அதிகாலை, 5:00 மணிக்கு வழக்கம் போல கண்விழித்துக் கொண்டார், சீனிவாசன். எழுந்து உட்கார்ந்து, இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தேய்த்து கண்களில் ஒற்றி, கைகளைப் பார்த்தார். கைவிரல் நுனிகளில் தேவியர் குடியிருப்பதாக சாஸ்திரம். கும்பிட்டுக் கொண்டார்.
கட்டிலை விட்டு இறங்கி, ஆடைகளை சரி செய்து, பாத்ரூம் போய் விட்டு, கையோடு குளியலும் முடித்து வந்து, சமையலறை புகுந்தார்.
அஞ்சு நிமிஷத்தில் அரிசியும், பருப்பும் குக்கரில் ஏற்றிவிட்டு, வெளியில் வந்தார், படிகளில் இறங்கி, கேட்டில் கட்டித் தொங்க விட்டிருந்த பையிலிருந்த பால் பாக்கெட்டை எடுத்து திரும்புகையில் கீழ்வரிசையில், எதிர் ப்ளாட்டைப் பார்த்தார்.
அமைதியாக இருந்தது; முன்தினம் இரவு ரகளை நடந்த சுவடே தெரியவில்லை.
ஒரு பெண்ணின் கதறலும், ஒரு மிருகத்தின் குரூரமும் குழைந்து ஒலித்த நாராசம் தெரியவே இல்லை.
உள்ளே இருக்கிறானா, எங்காவது போய் தொலைந்தானா... தெரியவில்லை. படி ஏறி, தன் ப்ளாட்டுக்கு வந்தார். பாலை குக்கரில் ஏற்றினார். பில்டரில் டிகாக் ஷனும் போட்டார். காபி கலக்கி, பக்கத்து அறைக்கு, கதவைத் தட்டிவிட்டு உள்ளே போனார்.
அலங்க மலங்க விழித்தெழுந்த விஜி, முன் இரவு அதிர்ச்சியில் இருந்து விலகியிருக்கவில்லை. கண்களில், மிரட்சி. கன்னத்தில் கீறல், கலைந்த தலைமுடியுமாய், பார்க்க சகியாத கோலம்.
''இந்தாம்மா... காபி குடி. ரைஸ் குக்கர் வச்சிருக்கேன். அஞ்சு நிமிஷம் விட்டு இறக்கி வச்சிடு. நான், 'வாக்' போய்ட்டு வர்றேன். கதவை உள்தாழ்ப்பாள் போட்டுக்க... சீக்கிரம் வந்துடறேன்,'' என்று கிளம்பியவருக்கு, ஐம்பது ப்ளஸ் வயது.
மத்திய அரசாங்க வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஒரு மகன், ஒரு மகள். மகளை ஐதராபாத்தில் கொடுத்திருக்கிறார். மகன் மலேஷியாவில். ஓய்வு பெற்றதில் கிடைத்த தொகையில் ப்ளாட் வாங்கிக் கொண்டு விட்டார்.
இளம் வயதிலேயே மனைவியை இழந்து, தாயுமானவனாகி குழந்தைகளை வளர்த்ததில், சமையல் முதற்கொண்டு எல்லாம் அத்துபடி. யார் துணையும் அவருக்கு தேவை இருக்கவில்லை. ஆனால், அபார்ட்மென்ட்டில் பலருக்கும் அவர் துணையும், உதவியும் தேவையாய் இருக்கிறது.
குறிப்பாக, விஜி போன்றோருக்கு...
அதிகாலை குளிர்காற்று சில்லென்று முகத்தை தழுவியது. நடையை ஒரே சீராக, மனம் குவித்து நடந்து கொண்டிருந்தார், சீனிவாசன்.
சாலை ஓரத்தில் கால்களை வீசிப் போட்டு நடக்கையில், விஜியின் நினைவு இடறியது. பாவம், அந்தப் பெண். ஒவ்வொரு நாளும் புருஷனிடம் அடி, உதை.
பிளாட்பார குடிசைகளில் கூட அவ்வளவு அநாகரிக சண்டை இருக்காது. இத்தனைக்கும், பிரபாகர், பெரிய குடிகாரனும் அல்ல. இருபத்து நாலு மணி நேரமும் உதட்டில் சிகரட் தொங்கும்; அதை விட மோசமாய் மனசில் ஒரு சைத்தான் தொங்கிற்று.
மனைவியுடன் காரணமே இல்லாமல் தகராறு.
ஏதோ மனக் கோளாறு இருக்க வேண்டும்.
அடி, உதை தாளாமல் அவள் அலறும் போதெல்லாம் சீனிவாசன் தான் அடைக்கலம். அவரைப் பார்த்தால் மட்டும் அவன், 'கப்சிப்'பாகிறான். அறைக்குள் பம்மிக் கொள்வான்.
நேற்றிரவு ரொம்ப ஓவர். கொலைவெறியில் தாக்கியிருக்கிறான்.
'இப்படி தொடர்ந்து பிரச்னை பண்ணிட்டிருந்தால், காலனியை விட்டு வெளியேத்தி விடுவோம்; இல்லேன்னா, போலீஸ் கம்ப்ளெய்ன்ட் பண்ணிருவோம்...' என சொல்லி விட்டார், காலனி செகரட்ரி.
சீனிவாசனுக்கு, சிக்கலின் வேரைக் கண்டுபிடித்து சரி செய்ய விருப்பம்.
பிரபாகருக்கு திருச்சி; விஜிக்கு வேலுார் சொந்த ஊர்களாக இருந்தன. அரேஞ்சுடு மாரேஜ். உடனடி தனிக்குடித்தனம்.
ப்ளாட்டுக்கு வாழ வந்த சில மாதங்களில் பெரும்பாலான இரவுகள் ரகளை தான். இரண்டு பக்கமிருந்தும் பொறுப்பான ஆள் வந்து கவனித்ததாகத் தெரியவில்லை.
கல்யாணத்தில் இருவீட்டாருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாக சொல்லியிருந்தாள், விஜி. அது என்னவாகவாவது இருந்து விட்டு போகட்டும்... அதன் ஒட்டு மொத்த விளைவும்... பாவம், அந்தப் பெண் தலையில் விழுவானேன்.
சின்னஞ்சிறுசுகள்! எவ்வளவோ எதிர்காலமிருக்கிறது.
போலீசுக்கு போய் பிரச்னையாக்குவதோ, இருப்பிடத்திலிருந்து அகற்றுவதோ, நிரந்தர தீர்வாகாது.
பிரபாகரிடம் இதம் பதமாய் பேசியாயிற்று. சொல்லும் போது, பதவிசாய் கேட்டுக் கொள்கிறான். பிறகு நிறம் மாறி விடுகிறான். என்ன செய்யலாம் என்ற சிந்தனையுடன், ஒரு வளைவில் திரும்பி நின்றார்.
ஜாகிங் வந்து கொண்டிருந்த பரிச்சயமான ஒரு நபர், இவரின் பதற்றத்தையும், வியர்வையும் பார்த்து, ''கடவுளே... மாரடைக்குதா... கமான்... இப்படி ஓய்வா உட்காருங்க...'' என்றார்.
''அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஐம் ஆல்ரைட். தாங்க்ஸ்...'' என்று சுதாரித்தார், சீனுவாசன்.
''பிரஷர்லாம் செக் பண்ணிக்கறதுதானே...''
''அதெல்லாம் நார்மல் தான் சார். ஏதோ யோசனைல நின்னுட்டேன். அவ்வளவுதான்.''
''ஒடம்ப பார்த்துக்கங்க. ஒத்தாசைக்கு ஆள் இல்லாம தனியா வேற இருக்கீங்க,'' என, எச்சரிக்கை மாதிரி சொல்லி, அவர் ஜாகிங்கைத் தொடர, நடந்த வரை போதும் என, வீடு திரும்பினார், சீனிவாசன்.
வீட்டை பூட்டிக் கொண்டு எங்கோ போய்விட்டிருந்தான், பிரபாகர். தன் ப்ளாட்டுக்கு வந்து சேர்ந்தபோது, சொச்ச சமையலும் முடித்து, வீட்டை கூட்டிப் பெருக்கி, குளித்து, பூஜையறையில் விளக்கேற்றியிருந்தாள், விஜி.
ரம்யமாக இருந்தது, வீடு. காபி கொணர்ந்து கொடுத்தாள்.
சோபாவில் உட்கார்ந்து, காபியை வாங்கி பருகியபடி, ''இப்ப வலி எப்படியம்மா இருக்கு?'' என்று விசாரித்தார்.
அவள் கன்னத்தை தடவிப் பார்த்து, கசப்பான புன்னகை செய்தார்.
''எதாவது ஒரு முடிவு பண்ணியாகணும்மா... இப்படியே விடப்படாது. நீ வேலூர் முகவரியையும், திருச்சி முகவரியையும் கொடு...''
எதற்கு என்பது போல் ஏறிட்டாள்.
''ரெண்டு பேரோட தாய், தகப்பனையும் நான் சந்திச்சு பேசணும். உங்களோட பிரச்னைக்கு ஒரு வகையில அவங்க தான் காரணம். கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்காங்க. ஆயிரம் தான் சம்பந்திகளுக்கு மன வேறுபாடு இருந்தாலும், குழந்தைகளைப் பழி வாங்கலாமா?
''எத்தனை நாளைக்கு நீ அடியும், உதையுமாய் சித்ரவதை படுவே... உன் புருஷனை போலீஸ்ல ரிபோர்ட் பண்ணி உள்ளே வைக்க ரொம்ப நேரமாகாது.
''எனக்கு அவனைத் திருத்தணும்ன்னுதான் விருப்பம். போலீஸ்ல புடிச்சு கொடுத்துட்டா அவன் கோபம் அதிகமாகி, உன்னை நிரந்தரமா பிரியலாம் அல்லது தவறான முடிவுக்கு போயிருவானோன்னு தான், இவ்வளவு நாள் தயங்கினேன். ஆனால், வேற மாதிரியான பிரச்னைகளும் உருவாகுது!''
''நான் உங்களுக்கு சிரமத்தையும் கொடுக்கறேனா... என்னால உங்களுக்கும் பிரச்னையா?'' என்றாள், விஜி.
''சேச்சே! எனக்கென்னம்மா சிரமம். நீ என் பெண்ணாயிருந்தால் தாங்க மாட்டேனா... எதுக்கு சொல்ல வந்தேன்னா... இப்படியே பிரச்னைகளோட காலந்தள்ள வேணாமே... இதுக்கொரு தீர்வு செய்யலாமேன்னு...''
''என் தலையெழுத்து... அவ்வளவுதான். இதை நான் அனுபவிச்சுதான் ஆகணும்,'' என்றாள், விஜி.
''படிச்ச பொண்ணாயிருந்துகிட்டு இப்படியெல்லாம் மனச தளர விடக்கூடாது. நான், உங்க பெற்றோரை சந்திக்கறதுல உனக்கேதும் ஆட்சேபனை உண்டா?'' என்றார்.
''சந்திக்கிறதுல பலனேதும் இருக்காது,'' என்றவள் தொடர்ந்து, ''கல்யாணத்துல சிக்கல்ன்னு இருவீட்டாருக்கும் மனக்கசப்புன்னு சொன்னது பொய் சார்; உண்மை அதுவல்ல...''
''பின்னே...''
''நாங்க திருட்டுக் கல்யாணம் பண்ணிகிட்டு வந்தவங்க. திரும்பிப் போனால், என்னை அவங்க ஏத்துக்க மாட்டாங்க... எனக்காக வீட்ல மாப்பிள்ளை பார்த்து, கல்யாண ஏற்பாடெல்லாம் செய்து முடிச்ச நிலையில், நான் அவங்க முகத்துல கரியை பூசிட்டு இரவோடு இரவா ஓடி வந்துட்டேன்.
''எனக்காக, பிரபாகரும் வீட்டை பகைச்சுகிட்டு வந்துட்டாரு. நானாவது நடுத்தரக் குடும்பத்துல வந்தவ. அவர் பணக்கார வீட்ல பிறந்து, சொகுசா வளர்ந்தவரு. அவரு பிரிஞ்சு வந்த மறுநாள், மாரடைப்புல அவங்க அம்மா இறந்துட்டாங்க. அதனால, ஒட்டு மொத்த குடும்பமும் அவருக்கு எதிர்ப்பாயிருச்சு.
''ஒரு வகைல ரெண்டு பேரும் அனாதை ஆயிட்டோம். நான் கடவுள் மேல பாரத்தைப் போட்டு மனசை இறுக்கிகிட்டேன்; ஆனால், பிரபாகரால தாங்க முடியல, உடைஞ்சு போயிட்டாரு...
''தாயும், செல்வமும் ஒரே நேரத்துல இழந்துட்டாரு. அதுக்கு நான் தான் காரணம்ன்னு நினைக்கறாரு. சுயகட்டுப்பாட்டை இழந்துடும்போது, எம்மேல வன்முறை காட்றாரு. அந்த நேரம் உங்ககிட்ட நான் அடைக்கலம் தேடிவர ஒரே காரணம்...
''நீங்கள் பிரபாகரின் அப்பா சாயல்ல இருக்கீங்க. ஏனோ... உங்களை எதிர்க்க அவருக்கு தோன்றதில்லை... அதுல தான் எனக்கும் கொஞ்சம் ஆசுவாசம்,'' என்று முடித்தாள்.
திகைத்தார், சீனிவாசன்.
இது போன்ற பின்னனியை அவர் எதிர்பார்க்கவில்லை. விஜியை பரிவுடன் பார்த்தார்.
எவ்வளவு பெரிய பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறாள், இந்தப் பெண். துன்பங்கள் மிகப்பெரிய பக்குவத்தைக் கொடுத்திருக்கிறது. சீக்கிரமே, இவள், தன் கணவரை சரிபண்ணி விடுவாள் என்று தோன்றியது.
''ஆகட்டும்மா. உன் மனம் போல, உன் புருஷன் மனம் சமாதானமாகி நல்லபடியா உன்னோடு வாழணும்ன்னு, நான் பிரார்த்தனை பண்ணிக்கறேன்,'' என்று பூஜையறைக்குப் போனார், சீனிவாசன்.
எம். வீரபாண்டியன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!