காரைக்கால் அருகே, திருநள்ளாறு நடுநிலைப் பள்ளியில், 1967ல், 6ம் வகுப்பு படித்தபோது, கணித ஆசிரியராக இருந்தார் சுப்பிரமணியன். கலகலப்பாக பேசுவார். இரக்க குணம் படைத்தவர்.
ஊனமுற்ற தெருநாய் குட்டிகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அது பற்றிய தகவலை தெரிவித்து, 'ஊனமுற்ற ஜீவன்களை ஆதரித்து காப்பது பெரும் புண்ணியம் தரும்...' என பரிவுடன் கூறினார்.
விடுமுறை நாளில் சக மாணவர்களுடன் அவர் வீட்டிற்கு சென்றேன். நாய்களை பராமரிக்கும் விதத்தை நேரடியாக பார்த்தோம். அது பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கினார் ஆசிரியர். அது போல் சேவை செய்ய விரும்பி, பெற்றோரிடம் அனுமதி கேட்டேன். அவர்கள் உற்சாகப்படுத்தியதால் சில குட்டிகளை தத்து எடுத்தேன்.
அவற்றை முறையாக பராமரித்து வந்ததை கண்ட அக்கம் பக்கத்தவர், 'இந்த சின்ன வயசுல, இப்படி ஒரு பெரிய சேவையா...' என தட்டிக் கொடுத்து பாராட்டினர். செய்தி அறிந்த தொண்டு நிறுவனம் ஒன்று உதவ முன் வந்ததால், சேவையை விரிவாக்க முடிந்தது. பிற பராமரிப்பு மையங்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
என் செயல்பாடு கண்டு, இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் வாயில்லா ஜீவன்களை பராமரிக்க துவங்கியுள்ளனர். அது மகிழ்ச்சி தருகிறது.
என் வயது, 60; இந்த சேவையை பின்பற்றி, என் மகன், பேரப்பிள்ளைகளும் கனிவுடன் செய்து வருகின்றனர். இதற்கு, துாண்டுகோலாக இருந்த ஆசிரியரை வணங்குகிறேன்.
- எஸ்.விஸ்வநாதன், புதுச்சேரி.
தொடர்புக்கு: 93602 66439
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!