துறவி ஒருவரை பிட்சைக்கு அழைத்திருந்தார், குருநாதர் ஒருவர். வந்த துறவியை முறைப்படி வரவேற்று, அமர வைத்தார்.
உணவு தயாராகாததால், பொறுமையோடு காத்திருந்தார், துறவி. காலம் கடந்து கொண்டிருந்தது.
சூரியன் மறையும் நேரம், 'ஐயா, சூரியன் மறைந்த பிறகு, பிட்சை (உணவு) ஏற்பது இல்லை. மன்னிக்க வேண்டும்...' என்றார், துறவி.
குருநாதருக்கு இருப்பு கொள்ளவில்லை. அவருக்கு, துறவியின் நிலை புரிந்தது. இன்னும் ஐந்து நிமிடங்களில் உணவு தயாராகி விடும். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார், குருநாதர்.
கண்களை மூடி, 'கண்ணா, அடியேனைக் காப்பாற்று. உன்னைத் தவிர, வேறு போக்கிடம் ஏது? துறவி ஒருவரைப் பட்டினி போட்ட பாவம், அடியேனுக்கு வர வேண்டாம். காப்பாற்று...' என, மனம் உருகி வேண்டினார்.
கருணை புரிந்தார், கண்ணன்.
மறைய வேண்டிய சூரியன், செக்கச் சிவந்த மேற்கு வானத்தில், கீழாக,'பளிச்'சென்று ஒளி வீசி, தான் இன்னும் மறையவில்லை என்பதை காட்டி கொண்டிருந்தது.
ஒரு வேப்ப மரத்தின் கிளை வழியாக, அந்த சூரியனைப் பார்த்த குருநாதர், துறவியை அழைத்து வந்து காட்டினார்.
சூரியனைப் பார்த்த துறவியும், இன்னும் சூரியன் மறையவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார். அதற்குள் உணவு தயாராகி இருந்தது. துறவி பிட்சை (உணவு) ஏற்றுக் கொண்டார்.
நிம்மதி அடைந்து, கண்ணனை வணங்கினார், குருநாதர்.
உண்மையில் அப்போது சூரியன் இல்லை. பக்தரைக் காப்பதற்காக தன் கையிலிருந்த சுதர்சன சக்கரத்தை, சூரியனாக ஒளி வீச பகவான் செய்திருந்தார் என்பது, துறவிக்கு புரிந்தது.
குருநாதரின் துாய்மையான பக்தியை எண்ணி வியந்த துறவி, 'நிம்பார்க்கரே...' என, அவரை அழைத்தார்.
நிம்பம் - வேம்பு. வேப்ப மரக் கிளைகளின் இடையே, சுதர்சன சக்கரத்தாலான சூரியனைத் தரிசிக்கச் செய்த காரணத்தால், குருநாதரை, 'நிம்பார்க்கர்...' என அழைத்தார், துறவி.
குருநாதரான- ஆசாரிய புருஷரான, நிம்பார்க்கர் பெரும் புகழ் பெற்றவர். துவாபர யுகத்தில் அர்ஜுனனுக்காகச் செய்ததைப் போலவே, கலியுகத்தில், 12ம் நுாற்றாண்டில், கண்ணன் செய்த அருள் ஆடல் இது.
பி. என். பரசுராமன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!