சிறுதானியங்கள் மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் உணவாக பயன்படுகிறது. மண் மற்றும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறு தானியங்கள் சி4 வகையைச் சேர்ந்தவை.
இவை ஒளிச்சேர்க்கைக்கு அதிகளவில் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு அதிகளவில் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதனால் உலகம் வெப்பமயமாவதை குறைப்பதில் இவற்றின் பங்கு அதிகம்.
நெற்பயிர்கள் வளர்வதற்கு சிறுதானியங்களை விட இரண்டரை மடங்கு தண்ணீரை எடுத்துக் கொள்கின்றன. அனைத்து சிறுதானியங்களும் அனைத்து வகையான நிலத்திலும் குறைந்த ஊட்டச்சத்து, குறைந்த நீர் உள்ள இடங்களிலும் வளரும். அதிக வெப்பத்தை தாங்கி வளரும்.
உலக சிறுதானிய உற்பத்தியில் 20 சதவீதம் இந்தியாவில் உள்ளது. ஆசியாவில் இந்தியாவின் உற்பத்தி 80 சதவீதம். தண்ணீர் குறைந்த, மானாவாரி பூமி மற்றும் குறிஞ்சி நில மலைப்பகுதிகளில் சாமை தானியம் பயிரிடப்படுகிறது. அதிக வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது சாமை. காற்றோட்டமான மணற்பாங்கான நிலங்களில் சாமை நன்கு வளரும்.
திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தர்மபுரி, வேலுார், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவையில் சாமை பரவலாக பயிரிடப்படுகிறது. சாமை பயிரிட ஆடி மற்றும் புரட்டாசி உகந்த பட்டமாக உள்ளது. கோ 3, கோ 4, பையூர் 1, 2 ரகங்கள் தமிழகத்திற்கு உகந்தது. விதைகளை விதைப்பதற்கு முன் நிலத்தை 3 முறை உழவேண்டும். அடியுரமாக 12.5 தொழுஉரம், 44 கிலோ தழைச்சத்து, 24 கிலோ மணிச்சத்து இட வேண்டும்.
ஒரு கிலோ விதைகளுக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பன்டசிம் மருந்து கலந்து விதைப்பதன் மூலம் விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். ஒரு எக்டேருக்கு தேவையான 12.5 கிலோ விதைகளை 15 கிலோ மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.
செடிகளுக்கு இடையே 10 செ.மீ., இடைவெளி இருக்குமாறு பார்க்க வேண்டும். விதைத்த 3ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் தருணம் மற்றும் விதை முதிர்ச்சி பருவத்தில் பயிருக்கு நீர் பாய்ச்சலாம். விதைத்த 15வது மற்றும் 40 வது நாளில் களைஎடுக்க வேண்டும். 80 முதல் 90 நாட்களில் சாமை அறுவடை செய்யலாம்.
எக்டேருக்கு 1000 முதல் 1300 கிலோ பயிர் கிடைக்கும்.
ஜவஹர்லால், டீன், அர்ச்சனா, உதவி பேராசிரியை
உழவியல் துறை, அம்பிகா, உதவி பேராசிரியை
விதைநுட்பவியல் துறை, எஸ்.ஆர்.எம்., வேளாண் கல்லூரி
செங்கல்பட்டு, 84891 74468
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!