மானாவாரியில் கூடுதல் வருமானம் பெற அவுரி சாகுபடி செய்யலாம்.
முதல் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களின் அறுவடையானது தற்போது நடைபெறுகிறது. மானாவாரி மற்றும் இறவை நிலங்களில் 2ம் போகத்தில் குறைந்த செலவில் வருமானம் பெற மூலிகைப் பயிரான அவுரி சாகுபடி செய்யலாம். அவுரி சாகுபடிக்கு குறைந்தநீர் போதும் என்பதால் நீர்ப் பற்றாக்குறையுள்ள பாசன நிலங்களில் 2ம் பருவத்தில் அவுரி சாகுபடி லாபம் தரும்.
சுழல்கலப்பை கொண்டு உழுவதற்கு முன், ஏக்கர் ஒன்றுக்கு நல்ல முளைப்புத்திறன் உள்ள 3 முதல் 4 கிலோ அவுரி விதையை விதைக்க வேண்டும். சுழல்கலப்பை கொண்டு உழும்போது நிலத்தை உழுவதற்கும் பயிர் முளைப்பதற்கும் சரியாக இருக்கும்.
குளிர்கால மழை தை - மாசி மாதங்களிலும், கோடை மழை பங்குனி சித்திரையில் பெய்யும் போது, மழைநீரை கொண்டே அவுரி நன்கு வளரும். 45 நாட்களுக்கு ஒரு அறுவடை வீதம் இரண்டு முறை அறுவடை மேற்கொள்ளலாம். ஒரு அறுவடையில் ஏக்கருக்கு 2 - 3 குவிண்டால் இலை வீதம் 2 அறுவடைக்கு சராசரியாக 5 குவிண்டால் மகசூல் பெறலாம். ஒரு குவிண்டால் சராசரியாக ரூ.3000 முதல் ரூ.3500 வரை கிடைக்கும் என்பதால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். இப்பயிரானது ஆணிவேர் பயிர் என்பதால் நிலத்தின் அடிப்பரப்பில் உள்ள சத்துக்களைப் பயன்படுத்தி வளரும். எனவே சாகுபடி செலவும் குறையும்.
இது, நல்ல பசுந்தாள் உரம் என்பதால் நிலத்தின் வளத்தை பெருக்க விரும்பும் விவசாயிகள் அப்படியே மடக்கி உழுது உரமாக பயன்படுத்தலாம். இதன்மூலம் மண்ணின் அங்ககச் சத்து அதிகரித்து மண்ணின் வளம் மேம்படும். மண்புழு மற்றும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இப்பயிர் நிலத்தில் இருக்கும் போது ஆட்டுக்கிடை அமர்த்தினாலும் பயிருக்கு சேதம் ஏற்படாது.
-மகாலட்சுமி, விதைப் பரிசோதனை அலுவலர், ராமசாமி, சாய்லட்சுமி சரண்யா, வேளாண் அலுவலர்கள், விதைப் பரிசோதனை மையம், விருதுநகர்.99528 88963
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!