உயர் ரத்த அழுத்த பாதிப்பு இரண்டு வகைகளாக உள்ளன. முதல் வகையில், முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், உடல் பருமன் போன்ற தவிர்க்க முடிகிற வாழ்க்கை முறை மாற்றத்தினால் வருவது. இரண்டாவது, சிறுநீரக கோளாறுகள், ஹார்மோன் செயல்பாடுகள் உட்பட உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளால் வருவது. ஆரோக்கியமாக இருப்பவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து, லேசான மாறுபாடு தெரிந்தால், தினசரி நடைமுறையில் தேவையான மாற்றங்களைச் செய்து, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
நீண்ட காலமாக உயர் ரத்த அழுத்தம் இருந்தால், இதயத்திற்கு அதிக அழுத்தம் தந்து, பக்கவாதம், ஹார்ட்-அட்டாக், ரத்த நாளங்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். காய்கறிகள், பழங்கள், கொழுப்பு நீக்கிய பால் பொருட்கள், முழு தானியங்கள், பருப்புகள், மிக குறைவாக சோடியம், வாரத்தில் 150 நிமிடங்கள் சீரான உடற்பயிற்சி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். அதிகப்படியான உடல் எடையில், 500 கிராம் குறைந்தாலும், நேர்மறையான விளைவுகளைத் தரும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, தியானம், மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல பலன் தரும். இதற்கு மேலும் மருந்துகள் தேவைப்பட்டால் டாக்டர்களின் ஆலோசனையுடன் சாப்பிடலாம். அக்குபஞ்சர், யோகா போன்ற முறைகளும் சிலருக்கு பலன் தரலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சியில், ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்யப்படும் சில 'ஆப'கள், ஸ்மார்ட் கை கடிகாரங்கள் வாயிலாக உடலின் உள் இயக்கங்களை கண்காணிக்க முடிகிறது. நாமாகவே பார்த்து முடிவுக்கு வராமல், டாக்டரின் ஆலோசனையுடன் இவற்றை பயன் படுத்துவது பாதுகாப்பானது.
டாக்டர் அஸ்வின் கருப்பன்,உள் மருந்தக மருத்துவ ஆலோசகர்,சென்னை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!