கர்ப்ப காலத்தில், வயிற்று தசைகள் தளர்வு, உடல் எடை அதிகரிப்பு, வெளிப்புற தோற்றத்தில் மாற்றம், ஹார்மோன் மாற்றங்கள் உட்பட பல உடல் மாற்றங்கள் நடக்கும்.
கர்ப்ப காலத்தில். கரு வளரும் போது, பெரிதாகும் கருப்பையால், வயிற்றின் இடது, வலது பகுதியைப் பிரிக்கும் மையத்தில் உள்ள மெல்லிய இணைப்புத் திசு, வயிற்று தசைகள் விரிவடைந்து பிரிகின்றன. கர்ப்ப கால ஹார்மோன்களான 'ரிலாக்சின், ஈஸ்ட்ரோஜன்' ஆகியவை தசைகள் பிரிவதற்கு உதவுகின்றன.
பிரசவத்தின் போது ஏற்படும் உந்துதலால், அடி வயிற்றில் தசை பிரிதல் ஏற்படலாம்.
குறைப்பிரசவத்தில் பிறப்பது, வயிற்று தசைகளின் முழுமையற்ற வளர்ச்சி, தசை இணைப்பில் ஏற்படும் பிரச்னையால், இப்பிரச்னை பிறந்த குழந்தைகளுக்கும் வரலாம். 35 வயதிற்கு மேல் குழந்தை பெறுவது, அதிக எடையுள்ள குழந்தைகளை பெறுவது, குறுகிய இடைவெளியில் பல குழந்தைகளைப் பெறுவது, ஒரே பிரசவத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெறுவது, ஆகியவை இதற்கான காரணங்கள்.
வயிற்றின் மையப் பகுதி அகலமாகுதல், மலக்குடல், வயிற்று தசையின் இரண்டு பக்கங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை அசாதாரணமாக விரிவடையச் செய்வது ரெக்டஸ் டயாஸ்டஸிஸ் எனப்படும். இது ஆண்களையும், மகப்பேறுக்கு பின் பெண்களையும் பாதிக்கும்.
மல்லாக்கப் படுத்து, படுக்கை மட்டத்தில் இருந்து தலை, தோள்கள், கைகளை உயர்த்தி, விரல்களை அடிவயிற்றில் வைத்து வயிற்றின் தசைகளின் இறுக்கத்தை அளந்து பிரச்னையின் தீவிரத்தை அறியலாம்.
வயிற்று தசைகள் விரிவடையும் போது, வயிற்றில் தளர்வு, வீக்கம் இருக்கும். முதுகு வலி, கூன் போடுவது, மலச்சிக்கல், பலவீனமான இடுப்பு தசைகள் போன்றவை இதன் பிற அறிகுறிகள்.
கர்ப்ப காலத்தில் இது மோசமடைய அனுமதிக்காமல் முறையான பயிற்சிகளை செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம். பிறந்து 6 - 8 வாரங்களுக்குப் பிறகு, தொப்புள் குடலிறக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க இடுப்பு தசை சிகிச்சை எடுக்க வேண்டும்.
இப்பிரச்னை இருக்கும் போது, அடிவயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கனமானவற்றை துாக்குவது, முதுகு, வயிற்றுத் தசைகளை அதிகமாக விரிவடைய செய்யும் யோகா பயிற்சிகளைத் தவிர்த்து, இயல்பாக சுவாசிப்பது, பின் முதுகிற்கு ஆதரவாக தலையணை வைத்து அமர்வது நல்லது.
முறையான சிகிச்சை செய்யாமல் போனால், இப்பிரச்னை, தொப்புள் குடலிறக்கமாக மாறலாம்.
டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்
மகளிர் நல மருத்துவர் போர்டிஸ் மலர்,சென்னை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!