இந்த நாள் எப்போது, எந்த நாட்டில் துவங்கப்பட்டது என்பதற்கு, தெளிவான வரலாறு இல்லை. 19ம் நுாற்றாண்டு முதல், இந்த தினம் மிகப் பிரபலமாக இருந்தாலும், உலகில் எந்த நாட்டிலும், பொது விடுமுறை இருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த, 1466ல், மன்னன் பிலிப்பை, அரச சபையின் ஆஸ்தான விகடகவி, பந்தயம் ஒன்றில் சூளுரைத்து, அனைவர் முன்னிலையிலும் அவரை முட்டாளாக்கி ஜெயித்த நாள் என்ற, உறுதிப்படுத்தப்படாத தகவலும் உள்ளது.
ஐரோப்பாவின் பல நாடுகளில், 16ம் நுாற்றாண்டு வரை, ஏப்., 1ம் தேதி தான், புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டது. பின்னர், 1562ல் இருந்த அப்போதைய போப், 13வது கிரிகிரி என்பவர், பழைய ஜுலியன் ஆண்டு கணிப்பு முறையை ஒழித்து, புதிய கிரிகோரியன் ஆண்டு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி, ஜன., 1ம் தேதி, புத்தாண்டு தினமாக கருதப்பட்டது.
இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், பழைய வழக்கப்படி, ஏப்., 1ம் தேதியையே, புத்தாண்டாக கொண்டாடினர். மேலும், அந்த கால கட்டத்தில், இந்நாளில் இருப்பது போல் நவீன சாதனங்கள் இல்லாத காரணத்தாலும், சில காலம் ஆனது.
ஜன., 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாட துவங்கிய மக்கள், பழைய வழக்கமான, ஏப்., 1ம் தேதியில் கொண்டாடுபவர்களை, 'ஏப்ரல் முட்டாள்' என்று அழைத்தனர். அவர்களுக்கு, முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பி, ஏமாற்றி மகிழ்ந்தனர்.
இந்த வேடிக்கை கேலிக்கூத்துகள், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வேகமாக பரவி, இன்று உலகம் முழுவதும் பிரசித்தமாகி விட்டது.
இன்னொரு கதை ஒன்றும் சொல்லப்படுகிறது...
முட்டாள்கள் தினம், ஆரம்பத்தில், 'ஏப்ரல் மீன்கள் தினம்' என்றே கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. ஏப்ரல் மாதத் துவக்கத்தில் பிரான்சில் உள்ள ஆறுகளில், நிறைய மீன்கள் இருக்கும் என்பதால், அவற்றை பிடிப்பது மிகவும் சுலபம். ஆகையால், மீன்கள் ஏமாறும் தினமாக, ஏப்ரல் 1ம் தேதி கருதப்பட்டது. இதுவே, காலப்போக்கில் மனிதர்களை ஏமாற்றும் தினமாக மாற்றம் பெற்றது.
பிரான்ஸ் நாட்டு சிறுவர்கள், காகிதத்தில் மீன் போன்று செய்து, தன் நண்பர்களின் முதுகில் ஒட்டி அனுப்பி, கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற பிள்ளைகளைப் பார்க்கும் மற்றவர்கள், அவர்களை, 'ஏப்ரல் மீன்' என்று அழைத்து, ஜாலி செய்துள்ளனர்.
கடந்த, 1986ல் வெளியான, ப்ரெட் வால்டன் இயக்கிய, ஏப்ரல் பூல்ஸ் டே திரைப்படம், மிகப் பிரபலமானது. நடிகர்களான டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர் மற்றும் டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் நிறுவனத்தார் தயாரித்திருந்த இப்படம், அந்நாளில் ஒளி நாடாக்களிலும் வெற்றிநடை போட்டு, தடம் பதித்தது.
ஏமாற்றுவதையும், ஏமாறுவதையும் சிரித்தபடி ஏற்கும் பக்குவத்தை, பேதமில்லாமல் ஊட்டும் இந்த தினத்தை, பொது விடுமுறை எனும் சம்பிரதாய சடங்கு சிறையில் முடக்காமல் விட்டதும், கூடுதல் சிறப்பு தான்.
உலகம் முழுவதும், பலரை பால்ய பருவத்துக்கு அழைத்துச் செல்லும் இந்த திருநாளைக் கொண்டாடி மகிழ தயாராகி விட்டீர்கள் தானே!
இ. கஸ்துாரி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!