ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராக வேலைப் பார்க்கிறாள், சிநேகா. சாயங்காலம் அவளுக்கு இருக்கிற வேலையைப் பொறுத்து முன்னே, பின்னே வீட்டுக்கு வருவாள்.
இரவு மணி, 10:00 ஆகியும், சிநேகா வராததால், கவலையுடன், வாசலில் நின்று, மகளின் ஸ்கூட்டி வருகிறதா என, பார்த்துக் கொண்டிருந்தாள், மாலதி.
மாலாவின் கணவர் ராஜேந்திரன், 'டிவி'யில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தால், உலகமே மறந்து விடும். தற்போது, உலகக் கோப்பை போட்டி நடப்பதால், அதில் ஆழ்ந்து விட்டார். ஆனால், மாலதிக்குத் தான், மகளை காணாமல் கவலை. அப்போது, அவளருகே வந்து நின்றது, சிநேகாவின் ஸ்கூட்டி பெப்.
''அப்பாடி வந்துட்டியா...'' என்றாள், மாலா.
''அய்யோ, அம்மா... உன் அக்கறைக்கு அளவே இல்லையா... நான் என்ன சின்ன பாப்பாவா, மிட்டாய் கொடுத்து, யாராவது கூட்டிக்கிட்டுப் போறதுக்கு... துாசியிலும், பனியிலும் ஏம்மா வெளியே வந்து நிக்குற... அப்புறம் தலைவலிக்குது, மூச்சுத் திணறுதுன்னு கஷ்டப்படப் போற...'' என்று, அம்மாவின் தலையை செல்லமாக தடவினாள், சிநேகா.
''கொஞ்சம் சீக்கிரம் வரக் கூடாதா... காலம் கெட்டுக் கெடக்கிற நிலையில, நீ வர கொஞ்சம் லேட்டானாலும், வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. ஆபிசுல சொல்லிட்டு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர பாரும்மா...
''இன்னைக்கு நாடு இருக்கிற நிலையில, பெண்ணுங்க பத்திரமா வீடு வந்து சேருவாங்களான்னு உயிரை கையில பிடிச்சிட்டு காத்திருக்க வேண்டியிருக்கு. கொஞ்சம் சீக்கிரம் வந்து, என் வயித்துல பாலை வார்த்திடும்மா,'' என்று புலம்பினாள், மாலதி.
''கொஞ்சம் சும்மா இருக்கியா... உன் பொண்ணு, கராத்தேயில், 'பிளாக்பெல்ட்'ன்னு தெரியும்ல... எவனாவது என்னை நெருங்கினா, அவனைத் தொலைச்சுப்புடுவேன். கவலைப்படாம நிம்மதியா இரும்மா,'' என்றபடி, உடை மாற்றப் போனாள்.
மறுநாள், மொபைல் போனுக்கு சார்ஜ் போட்ட சிநேகா, ஞாபக மறதியில் ஆபீஸ் சென்று விட்டாள். ஆபிசிலிருந்து, மாலதிக்கு போன் செய்து, ''அம்மா, என் மொபைல் போனில் யார் கூப்பிட்டாலும், இந்த நம்பரில் பேசச் சொல்லும்மா,'' என்று, ஒரு நம்பரை கொடுத்தாள்.
அன்று முழுக்க ஸ்நேகாவுக்கு வந்த எல்லா அழைப்புகளுக்கும், அவள் கொடுத்த நம்பரில் பேசுமாறு தகவல் கூறினாள், மாலதி.
மாலை, 6:00 மணிக்கு அழைப்பு வர, வழக்கம் போல, ''சிநேகா, மொபைல் போனை வீட்டில் வைத்துப் போய் விட்டாள். இந்த நம்பரில் கூப்பிடுங்கள்...'' என்றாள், மாலதி.
''அம்மா, நீங்க சொல்றது, எங்க ஆபிஸ் நம்பர் தான். சிநேகா, வழக்கம் போல சாயங்காலம், 5:00 மணிக்கே வீட்டுக்கு கிளம்பிட்டாங்க. இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்கணும்; வழியில் ஏதாவது டிராபிக்கில் மாட்டியிருப்பாங்க. அவங்க வீட்டுக்கு வந்ததும், நாங்க கூப்பிட்டோம்ன்னு சொல்லுங்க,'' என்று, வைத்து விட்டார், மறுமுனையில் பேசியவர்.
மாலதிக்கு முதன் முதலாக, சிநேகா மீது சந்தேகம் வர ஆரம்பித்தது. சந்தேகம் கோபமாகி, வெறுப்பாக உருவெடுத்தது.
'நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்சாலும், அதோட குணம் அதை விட்டு போகாதாம். எவளோ ஒருத்தி கள்ளத்தனமா பெத்து, ஊருக்கு தெரிஞ்சா அவமானம்ன்னு பயந்து, அநாதை இல்லத்தில் விட்டுட்டுப் போனாள்.
'அநாதை நாயை துாக்கி பாசமா வளர்த்தாலும், அதோட பிறவிக் குணம் போகலை... தினமும் சாயங்காலம் ஆபிஸ் விட்டு கிளம்புகிறவள், வீட்டுக்கு வராமல் எங்கோ ஊர் சுற்றி விட்டு, இரவு, 10:00 மணிக்கு வருகிறாள்... கேட்டால், 'ஆபிசில் வேலை'ன்னு பொய் சொல்கிறாள்.
'இன்னைக்கு வீட்டுக்கு வரட்டும், ரெண்டுல ஒண்ணு கேட்கணும். ஒழுங்காயிருந்தா இந்த வீட்டுல இரு... இல்ல, ஏதாவது ஹாஸ்டலைப் பார்த்து ஓடிருன்னு விரட்டி விட்டுற வேண்டியதுதான்...' என்று நினைத்தபடி, சிநேகாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள், மாலதி.
மாலதியால் மனதில் உள்ள பொருமலை அடக்க முடியவில்லை. கணவர் ராஜேந்திரனிடம், ''ஏங்க... அந்த அநாதை நாய் பண்ணியிருக்கிற காரியம் என்னன்னு தெரியுமா?'' என்றாள்.
''யார் மேல உனக்கு கோபம்... என்னவாயிற்று?'' என்றார்.
''அதான் நாம வீட்டுல வளர்த்துக்கிட்டு இருக்கோமே ஒரு அநாதை நாயி... அதப்பத்தி தான் சொல்றேன்,'' என்றாள், மாலதி.
''மாலதி, உனக்கு என்ன புத்திக் கெட்டுப் போச்சா? சிநேகாவையா சொல்ற... அவ, நம்ம பொண்ணுடி.''
''ஆமா... நம்ம பொண்ணு... பத்து மாசம் நான் சொமந்து பெத்தப் பொண்ணு பாருங்க... அனாதை ஆசிரமத்திலிருந்து துாக்கிட்டு வந்த சனியன் தானே...'' என்று பொரிந்தாள், மாலதி.
''இதப்பாரு, முதல்ல என்ன நடந்திச்சுன்னு நிதானமா சொல்லு. அப்புறம் கோபப்படு. இவ்வளவு நாளும், அவள என் பொண்ணு, என் செல்லம்ன்னு கொஞ்சிக்கிட்டிருந்த...
''ஸ்கூல்ல பரிசு வாங்குறப்ப, 12ம் வகுப்புல, 'ஸ்டேட் பர்ஸ்ட்' வந்தப்ப, கல்லுாரி, 'கேம்பஸ் இண்டர்வியூ'வில் தேர்வாகி, நல்ல சம்பளத்துல வேலைக்குப் போனப்ப வரை, அவ உம் பொண்ணா இருந்தவ, இன்னைக்கு மட்டும் அனாதை நாயா மாற காரணம் என்ன?''
''தினமும் ஆபிசுல, வேலை அதிகமா இருக்குன்னு பொய் சொல்லிட்டு, எங்கேயோ ஊர் சுத்த போயிருக்கா... இன்னைக்கு அவ மொபைல் போனை வீட்டுல வச்சிட்டுப் போனதால, உண்மை தெரிஞ்சுது. இன்னைக்கு அவ வரட்டும், எங்கே போய் ஊர் மேய்ஞ்சுட்டு வரான்னு தெரிஞ்சுக்கலாம்...'' என்று, கோபத்தில் கொந்தளித்தாள்.
''இங்கப் பாரு மாலதி... 'கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்'ன்னு, பெரியவங்க சொல்லியிருக்காங்க. இன்னைக்கு அவகிட்ட எதுவும் கேட்க வேண்டாம்.
''நாளைக்கு சாயங்காலம், அவளுக்கு தெரியாம, நாமளே நேரடியா போய், அவ எங்க போறா, என்ன பண்ணுறான்னு பார்த்துட்டு வரலாம். அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு. வார்த்தையை கொட்டிடாதே, அப்புறம் அள்ள முடியாது,'' என்று, மாலதியை அடக்கி வைத்தார்.
என்னதான் கணவர் சமாதானப்படுத்தினாலும், மாலதி மனசு பொருமிக்கொண்டே இருந்தது. சிநேகாவைப் பார்க்க பிடிக்காமல், தலைவலி என்று சொல்லி படுத்துக் கொண்டாள். மறுநாள் சிநேகாவை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள்.
''அம்மா... நேத்து நான் வர்றப்ப, தலைவலின்னு படுத்திருந்தியே... இப்போ பரவாயில்லையா?'' என்று, பாசத்துடன் கேட்டாள், சிநேகா.
''பரவாயில்லை...'' அவளின் முகம் பார்க்காமல் பதில் சொல்லி, வேலை இருப்பது போல் சமையலறைக்கு சென்றாள்.
இன்னும் சிறிது நேரம் இருந்தால், கணவனின் வார்த்தையையும் மீறி, கோபத்தை வெளிப்படுத்தி விடுவோமோ என்ற பயம் தான் காரணம்.
ஏற்கனவே பேசி வைத்திருந்தப்படி, ஆட்டோவில் ஏறி, மகள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சற்று துாரத்தில் நின்றனர்.
சரியாக மாலை, 5:00 மணிக்கு, ஸ்கூட்டி பெப்பில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள், சிநேகா.
''நேத்து, நான் சொன்னப்ப நம்பல... இப்ப பாருங்க, 5:00 மணிக்கே ஆபிசை விட்டு கிளம்பியாச்சு...'' என்றாள், மாலதி.
''சரி, என்ன நடக்குதுன்னு முழுசா தெரிஞ்சுக் கலாமே,'' என்றார், ராஜேந்திரன்.
'அன்னை சாரதா அனாதை இல்லம்' முன், சிநேகாவின் ஸ்கூட்டி போய் நின்றது. அங்கு உள்ளே போனவள், இரவு, 7:30 மணிக்கு வெளியே வந்தாள். அடுத்து, அவள் எங்கே போகிறாள் என, ஆட்டோவில் பின் தொடர்ந்தனர்.
அடுத்து, 'ராமகிருஷ்ணர் முதியோர் இல்லம்' முன் நிறுத்தி, அவள் உள்ளே போகவும், அங்குள்ள வாட்ச்மேன், டீ குடிக்க வெளியே வந்தான்.
அவனிடம், ''இப்போ உள்ளே ஒரு பெண் போனாளே, அந்தப் பொண்ணு யாரு... தினமும் இங்கே வருமா, அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சவங்க இங்க யாராவது இருக்காங்களா?'' என்று ராஜேந்திரன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, மாலதியின் மனது இவ்வாறு நினைக்க ஆரம்பித்தது.
'சிநேகாவிற்கு அவள் அப்பா, அம்மா யாருன்னு தெரிஞ்சிருக்குமோ... ஒருவேளை, இங்கே தங்கியிருக்கின்றனரோ... அவர்களைப் பார்க்கத்தான் தினமும் இங்கே வருகிறாளோ? என்னதான் நாம வளர்த்தாலும், அவ சொந்த அப்பா, அம்மா யாருன்னு தெரிஞ்ச உடனே நம்மள மறந்துட்டு, அவங்கள பார்க்க தினமும் வந்திடுறாளே...' என்று ஆதங்கப்பட்டது.
''இந்தப் பொண்ணு, குறிப்பா யாரையும் பார்க்க வர்றது கிடையாது. இங்கேயிருக்கிற எல்லாரையும் பொதுவா பார்த்துட்டு, சாயங்காலம் கொடுக்க வேண்டிய மருந்து, மாத்திரையை கரெக்டா எடுத்துக் கொடுக்கும்.
''சிலருக்கு, புத்தகம் வாசிச்சுக் காட்டும். சிலருக்கு, கை காலில் மருந்து தடவி விடும். மொத்தத்தில் இங்க இருக்கிற எல்லாரையும் பெத்த மகள் மாதிரி பார்த்துக்கிடும்.
''சனி, ஞாயிறு மட்டும் வராது. அப்ப இங்க உள்ளவங்க இந்தப் பொண்ணை காணாம தவிச்சிடுவாங்க. பெத்த பிள்ளைகளாலே புறக்கணிக்கப்பட்டு, இங்கே தங்கியிருக்கிற முதியோர்களுக்கு, இந்தப் பொண்ணு ஒரு வரப்பிரசாதம்.
''அதுமட்டுமல்ல, இங்கே வருவதற்கு முன், அன்னை சாரதா அனாதை இல்லத்திற்குப் போய் அங்குள்ள பிள்ளைகளுக்கு தினமும் பாடம் சொல்லிக் கொடுக்கும். அதனால, அங்குள்ள பிள்ளைகள் இப்ப படிப்புல நல்லா கெட்டிக்காரங்களா ஆயிட்டாங்க...
''இந்தப் பெண்ணை பெத்த மகராசி யாரோ, அவ நல்லா இருக்கணும். இந்தக் காலத்துப் பிள்ளைங்க எல்லாம், டிஸ்கோ, பார்ட்டின்னு அலையுறப்ப, இது மட்டும் விதிவிலக்கா, இப்படி சேவை செஞ்சுட்டு இருக்கு...'' என்று, வாட்ச்மேன் சொல்ல சொல்ல, மாலதியின் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
உடனே, ஆட்டோவில் கிளம்பி வீட்டிற்குப் போய், மகளின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வாசலில் ஸ்கூட்டி பெப்பை சிநேகா நிறுத்தவும், வாசல் என்றும் பார்க்காமல் அவள் காலில் விழுந்தாள், மாலதி.
''என் செல்லமே... உன்னைப் போய் தப்பா நினைச்சுட்டேனே, என்னை மன்னிச்சிடும்மா. இந்த ஜென்மத்தில் உன்னை என் வயிற்றில் சுமக்குற பெருமை கிடைக்காட்டியும், அடுத்த ஜென்மத்திலேயாவது அந்தக் குடுப்பினையை கடவுள் எனக்கு கொடுக்கணும்மா,'' என்று கண்ணீர் விட்டாள்.
முதலில் அவளுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பிறகு தான் என்ன நடந்திருக்கும் என்று புரிந்து, ''அய்யோ அம்மா... பெத்த பொண்ணோட கால்ல விழுந்து எனக்கு பாவத்தை சேர்க்காதீங்க... என்னைப் பொறுத்த வரைக்கும், நீங்க தான் என்னைப் பெற்ற தாய் - தகப்பன்.
''கடவுள் எனக்கு நல்ல தாயையும், தந்தையையும் தந்திருக்கார். ஆனா, அந்த அனாதை இல்லத்தில் உள்ள பிள்ளைகளும், முதியோர் இல்லத்தில் உள்ள பெரியவர்களும் பாவம். அவங்களுக்குன்னு யாருமே இல்லை. அதனாலதான், தினமும் போய் அவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவியை செய்கிறேன்,'' என்றாள், சிநேகா.
''இனி, நீ மட்டும் தனியா போக வேண்டாம்மா. நாங்களும் கூட வர்றோம். நீ வர்ற வரைக்கும் நாங்க, 'திக் திக்'ன்னு காத்திருக்க வேண்டியிருக்கு... எங்களால் முடிஞ்சத நாங்களும் பண்றோம்,'' என, மாலதி சொல்லவும், கண்ணில் கண்ணீரோடு, ராஜேந்திரனும் ஆமோதித்தார்.
- எஸ். செல்வசுந்தரி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!