'அல்சர்' எனப்படும் புண், பொதுவாக வயிற்றில் வரும் என்று தான் நினைப்போம். ஆனால், உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். அல்சர் ஏற்பட்ட இடத்தில், தொற்று இல்லாமல், சீரான ரத்த ஓட்டம், நரம்புகளில் பாதிப்பு இல்லாவிட்டால், அல்சர் தானாகவே குணமாகி விடும். ஊட்டச்சத்து குறைபாடு, 'ஹெபாடிடிஸ்' தொற்று, இவையும் அல்சர் ஆறுவதை தாமதப்படுத்தும்.
பொதுவாக, உடலின் மேல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். எனவே தலையிலோ, கைகளிலோ வெளிப் பகுதியில் அல்சர் வந்தால், விரைவில் குணமாகி விடும். கால்களில் இயல்பாகவே ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால், புண் ஆறுவதற்கு தாமதமாகலாம்.
நல்ல ரத்தம் அதாவது ஆக்சிஜன் தரக்கூடிய ரத்தக் குழாயில் பாதிப்பு இருந்தால், கணுக்கால், விரல்கள் என்று எந்த இடத்தில் ரத்த ஓட்ட பாதிப்பு இருக்கிறதோ, அதற்கு ஏற்றாற் போல அல்சர் வரலாம். பாதிப்பின் அளவிற்கேற்ப வலி அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும். ஓய்வாக இருக்கும் நேரத்திலும், வலி பொறுக்க முடியாமல் இருக்கும்; மிதமான பாதிப்பு இருந்தால், நடக்கும் சமயத்தில் மட்டும் லேசாக வலியை தரலாம்.
சர்க்கரைக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு இவற்றை கட்டுப்பாட்டில் வைத்து, மாத்திரைகள் அல்லது 'பை - பாஸ், ஆஞ்சியோபிளாஸ்டி' செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். ரத்த ஓட்டம் இல்லாத போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, கிருமித் தொற்று ஏற்படும். இதனால் நிலைமை இன்னும் மோசமாகலாம்; சமயங்களில் கால்களையே எடுக்க வேண்டிய நிலையும் வரலாம்.
ரத்த நாளம் சுருண்டு, விரிவடைந்து, அசுத்த ரத்தம் இதயத்திற்கு செல்லாமல் தேங்குவதால் வரும், 'வெரிகோஸ் வெயின்' பிரச்னையில், கணுக்காலைச் சுற்றி அல்சர் வரும்; இதில் வலி லேசாகவே இருக்கும்.
ஆனால் குணமடைய தாமதமாகலாம். அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தால், கணுக்கால்களில் அல்சர் வரும். இது தொடர்ந்தால் கணுக்கால்களைச் சுற்றி பெரிய புண்ணாக ஆறாமல் இருக்கும்.
இது தவிர, 'ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ்' போன்ற சில பிரச்னைகளில், நம்முடைய எதிர்ப்பு செல்கள், உடலுக்குள்ளேயே சேர்வதால் கை, கால்களில் சிறியதாக புண்கள், எரிச்சல், வலியுடன் வரலாம். கால்களில் அடிபட்டதாலோ, நல்ல, கெட்ட ரத்த ஓட்ட பாதிப்பாலோ புண்கள் வரலாம். அல்சர் தானாகவே சில நாட்களில் ஆறாமல், அப்படியே இருந்தால் என்ன காரணம் என்று தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சை செய்வது அவசியம்.
டாக்டர் எம்.பக்தவச்சலம்,
ரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவர்,ஓமந்துாரார் அரசு மருத்துவமனை,
சென்னை.
98401 33365
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!