வீட்டில் சேகரித்து வைத்திருந்த, 'சிறுவர்மலர்' இதழ் ஓவியங்களை காட்டி, அது போல் வரைய முயற்சிக்கும்படி கூறினாள் அம்மா.
அதன்படி பார்த்து வரைந்தாள் வீணா; சற்றே ஆர்வம் வந்தது.
பிஞ்சு கரங்களால், முயல் வரைந்தபடி, ''அம்மா... இதை பாருங்கள்...'' என அழைத்தாள்.
''வாவ்... நல்லா வரைஞ்சி இருக்கிறடா; இன்னும் முயற்சி செய்; ரொம்ப அழகா வரைவாய்...'' என்றாள் அம்மா.
''நான், வரைந்தது எப்படி இருக்குன்னு சொல்லுங்க...''
விடாப்பிடியாய் மீண்டும் கேட்டாள் வீணா.
''நன்றாக தான் வரைகிறாய்; வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா... விரும்புவதை மிக உயர்வாக செய். அப்படி நினைக்கும் போது தான் செயல் உயர்வாக அமையும்...'' என அறிவுரைத்தாள்.
அப்போது, தற்செயலாக, மாமாவும், அவரது மகளும் அங்கு வந்தனர்.
வீணாவின் கவனம் அவரிடம் சென்றது.
''மாமா... நீங்க சொல்லுங்க...''
''என்னடா கண்ணு... என்ன சொல்லணும்...'' என்றார் மாமா.
''இந்த முயல் படம் எப்படி இருக்கு...''
பள்ளியில், ஓவிய ஆசிரியராக வேலை செய்யும் அவர் குழந்தைகள் மனமறிந்து செயல்படுபவர்.
''படத்துக்கு என்ன குறைச்சல்... 100க்கு, 80 மதிப்பெண் போடலாம்... இந்த முயலுக்கு, ஒரு குட்டி வால் வரைந்து, காதையும் சற்று வளைத்து போட்டால் இன்னும் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்...'' என, பென்சிலால் திருத்தினார்.
வீணா முகம் பூவாய் மலர்ந்தது.
''சின்னதா ஒரு கோடு போட்டதும், வளைவாய் வால் வரைந்ததும், முயல் குட்டி ரொம்ப அழகா வந்துடுச்சு மாமா; அவசரத்தில் வால், வரைய மறந்துட்டேன்...''
''ஓவியம் வரைய பொறுமை அவசியம்; சின்ன, சின்ன விஷயங்களை கவனித்து, நுணுக்கமாய் திருத்தினால் பிரமாதமாய் வந்துடும். ஓய்வு நேரத்தில் என்னை வந்து பார்; படம் வரைய கற்று தருகிறேன்...'' என்ற மாமா காபி பருகியபின் மகளுடன் புறப்பட்டார்.
திரும்பிய போது வழியில், ''வீணா வரைந்தது நல்லாவே இல்லை... ஆனாலும், பாராட்டுனீங்களே...'' என்றாள் அவரது மகள்.
''இப்பத்தான் உருப்படியா வரைய முயற்சி செய்கிறாள். ஆரம்பத்திலே தடுத்தா சோம்பேறியா உட்கார்ந்துடுவா; அதனால் தான், பாராட்டியே குறைகளை சுட்டி காட்டினேன்; இனி, ஈடுப்பாட்டுடன் வரைவாள்... ஒருவரின் செயல், தவறு எனில் மாற்று வழியில் மனம் நோகாமல் சொல்ல வேண்டும்...''
''சரி அப்பா... நானும் இது போல் பழகி கொள்கிறேன்...''
உற்சாகம் பொங்க கூறினாள் சிறுமி.
குழந்தைகளே... பிறர் மனம் நோகாமல் தவறுகளை எடுத்துரைக்க பழகுங்கள்!
- பா. செண்பகவல்லி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!