அன்பு ஆன்டிக்கு...
நான், 11 வயது சிறுமி. தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறேன். என் பெற்றோர் அரசு பணியில் உள்ளனர். எனக்கு பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும், வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் மன அழுத்தங்கள் அதிகம்.
இதை சரியாக்க யோகா கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இதற்கான மையங்களில், என் போன்ற வயதுள்ள சிறுமியரை அனுமதிப்பரா... யோகா கற்பதற்கான வழிமுறை பற்றி முழுமையாக கூறுங்கள்.
இப்படிக்கு,
ஆர்.கே.கலாப்ரியா.
அன்பு செல்லத்துக்கு...
யோகா, 5,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக கூறப்படுகிறது. யோகா பற்றிய குறிப்புகள், ரிக் வேதத்தில் காணப்படுகின்றன. சுவாசிக்கும் மூச்சை கட்டுப்படுத்தவும், மனம், உடல் இரண்டையும் அமைதிப்படுத்தவும் பயன்படும் உடல் சார்ந்த பயிற்சி முறையே யோகம் எனப்படும்.
ஒருவரின் ஆன்மாவை, பிரபஞ்சத்தின் உட்பொருளுடன் ஐக்கியப்படுத்த முயலும் தத்துவமே யோகா.
உடல், சுவாசம், உணவு இவை, யோகாவின் துாண்கள். ஆசனங்கள், பிரணயாயாமம், தியானம் மூன்றும் யோகாவில் அடக்கம்.
யோகாவில், ஏழு வகைகள் உள்ளன.
அஸ்தங்கா யோகா, ஹடயோகா, வெப்பயோகா, ஐய்யங்கார் யோகா, குண்டலினி யோகா, மறுசீரமைப்பு யோகா, பவர் யோகா அல்லது வின்யாசா யோகா.
யோகாவை, மூன்று வயதில் இருந்து கற்றுக்கொள்ள ஆரம்பிக்கலாம். ஆனால், எட்டு வயதில் யோகா கற்றுக் கொள்ள ஆரம்பிப்பது சிறப்பு! 12 வயதுக்கு மேல் சிரமமான யோகாக்களை கற்றுக் கொள்வது நலம்.
மத்திய சுகாதார அமைச்சகம் குழந்தைகளுக்கான யோகாவுக்கு சில நெறிமுறைகளை வகுத்து தந்துள்ளது.
* ஒவ்வொரு நாளும், 20 நிமிடங்களுக்கு மேல் யோகா வகுப்பு கூடாது.
* யோகா முத்திரைகள், 10 - 15 நொடிகளுக்கு மேல் நீடிக்க கூடாது
* யோகா கற்று கொள்ள வரைபடங்கள், ஒளிபடங்கள், வீடியோ காட்சிகள் காட்டலாம்
* சுத்தமான விரிப்பில் கற்று தருதல் நலம்
* சிரசாசனம் கூடாது
* யோகா கற்றுக் கொள்ளும் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடக் கூடாது
* யோகாவில் கட்டாயம் வேண்டாம்.
யோகாவில் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
* முடி வளரும்
* ஊளைச்சதை குறையும்
* சருமம் பளபளப்பாகும்
* செரிமான திறன் கூடும்
* பூப்பெய்வது சரியான வயதில் நிகழும்
* சுவாசத்தை மேம்படுத்தும்
* ஆழ்ந்த துாக்கம் கிடைக்கும்
* ஞாபக சக்தி மேம்படும்
* நீதி, நேர்மை, நியாயம், ஒழுங்கு உணர்வுகள் மிகையாகும்
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எல்லா மதத்தினரும் யோகா செய்யலாம். இஷ்ட தெய்வமாய் அம்மா முகத்தை வைத்துக் கொள்ளலாம்.
உன் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவது யோகா மையத்தில் சேர்ந்து, சிறந்த பயிற்சிகள் பெறு, வாழ்வில் முன்னேறு.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!