நாட்டில் வளர்ச்சி ஏற்பட வரி விதிக்கப்படுகிறது. சில நாடுகளில் வித்தியாசமாக வரி வசூலிக்கப்படுகிறது. வினோதமான வரி விதிப்பு முறைகள் பற்றி பார்ப்போம்...
இளங்கலை வரி: அமெரிக்காவில் உள்ள மிசோரி மாநிலத்தில் ஒரு வகை வரி வசூலிக்கப்படுகிறது. அதாவது திருமணமாகாத, 21 முதல், 50 வயதுக்குட்பட்டவர்கள் பிரத்யேகமாக ஒரு வரி செலுத்த வேண்டும். ஆண்டிற்கு, 1 டாலர் அதாவது, 80 ரூபாய் வரியாக செலுத்த வேண்டும். இது, 1820ல் அமலுக்கு வந்தது. ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ருமேனியாவில் இது போல் வரி விதிப்பு உள்ளது.
நிழல் வரி: ஐரோப்பிய நாடான இத்தாலியில், 1993ல் இது அமல்படுத்தப் பட்டது. வர்த்தக நிறுவனங்கள் உருவாக்கிய அடையாள சின்னம், தெருவில் நிழலாக விழுந்தால் வரி விதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு, 100 டாலர் அதாவது, 8,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
சாப்ஸ்டிக் வரி: ஆசிய நாடான சீனா ஒருமுறை பயன்படுத்தும் சாப்ஸ்டிக்ஸ் உருவாக்குகிறது. காடுகளை பாதுகாப்பதற்காக இதன் மீது, ஐந்து சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. கடந்த, 2006 முதல் இது அமலில் உள்ளது. இந்த நடவடிக்கையால், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவர் என நம்புகிறது, சீன அரசு.
கொழுப்பு வரி: கிழக்காசிய நாடான ஜப்பானில் புகழ்பெற்றது மெட்டாபோ சட்டம். இதன்படி, 40 முதல், 75 வயதுக்குட்பட்டோர் ஒவ்வொரு ஆண்டும் இடுப்பை அளவெடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தால், அபராதம் செலுத்த வேண்டும். ஆண்களுக்கு இடுப்பு சுற்றளவு, 85 செ.மீ., என்றும் பெண்களுக்கு, 90 செ.மீ., என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடல் பருமன் பிரச்னையை தீர்க்கவும், நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த வகை வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கால்நடை வாயு வரி: வடக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவில் கால்நடை கழிவுகளால் ஏற்படும் வாயுக்கு வரி விதிக்கப்படுகிறது. காற்று மாசை தடுக்கும் வகையில் இது அமலில் உள்ளது.
- எம்.அசோக் ராஜா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!