Load Image
Advertisement

பொறுப்பற்றவர்களை தண்டிப்பவர்!

நாட்டு மக்கள் பொறுப்பற்றவர்களாக, ஆணவக்காரர்களாக இருந்தால், அவர்களையும் தண்டிக்க இருக்கிறது, ஒரு தெய்வம். யார் அவர்?

நந்தவனம் என்ற தேசத்து மன்னர் குலசேகரனுக்கு, ஒரு மகள். இங்கு வசித்த பணம் படைத்த மக்கள், ஆணவம் அதிகமாகி அட்டூழியம் செய்தனர்.

இதையெல்லாம், அந்நாட்டு மன்னர் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், சனீஸ்வரரின் பார்வை, அந்த நாட்டின் மீது பட்டு விட்டது. பணக்காரர்களையும் ஏழையாக்கி விட்டார். அனைத்தையும் இழந்த மக்களை, தன் அடிமையாக்கினார், மன்னர்.

தினமும் கூலியின்றி வேலை செய்ய வேண்டும், ஒருவேளை மட்டும் அரசாங்கம் உணவிடும் என்பது, அவரிட்ட கட்டளை. மக்களும் வேறு வழியின்றி அதை ஏற்று சிரமப்பட்டனர்.

கஷ்டம் வந்ததும், கடவுள் நினைவு அவர்களுக்கு வந்தது. தங்கள் குலதெய்வமான, பைரவரை வணங்கி, விமோசனம் அளிக்கும்படி கண்ணீர் விட்டனர். பைவரரும் மனமிரங்கி, மனித வடிவில் நந்தவன நாட்டுக்கு வந்தார்.

சனீஸ்வரரை அழைத்து, 'நீ இவர்களை விட்டு விடு, பாவம் இந்த மக்கள்...' என்றார்.

'இல்லை தெய்வமே, இந்த மக்களின் பொறுப்பற்ற செயல்களுக்குரிய தண்டனையே இவர்களுக்கு தரப்பட்டுள்ளது. இவர்களை விட முடியாது...' என்றார்.

'அவர்கள் செய்தது தவறு தான். இருப்பினும், என்னை சரணடைந்து விட்டதால், அவர்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது...' என்ற, பைரவர், ஒரு தோட்டத்தில் படுத்து உறங்குவது போல் நடித்தார்.

அவரை எழுப்பி, 'டேய், வேலை செய்யாமல் உறங்கவா செய்கிறாய். ஒழுங்காக இங்கிருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்று...' என்றனர், காவலர்கள்; கண்டு கொள்ளவில்லை, பைரவர்.

அப்போது, அங்கு வந்த மன்னரின் மகள் விஜயராணி, பைரவரை திட்டினாள்.

'அழகிகள் திட்டினால் கூட ஆனந்தம் தான்...' என்று கேலி செய்தார், பைரவர்.

கோபமடைந்த இளவரசி, அவரைச் சவுக்கால் அடித்துக் கொல்ல உத்தரவிட்டாள்.

'அடிப்பதாய் இருந்தால், உன் பிஞ்சுக்கையால் வாங்கும் அடி, சுகமாக இருக்குமே...' என, பைரவர் மீண்டும் கேலி செய்ய, அவரை மன்னர் முன் நிறுத்தினர்.

அவரது கண்களைக் குத்திக் குருடாக்க உத்தரவிட்டார் மன்னர். காவலர்களும் கம்பியால் அவரது கண்களைக் குத்தினர். ஆனால், குத்தியவர்கள் குருடாயினர். கலக்கமடைந்த மன்னரும், இளவரசியும், 'நீ யார்?' எனக் கேட்க, அவர்கள் முன் தோன்றினார், பைவரர்.

மக்களையும், மன்னரையும் கண்டித்தார்.

'இருதரப்பும், பொறுப்பாக இருந்தால் தான், அனைவரையும் பாதுகாப்பேன்...' என்றார்.

இது கேட்டு, மன்னரும், மக்களும் மனம் திருந்தினர்.

அரசு மட்டுமல்ல, அதை அமைக்கும் மக்களும் பொறுப்புடன் இருந்தால் தான், கடவுளின் அருள் கிடைக்கும் என்பதற்கு, பைரவரின் இந்த நிகழ்வு ஒரு பாடம்.

- தி. செல்லப்பா



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement