இப்படி சிக்கல் வருமென எதிர்பார்க்கவில்லை நித்தீஷ்!
பள்ளியில், காலை பாட இடைவேளை முடிந்திருந்தது.
புத்தகப் பையை திறந்தான் மாணவன் மகேஷ். அதில் வைத்திருந்த, 50 ரூபாயை காணவில்லை. கணித ஆசிரியரிடம் புகார் செய்தான்.
''யாராவது எடுத்து இருந்தால் கொடுத்து விடுங்கள்...''
ஆசிரியர் கடுமையாக கூற, நிசப்தம் நிலவியது.
வகுப்பு தலைவனை அழைத்து அனைவர் பைகளையும் சோதனையிட கூறினார்.
நித்தீஷ் இதயம், 'திடுக்... திடுக்...' என அடித்தது. பையிலிருந்த பணத்தை தடவி பார்த்து கொண்டான்; பத்திரமாக இருந்தது.
'சோதனையின் போது பணம் பற்றி கேட்டால் என்ன சொல்வது'
எண்ணிய போதே வியர்த்து கொட்டியது.
முந்தைய நாள் மாலை, மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கி வர, 500 ரூபாய் பணம் கொடுத்திருந்தாள் அம்மா. பொருள் வாங்கிய பின், பில்லை சாமர்த்தியமாக திருத்தி, 50 ரூபாயை பையில் வைத்துக் கொண்டான் நித்தீஷ். மீதிப் பணம், பில்லை அம்மாவிடம் கொடுத்த பின் வீட்டுப் பாடம் எழுத அமர்ந்தான்.
அந்த பணத்தை, 'மகிழ்ச்சியாக செலவு செய்யலாம்' என, வகுப்புக்கு எடுத்து வந்திருந்தான். அது வினையாகி விட்டது. அந்த பணம் தான் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
வகுப்பில் தனித்தனியாக சோதனை நடந்து கொண்டிருந்தது.
அந்த, 50 ரூபாய் நோட்டை பக்கத்தில் இருந்த நண்பன் ஸ்ரீதரின் புத்தகப் பையில் நைசாக வைத்தான் நித்தீஷ். படபடப்பு சற்று குறைந்திருந்தது; முகத்தை துடைத்துக்கொண்டான்.
சோதனையிட்ட வகுப்பு தலைவன், ''ஐயா... மாணிக்கம் சட்டைப் பையில், 50 ரூபாய் இருக்கிறது...'' என்றான். அது பற்றி விசாரணை நடந்தது. பணம் திருடியதை ஒப்புக்கொண்டான் மாணிக்கம்.
அடுத்து, ஸ்ரீதர் பையிலிருந்த, 50 ரூபாய் கண்டெடுக்கப்பட்டது.
அது பற்றியும் விசாரணை நடந்தது.
சோதனை முடிந்த பின், ''உனக்கு ஏது இவ்வளவு பணம்...'' என பணம் பறிகொடுத்திருந்த மகேசிடம் கேட்டார் ஆசிரியர்.
''ஐயா... எங்கப்பா மளிகை கடை வைத்திருக்கிறார்; உடன் படிக்கும் நித்தீஷ், நேற்று கடைக்கு வந்து சாமான்கள் வாங்கியிருக்கிறான்; அரை கிலோ துவரம் பருப்புக்கு தவறுதலாக, ஒரு கிலோவுக்கு பில் போட்டு விட்டாராம் அப்பா; அதற்கு வாங்கிய கூடுதல் பணம், 50 ரூபாயை அவனிடம் கொடுத்து விட தந்து அனுப்பினார்; அதை தான் பையில் வைத்திருந்தேன்...'' என்றான்.
தொடர்ந்து ஸ்ரீதர் பக்கம் திரும்பி, ''எதற்காக வகுப்புக்கு பணம் எடுத்து வந்தாய்...'' என்றார்.
''ஐயா... அந்த பணம் என்னுடையது அல்ல; எப்படி என் பையில் வந்தது என்றே தெரியவில்லை...''
வருத்தத்தடன் சொன்னான்.
குழப்பத்துடன் பார்த்தனர் மாணவர்கள்.
நடந்ததை கவனித்தபடி இருந்த நித்தீஷ், ''ஐயா... ஸ்ரீதர் மீது, எந்த தவறும் இல்லை; அவன் பையில் பணத்தை நான் தான் வைத்தேன். வகுப்புக்கு பணம் எடுத்து வந்ததற்காக கண்டிப்பீர் என பயந்து, அப்படி செய்து விட்டேன்...'' என உண்மையை கூறி கண்ணீர் வடித்தான்.
''யாரையும், எப்போதும் ஏமாற்றும் எண்ணம் மிகவும் தவறானது; கண்டிக்கத்தக்கது. ஒரு தவறை மறைக்க மறுபடியும் தவறு செய்ய வேண்டிய நிலையை அறிந்தாயா... இனியாவது ஒழுக்கமாக நடந்து கொள்...''
கனிவாக அறிவுரை கூறினார் ஆசிரியர். திருந்தினான் நித்தீஷ். அந்த அறிவுரை அனைவர் மனதிலும் பதிந்தது.
செல்லங்களே... நேர்மையை கடைபிடித்தால் யாருக்கும், எதற்கும் பயப்பட தேவையில்லை!
- மு. நடராசன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!