கண்ணுக்கு புலப்படாத நுாற்புழுக்கள் பயிரை தாக்குவதால் பயிர்களின் வளர்ச்சி குன்றி வெளிர்நிறமாக மாறி இலை மற்றும் காய்கள் சிறுத்து விளைச்சல் குறையும்.
நுாற்புழு தாக்குதலை துல்லியமாக கண்டறிந்தால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும். உருளை வடிவ புழுக்கள் மண் மற்றும் தண்ணீரில் வாழ்கின்றன. பொதுவாக நுாற்புழுக்கள் தாக்கப்பட்ட பயிர்கள் சத்து பற்றாக்குறையில் பாதிக்கப்பட்டது போல் தோன்றும். நுாற்புழுக்களுக்கு தலைபாகத்தில் குத்துாசி போன்ற அமைப்பு உள்ளதால் வேரிலிருந்து சாற்றை உறிஞ்சி சத்துகள் பயிருக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.
நுாற்புழுக்களால் பாதிக்கப்பட்ட பயிர்களில் வளர்ச்சி குறையும். பக்ககிளைகள் குறைந்து இடைக்கணு நீளம் குறைந்து இலைகள் பச்சையம் இழந்து பழுப்புநிறமாக மாறும். இலைஓரம் சிகப்பாக மாறும். இலைநுனி வெண்மை நிறமாக கீழ் நோக்கி தொங்கும். பூக்கள், மொட்டுகள் உருக்குலைந்து விடும்.
எனவே வேர்களை பரிசோதிப்பது அவசியம். எலுமிச்சையில் சல்லிவேர் இல்லாமல் கட்டைவேராக இருக்கும். நெல்லில் வேர்கள் நிறம் மாறியும் பருத்தியில் சல்லிவேர் குறைவாகவும் கரும்பு, வாழையில் வேர்களில் கருமை நிறமும், பயறுவகை பயிர்களில் முத்து போன்ற வெண்நுாற்புழுக்கள் வேருடன் ஒட்டி இருக்கும்.
நுாற்புழுக்களை முழுமையாக கட்டுப்படுத்த இயலாது. அவற்றின் அடர்த்தி பரவலை குறைப்பதால் தாக்குதல் குறைவாகும். பயிர் சுழற்சி, ஊடுபயிர், அங்கக இடுபொருள் பயன்படுத்துதல், பசுந்தாள் உர சாகுபடி, அங்கக இடுபொருட்களான தொழுஉரம், மண்புழு உரம், மட்கிய தாவர கழிவு இட வேண்டும். அங்கக இடுபொருள் இடும் போது இயற்பியல் வேதியியல் பண்பில் சிலமாற்றம் ஏற்படுத்தும். பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயிர் ஊட்டத்தை அதிகரிப்பதால் நுாற்புழு தாக்கம் குறையும். அங்கக குழு இடு பொருட்கள் தண்ணீரில் கரையும் போது பீனால், அங்கக அமிலம் போன்ற திரவங்களை வெளியிடும். இவை நுாற்புழுக்களை கட்டுக்குள் வைத்திருக்கும். வேப்பம் புண்ணாக்கு நுாற்புழு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நெல்லுக்கு பதில் வாழை, வாழைக்கு பதில் கரும்பு என பயிர் சுழற்சி செய்ய வேண்டும். கரும்பில் செண்டுமல்லி, வாழையில் சாமந்தி, பயறுவகைகளை ஊடு பயிராக சாகுபடி செய்தும் நுாற்புழு தாக்குதலை தடுக்கலாம்.
மதுரைசாமி, உதவி இயக்குனர்
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை
சிவகங்கை, 94439 11431
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!