'அப்பா, அம்மாகிட்டே பேசணும்!' ஏக்கம் வழியச் சொல்கிறார் 'கிக் பாக்ஸிங்' சாம்பியனான, 19 வயது வர்ஷினி ராஜபாண்டியன்.
மதுரையின் சமீபத்திய பெருமை... நவம்பர் 2022ல் சர்வதேச 'கிக் பாக்ஸிங்' களத்தில் வர்ஷினி ஜெயித்து வந்த தங்கம்! இதற்காக வாழ்த்து சொன்ன மதுரை எம்.பி., சு.வெங்கடேசனிடம் இவர் வைத்த கோரிக்கை...
'என்னை மாதிரி அதிகாலையில கிளம்பி பயிற்சிக்கு வர்றவங்க சாப்பிட்டு வர்றதில்லை; இதுக்கு ஏதாவது பண்ணுங்க சார்!'
இந்த வயசுல எல்லாருக்காகவும் யோசிக்க முடியுதா வர்ஷினி?
அதிகாலையில 5:00 மணிக்கு பேருந்து. மதுரை மாநகராட்சி வளாகத்துல காலை 6:00 - 8:00 மணி வரைக்கும் 'கிக் பாக்ஸிங்' பயிற்சி. வியர்வை காயுறதுக்குள்ளே மீனாட்சி கல்லுாரிக்குப் போகணும். 9:00 - 2:00 மணி வரை பி.பி.ஏ., வகுப்பு!
அப்புறம், 3:15 மணிக்கு வீடு திரும்பினா, 4:00 மணி வரைக்கும் வீட்டு வேலை. மறுபடியும் பேருந்து பயணம். மாலை 5:00 - 9:00 மணி வரைக்கும் 4,500 ரூபாய் ஊதியத்துக்கு 'பீட்சா' கடையில வேலை. 10:00 மணிக்கு வீடு. 11:00 மணிக்கு துாக்கம். எல்லாருக்காகவும் யோசிக்க இப்படி ஒரு வாழ்க்கை போதாதா?
ஆறாம் வகுப்பில் 'பாக்ஸிங்' பயிற்சி எடுக்கத் துவங்கிய வர்ஷினி, பிளஸ் 2 முடிப்பதற்குள் மாநில அளவில் 3 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை பெற்றார். இரண்டு நிமிடங்களில் ஒரு ரவுண்டை முற்றுப்பெறச் செய்யும், 'கிக் பாக்ஸிங்'கின் மீது ஈர்ப்பு வர, அதில் தீவிர பயிற்சி பெற்று தற்போது சர்வதேச அளவில் தங்கம் ஜெயித்திருக்கிறார்.
அப்பா - அம்மாகிட்டே என்ன பேசணும் வர்ஷினி?
அக்காவுக்கும் தம்பிக்கும் செய்ற அளவுக்கு எனக்கு எதுவும் செய்றதில்லைன்னு அம்மா மேல வருத்தம்; ஆனா, அவங்களுக்கு தராத சுதந்திரத்தை எனக்கு தந்ததாலதான் என்னால இப்படி சாதிக்க முடிஞ்சதுன்னு இப்போ புரியுது; புரிஞ்சாலும், அம்மாவா வந்து பேசணும்னு மனசு எதிர்பார்க்குது!
அப்பாவோட குடிப்பழக்கத்தால அவர்கிட்டே நான் பேசினதே இல்லை. 'உன் மகளா நான் சாதிக்கிறதுக்கு நீ பெருமைப்படுறியாப்பா'ன்னு அவர் கைபிடிச்சு கேட்கணும்!
தமிழகத்துல பிறந்ததுக்கு பெருமைப்படுறீங்களா?
ஆசிய விளையாட்டு போட்டிகள்லேயும், 2028 ஒலிம்பிக்லேயும் சாதிக்கணும்னு ஆசைப்படுற எனக்கு, என் தமிழகம் உதவி பண்ணும்ங்கிற நம்பிக்கை இருக்கிறதால இப்போதைக்கு பெருமைப்படுறேன்.
மேலுார், வெள்ளரிப்பட்டி கிராமத்து பெண்கள் தற்போது வர்ஷினியிடம் வைக்கும் ஒரே கோரிக்கை...
'என் மகளுக்கும் இதை கத்துக் கொடேன்!'
ஆசைகள் 1000* அம்மாவுக்கு தங்க சங்கிலி வாங்கி தரணும்* 'டாஸ்மாக்' மூடப்படணும்* என்னால என் கிராமம் பிரபலமாகணும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!