Load Image
Advertisement

மறதிக்கும், மறதி நோய்க்கும் வித்தியாசம் தெரியாது!

இளம் வயதில் நோய்கள் என்றாலே சில ஆரம்ப அறிகுறிகள் இருக்கும். ஆனால், முதுமையில் இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல் எந்த அறிகுறியும் இல்லாமல் பல மாதங்கள், ஏன் பல ஆண்டுகள் கூட மறைந்திருந்து தாக்கும்.

நோய் முற்றிய நிலையில் அந்நோய்களின் தொல்லைகளே அதன் ஆரம்ப அறிகுறிகள் போலத் தோன்றும். முற்றிய நிலையில் நோய்களை கண்டறியும் போது, அதற்கு அளிக்கும் சிகிச்சையின் பலன் முழுமையாக இருக்காது.

சர்க்கரை கோளாறு

சர்க்கரை கோளாறு என்றாலே உடல் இளைக்கும், தண்ணீர் தாகம் அதிகம் எடுக்கும், சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டியிருக்கும், புண்கள் எளிதில் ஆறாது போன்ற அறிகுறிகள் தான் முதலில் தோன்றும்.

இது, இளைய பருவத்தினருக்கு பொருந்தும். முதுமையில் உடல் திடீரென்று இளைப்பது, பசி அதிகரிப்பது, அதீத சோர்வு, தொற்று நோய்கள் குணம் பெற பல நாட்கள் ஆவது போன்றவையே சர்க்கரை கோளாறின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரை கோளாறும் அண்ணன், தங்கை போல. சர்க்கரை கோளாறு இருந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளதா என்று அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். தலைவலி, தலைபாரம், மயக்கம் போன்ற உயர் ரத்த அழுத்தத்தின் பொதுவான ஆரம்ப அறிகுறிகள்.

ஆனால், எதிர்பாராத மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை முதுமையில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

மாரடைப்பு

மார்பு வலியின்றி உடல் சோர்வு, களைப்பு, மூச்சு வாங்குதல், மயக்கம், கீழே விழுதல், பக்கவாதம் போன்றவையே முதுமையில் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

சர்க்கரை கோளாறு இருந்தால், நெஞ்சு வலி அதிகம் இல்லாமலேயே மாரடைப்பு ஏற்படலாம். சற்று வேகமாக நடந்தால் மார்பு பகுதியில் அடைப்பது, ஏதோ ஒரு சங்கடம் தோன்றுவது, மூச்சு இரைப்பது இருந்தால் உடனே மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

தைராய்டு கோளாறு

பெண்களை அதிகம் பாதிப்பது தைராய்டு கோளாறு. முதுமையில் தைராக்சின் நீர் குறைவாக சுரப்பதால், 'மிக்ஸ்சோடிமா' என்ற நோய் ஏற்படுகிறது.

இதனால் உடல் சோர்வு, மனச் சோர்வு, தசை வலிமை இழத்தல், மலச்சிக்கல், காது கேளாமை, உடல் பருமன் ஏற்படலாம். இவை வயதானால் வருவது என்று நினைக்காமல், தைராய்டு பரிசோதனை செய்தால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சையளிக்க முடியும்.

மறதி நோய்

முதுமையால் ஏற்படும் மறதிக்கும், மறதி நோய்க்கும் ஆரம்ப நிலையிலேயே அதிக வித்தியாசம் இருக்காது. ஆகவே, மறதி நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சற்று சிரமம்.

வீட்டிலே உள்ள நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் தங்களிடம் இருக்கும் பெரியவர்களின் நடை, உடை, பாவனைகளில் ஏதாவது சிறிது மாற்றம் தெரிந்தால் கூட அது, 'டிமென்சியா'வாக இருக்கலாம் என்று உடனே சிறப்பு மருத்துவர்களை அணுக வேண்டும்.

ஒரு தடவையாவது 70 வயதை கடந்தவர்கள் தாங்களாகவே சிறப்பு மருத்துவரிடம் சென்று, மறதி நோயை கண்டறியும் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் யாருக்காவது மறதி நோய் இருந்திருந்தால் அல்லது சிறுவயதில் தலைக்காயம் ஏற்பட்டிருந்தால், 50 - 60 வயதிலேயே மறதி நோயை கண்டறியும் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

டாக்டர் வி.எஸ். நடராஜன்,
முதியோர் நல சிறப்பு மருத்துவர்,
சென்னை
போன்: 044-26412030



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement