்னு நினைக்கிறா. விவாகரத்து வாங்கிட்டு, அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழட்டும். என் வாழ்க்கையை நரகம் ஆக்காமல் போனால் சரி,'' என்றான்.
''சரிப்பா, நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன்,'' என்றாள்.
''ஆமாம்மா அவ கையால சாப்பிட்டு ஒரு மாசத்துக்கு மேலாச்சு. நீ போட்டு எடுத்துட்டு வா. இல்லேன்னா, நான் ஆபீஸ் போகும்போது, வழியில் பார்த்துக்கிறேன்.''
''டிபன் ரெடி பண்றேன், வீட்டிலேயே சாப்பிட்டு போகலாம்.''
ஆபீசுக்கு கிளப்பிய ரவியிடம், ''ராத்திரிக்கு சப்பாத்தியும், குருமாவும் செய்றேன். வீட்டிலேயே சாப்பிடலாம்,'' என்றாள், சாரதா.
''சரிம்மா, அவளை எதுவும் வேலை வாங்காதே. எப்ப கிளம்புறதா சொன்னா?''
''நாளைக்கு காலையில. நானும் காலையிலேயே கிளம்பிடறேன், ரவி.''
''ஏம்மா, நீ இருந்துட்டுப் போயேன்.''
''இல்லைப்பா, மனசு சரியில்ல. அடுத்த மாசம் வரேன்.''
மூவரும் சாப்பிட்டனர்.
''இன்னொரு சப்பாத்தி வச்சுக்கம்மா?''
''இல்லை அத்தை, சாயந்திரம் வாந்தி எடுத்தேன். என்னமோ போல இருக்கு, சாப்பிடப் பிடிக்கல.''
''சரி, பரவாயில்ல. ராத்திரி பால் குடிச்சுட்டு படு.''
'காலையில, உங்க உறவே வேண்டாம் என்று, பெட்டியை துாக்கிட்டு போகப் போகிறாள்...' என, ரவியிடம் ஏளனச் சிரிப்பு எட்டிப் பார்த்தது.
அவரவர் அறைக்கு கிளம்பினர்.
''ரவி, வித்யா ஒரு நிமிஷம். ஹாலுக்கு வாங்க, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்,'' என்றாள், சாரதா.
''அம்மா, இங்க பாரு... நீ பேசி, எங்க இரண்டு பேரையும் சமாதானம் பண்ணலாம்ன்னு நினைக்காதே. இனி ஒத்துவராதுன்னு இரண்டு பேருமே முடிவு பண்ணிட்டோம்,'' என்றான்.
''தெரியும்பா கல்யாண பந்தத்தில் இரண்டு பேரையும் இணைச்சு வச்சோம். பிரியறதுன்னு நீங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணீட்டிங்க. அதைப் பத்தி நான் பேசலை. அது உங்க விருப்பம்.''
''அப்புறம் என்னம்மா?''
''என் மனசில் இருக்கிற சில விஷயங்களை, இரண்டு பேரும் சேர்ந்து இருக்கும் இத்தருணத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் பிரியப்படறேன்.''
இருவரும் ஆளுக்கொரு பக்கமாக உட்கார்ந்தனர்.
''எனக்குக் கால்யாணம் ஆனப்போ, நானும் பல கனவுகளோடு தான், என் வாழ்க்கையை ஆரம்பிச்சேன். ஆனா, அந்தக் கடவுள் நான் நினைச்ச மாதிரி வாழ்க்கையை எனக்கு அமைச்சுத் தரல.
''என் கணவர் சரியான குடிக்காரர். குடித்தால் மனுஷனாவே இருக்கமாட்டார்ன்னு சில நாட்களிலேயே புரிஞ்சுகிட்டேன். போராட்டமான வாழ்க்கை தான், வாழப் பழகிட்டேன். ரவிக்கு மூன்று வயசு, குடிச்சு குடிச்சு உடம்பைக் கெடுத்து, மஞ்சள் காமாலை வந்து மீள முடியாமல் போய் சேர்ந்துட்டாரு.
''மனசுக்குள்ளே சின்னதா விடுதலை கிடைச்ச மாதிரி உணர்வு. படித்த படிப்பு கைகொடுக்க, வேலையில் சேர்ந்து, குடும்பத்தை நடத்த ஆரம்பித்தேன். ரவி வளர, வளர என் அன்பும், அரவணைப்பும் மட்டும் அவனுக்கு நிறைவைத் தராதுன்னு புரிஞ்சுது.
''தனக்கு அப்பான்னு ஒருத்தர் இல்லையேன்னு பல விதத்தில் உணர ஆரம்பிச்சான். 'எனக்கு மட்டும் ஏம்மா அப்பா இல்லை... அவர் இருந்தா பக்கத்து வீட்டு பாபுவைப் போல, என்னையும் அவரு பைக்கில ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போவாரு இல்லையா?' ஏக்கத்துடன் அவன் கேட்ட போது, மனசுக்குள் சின்ன வலி.
''கடவுளே, எனக்கு ஒரு நல்ல புருஷனா இல்லாட்டியும், இந்த புள்ளைக்கு ஒரு அப்பாவாகவாவது அவர் வாழ்ந்திருக்கக் கூடாதான்னு மனசு ஏங்கியது. பெரியவனான பிறகு தான், அப்பா இறந்துட்டாருங்கிறதை புரிஞ்சி, வாழ ஆரம்பிச்சான். இதை நான் இப்ப சொல்றதுக்கு, காரணம் இருக்கு.
''ரவிக்கு அம்மா, அப்பாவோட சேர்ந்து வாழக் குடுத்து வைக்கல. அது விதி, அதை மாத்த முடியாது. நீங்க கணவன், மனைவிங்கிற பந்தத்திலிருந்து விடுபட முடிவு பண்ணிட்டீங்க. கோர்ட்டும் அதைத் தீர்மானிச்சு உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சுடும். அதுக்குப் பிறகு, நீ யாரோ, அவன் யாரோ.
''இப்ப அவ வயித்துல சுமக்கிறாளே கரு, அந்த குழந்தைக்கு அம்மா, அப்பா நீங்க ரெண்டு பேரும் தான். அதை எந்த சட்டத்தாலும் பிரிக்க முடியாது. அப்பா இல்லாம வளரணும்ன்னு விதி உனக்கு அமைஞ்சிடுச்சு. ஆனா, தயவுசெஞ்சு உங்க பிள்ளைக்கு அந்த விதியை நீங்க ரெண்டு பேரும் ஏற்படுத்தி தந்துடாதீங்க.
''உங்க சுயநலத்துக்காக, அம்மா, அப்பான்னு சேர்ந்து வாழற, அந்தக் குழந்தையின் உரிமையைப் பறிச்சுடாதீங்க. நீ சுமக்கிற குழந்தை, எங்க குடும்ப வாரிசு தான். இருந்தாலும், மனசைக் கல்லாக்கிகிட்டு சொல்றேன்...
''அந்தக் குழந்தை இந்த உலகில் ஜனிக்க வேண்டாம். நிச்சயமா அவன் வாழ்க்கைக்கு நிறைவைத் தர முடியாது. கருவிலேயே அழிச்சுடு,'' என சொல்லி, இருவரையும் நிமிர்ந்து பார்க்காமல், படுக்கைக்கு சென்றாள்.
பொழுது விடிய, அறையிலிருந்து வந்தாள், சாரதா.
ஹாலில் வித்யாவின் சூட்கேஸ் தயாராக இருந்தது.
அங்கு வந்த ரவியிடம், ''நானும் கிளம்பறேன்ப்பா,'' என்றாள், சாரதா.
''இரும்மா, டிபன் சாப்பிட்டுப் போகலாம்,'' என்றான், ரவி.
''இல்லப்பா, போற வழியில பார்த்துக்கிறேன்,'' என்றாள், சாரதா.
''நீ பட்டினியோடு போகலாம். உன் மருமகள் வயித்துல குழந்தையை சுமப்பவள், சாப்பிடாமல் எப்படி வருவா?''
கண்களை அகலமாக்கி, ''என்னப்பா சொல்லுற, வித்யாவும் என்னோட வர்றாளா?''
''ஆமாம்மா. ஆனா, அவ கோயம்புத்துார் வரலை. நீ போற வழியில, சேலத்தில் அவங்க அம்மா வீட்டில் இறங்கிப்பா. மாசமா இருப்பவளை தனியா அனுப்ப வேண்டாம். அதேபோல, நீயே போய், 10 நாள் கழிச்சுக் கூட்டிட்டு வந்துடு,'' என்றான், ரவி.
அங்கு வந்த வித்யா, ''அத்தை, ராத்திரி ரெண்டு பேரும் துாங்கலை. நீங்க சொன்னதை யோசிச்சுப் பார்த்தோம். சகிப்புத்தன்மை இல்லாமல் நாங்க எடுத்த முடிவு தப்பானதுன்னு, பிறக்கப் போற எங்க குழந்தை மூலமா புரிய வச்சுட்டீங்க.
''நாள் ஆக ஆக நிச்சயம் எங்களுக்குள் புரிதல் வரும்கிற நம்பிக்கை வந்திருச்சு. எங்க பிள்ளையே வாழ்க்கைக்கு ஒரு பாலமா இருப்பான்,'' என்று, முகம் மலரச் சொன்னாள்.
''ஆமாம்மா உன் பேரன், அப்பா, அம்மாவோடு மட்டுமில்லை, பாட்டியின் அரவணைப்போடும் தான் வளருவான். அதனால், நீயும் அவசியம் இனி எங்களோடு தான் இருக்கணும். புரிஞ்சுதா?'' என, அம்மா அருகில் வந்தான், ரவி.
ஆனந்த கண்ணீருடன் இருவரையும் கட்டி அணைத்தாள், சாரதா.
பரிமளா ராஜேந்திரன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!