Load Image
Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —

தந்தையை இழந்த, 29 வயது பெண் நான். எனக்கு ஒரு தங்கை. வயது: 27. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். நான், வங்கியில் உயர் அதிகாரியாக உள்ளேன்.

என் தங்கையின் திருமணத்துக்கு பின்னரே நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.

ஒருவரை காதலிப்பதாக, என் தங்கை கூறவே, அம்மாவை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தேன். ஆனால், எதிர்பாராத விதமாக ஒரு சிக்கலில், அத்திருமணம் நின்று போனது. வேறொரு மாப்பிள்ளையை பார்த்து, தங்கைக்கு மண முடித்து வைத்தேன். இந்நிலையில், எனக்கு ஒரு வரன் முடிவானது.

'இதற்கு முன் யாரையாவது காதலித்திருக்கிறாயா?' என்று, தங்கையின் கணவர் கேட்க, இவளும், நடந்ததை சொல்லியிருக்கிறாள். இதனால், சண்டை ஏற்பட்டு, தங்கையை வீட்டை விட்டே துரத்தி விட்டார், அவளது கணவர்.

தங்கையும், அம்மாவும் கண்ணீர் விட்டு அழுதனர். இச்சூழ்நிலையில் நான் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கிறேன். ஆனால், மாப்பிள்ளை வீட்டினரோ திருமணத்தை விரைந்து நடத்த நெருக்குகின்றனர்.

இருதலை எறும்பாய் தவிக்கிறேன். எனக்கு ஒரு நல்ல பதிலை கூறுங்கள், அம்மா.

— இப்படிக்கு,
பெயர், ஊர், வெளியிட விரும்பாத வாசகி.

அன்பு மகளுக்கு —

என்ன சிக்கலால் தங்கையின் திருமணம் நின்று போனது என்பதை, உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. தங்கையின் காதலன் செய்த குழப்பத்தால், அந்த திருமணம் நின்று போயிருக்கும் என, யூகிக்கிறேன்.

தவளை தன் வாயால் கெடுவது போல, திருமணத்திற்கு முந்தைய காதலைப் பற்றி உளறி, தன் திருமண வாழ்க்கையை கெடுத்துக் கொண்டாள், உன் தங்கை.

மனைவியின் திருமணத்திற்கு முந்தைய காதல்களை கேள்விபட்டு அல்லது மனைவியின் வாயால் கேட்டு சில கணவன்மார்கள், 'திருமணத்திற்கு முன் நீ எப்படியிருந்தாலும் பரவாயில்லை. திருமணத்திற்கு பிறகு எனக்கு விசுவாசமாக இரு. நானும் உனக்கு விசுவாசமாய் இருக்கிறேன்...' என கூறி தொடர்ந்து வெற்றிகரமாய் குடும்பம் நடத்துவதை பார்த்திருக்கிறேன். அவ்வித மனப்பக்குவம் இல்லாத அரைகுறை ஆசாமி, தங்கையின் கணவன்.

உன் தங்கை, இல்லத்தரசி அல்ல. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். தங்கையின் பிரச்னைக்கு நீயோ, அம்மாவோ காரணமல்ல. காலை ஊன்றி குட்டிக்கரணம் போட்டு பிழைத்துக் கொள்வாள், தங்கை.

யார் கண்டது? பின்னாளில் அவளுக்கும், அவளது கணவனுக்கும் சமாதானம் ஏற்பட்டு சேர்ந்து வாழக்கூடும். சமாதானத்திற்கு வாய்ப்பே இல்லாத சூழலில், கணவனை விவாகரத்து பண்ணிவிட்டு, மறுமணம் புரிந்து கொள்ளலாம், தங்கை.

அவரவர் வாழ்க்கை அவரவருக்கு. சுயநலம் கலக்காத பொதுநலம் சிறக்காது.

உனக்கு, 29 வயதாகிறது. அம்மா மற்றும் தங்கையிடம் தகவல் தொடர்பை மேம்படுத்து. அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய். அவர்களுக்கு தேவைப்படும், 'மாரல் சப்போர்ட்'டை தங்கு தடை இல்லாமல் வழங்கு.

உனக்கு வந்திருக்கும் வரன் பற்றி, நன்கு விசாரி. மாப்பிள்ளை வீட்டாரின் அவசரத்துக்கு நியாயமான காரணங்கள் இருக்கிறதா என பார். முடிந்தால், மாப்பிள்ளையுடன் மனம் விட்டு பேசு.

தங்கையை பற்றி மூச்சு விடாதே. மாப்பிள்ளையின் உடல்மொழியை வைத்து அவரை மதிப்பிடு.

திருப்தி ஏற்பட்டால், திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டு. திருமணத்துக்கு பின்னும் அம்மா, தங்கைக்கு ஆறுதலாய் இரு. உன் ஆறுதலான பேச்சு, இரண்டு பெண்களின் மனக்காயங்களுக்கு அருமருந்து.

தங்கைக்கு அறிவுரை கூறாதே; ஆலோசனை வழங்கு. அவளது எதிர்காலத்தை சுதந்திரமாக முடிவடுக்க வாய்ப்பை கொடு.

தங்கையின் தடைபட்ட திருமண வாழ்க்கை சீர்பட, உன்னுடைய திருமண வாழ்க்கை அமோகமாக இருக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement