தோட்டக்கலை பயிர்களில் ஒன்றான முருங்கையை சர்வரோக நிவாரணி கீரை, கீரைகளின் அரசன் என்றும் அழைப்பர்.
முருங்கை மருத்துவ குணம் நிறைந்த இலை மட்டுமல்ல, பூ, காய், பிசின் பட்டை மற்றும் வேர் கூட மருத்துவத்துக்கு பயன்படும். அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி முருங்கையை தவிர வேறு எந்த கீரைக்கும் கிடையாது. ஜீரணக் கோளாறு, மந்த நோய், உடல் சூட்டை குறைக்கும்.
100 கிராம் முருங்கைக் கீரையில் 92 கலோரி கிடைக்கும். அதில் நீர் 76 சதவீதம், மாவுசத்து 12.5, புரதம் 67, கொழுப்பு 1.6, தாதுப்பொருள் 1.26, நார்ச்சத்து ஒரு சதவீதம், கால்சியம் 440 மி.கி., பாஸ்பரஸ் 70 இரும்பு 7, வைட்டமின் சி 220 மி.கிராம் மற்றும் பி காம்ப்ளக்ஸ சிறிதளவு உள்ளன.
வறட்சியான இடம் முதல் மணற்பாங்கான இடம் வரை அங்ககப்பொருட்கள் அதிகம் உடைய, கார அமில நிலை 6 முதல் 7.5 வரையுள்ள மண்வாகு முருங்கை வளர்ப்புக்கு ஏற்றது.
25 முதல் 30 டிகிரி செல்சியஸ் மிதமான வெப்ப நிலையில் முருங்கை செடி வளர்ச்சி, பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து காய் பிடிக்கும் திறனும் அதிகரிக்கும்.
38 டிகிரி செல்சியஸ்க்கு மேல் அல்லது மிக குறைவான வெப்பநிலையில் பனிவீசும் தருணம் முருங்கை பாதிப்பு அடையும். அதிகம் பூக்கள் உதிரும். காய்பிடிப்புத்திறன் மிகவும் குறையும்.
முருங்கையில் குட்டை, மிக நீளமான சதைப்பற்றுள்ள (ஜாப்னாலாஸ்) காய் ரகங்கள் உள்ளன. பி.கே.எம்.1, 2, கே.எம்.1 ரகங்கள் நீளமான காய் தரும். செடி முருங்கை வகையை சேர்ந்தவை. ஒரே மரத்தில் குட்டைகாய்கள் ஆயிரம் கூட காய்க்கும். செடி முருங்கை 300 முதல் 400 காய்கள் வரை தரும்.
ஒரு எக்டேர் நடவுக்கு 500 கிராம் விதை தேவை. நேரடியாக விதைப்பதை விட 10 செ.மீ., உயரம், 10 செ.மீ., விட்டமுடைய பைகளில் விதைத்து நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். மண், மணல் நன்கு மட்கிய தொழு உரம் சம பங்கு கலந்த கலவையை நாற்று வளர்ப்புக்கு பயன்படுத்தலாம்.
35 முதல் 40 நாட்கள் வயதுடைய கன்றை விதைக்கு தேர்வு செய்து நடவு செய்யலாம். நடவு வயலை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும் சட்டிக்கலப்பை கொண்டு ஒரு முறையும் உழ வேண்டும். பின்னர் 3 முறை கொக்கி கலப்பை கொண்டு உழுது பண்படுத்த வேண்டும்.
3 மீட்டர் இடைவெளியில் சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு இணை குழாய்கள் அமைத்து அதற்கு இணையாக 2 மீட்டர் இடைவெளியில் ஒன்றரை அடி ஆழ, அகல, உயரத்தில் குழி தோண்டி தலா 15 கிலோ தொழு உரம் இட வேண்டும். 100 கிராம் யூரியா, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 கிராம் பொட்டாஷ் கலந்து இட வேண்டும். நட்ட 6வது மாதம் குழிக்கு 100 கிராம் யூரியா இட்டு மண் அணைக்கலாம். நடவு செய்த கன்றுகள் முளைத்து 75 செ.மீ. உயரம் வளர்ந்ததும் நுனிகளை கிள்ள வேண்டும்.
முருங்கைக்கு நீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும். நேரடி உரம் இடாவிட்டால், எக்டேருக்கு தழை, மணி சாம்பல் சத்துக்கள் 144:6:48 கிலோ என்ற விகிதத்தில் இட வேண்டும்.
- இளங்கோவன்
வேளாண்மை இணைஇயக்குநர், காஞ்சிபுரம்
98420 07125.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!