Load Image
Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா —

நான், 34 வயது பெண். கணவர் வயது: 37. பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் எங்களுடையது.

பல கனவுகளுடன், புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்தேன். பெரும்பாலான வீடுகளில் இருப்பதை போல், மாமியார் - மருமகள் பிரச்னை தலை துாக்கியது.

நான், பெற்றோருக்கு ஒரே பெண். கணவருடன் பிறந்த ஒரு அக்கா, திருமணமாகி, அடுத்த தெருவில் வசிக்கிறார்.

நாள் ஆக ஆக, பிரச்னை பெரிதாக, கணவரை வற்புறுத்தி தனிக்குடித்தனம் வந்து விட்டேன். அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் சாதாரண பணியில் இருந்தார். போட்டித் தேர்வு எழுத வைத்து, அரசு பணியில் சேர வைத்தேன்.

முதலில், வாடகை வீட்டில் இருந்த நாங்கள், கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, சொந்த வீடு வாங்கினோம். பழையதை மறந்து, மாமியார் - மாமனாருடன் இணக்கமாக இருக்க நினைத்தாலும், அவர்கள் எங்களை எதிரியாகவே நினைக்கின்றனர். ஒரு மகன், மகள் பிறந்தனர். அவர்களிடமும் பாசமாக இருப்பதில்லை.

சுய பச்சாதாபம், மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் என்று எல்லாம் சேர்ந்து, கணவர் மிகவும் வேதனைப்படுகிறார்.

'நான் சீக்கிரம் இறந்து விடுவேன். அதன்பின், என் வேலை உனக்கு கிடைக்கும். குடும்பத்தை பார்த்துக்குவியா...' என்று புலம்புகிறார்.

அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் மறுக்கிறார். மனநோயாளியாகி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வர வழி சொல்லுங்கள், அம்மா.

— இப்படிக்கு,
அன்பு மகள்.

அன்பு மகளுக்கு —

உன் புகுந்த வீட்டினரும், நீயும், தனித்தனி கிரகத்தில் வாழவில்லை என்பதை நினைவில் வை.

புகுந்த வீட்டை பற்றி குறை சொல்லியே, கணவரை, மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி, சர்க்கரை நோய்க்குள் தள்ளி விட்டிருக்கிறாய், என்று நினைக்கிறேன்.

உனக்கு தேவையான அறிவுரைகளை உன் பெற்றோர் கூறுவதில்லையா அல்லது அவர்கள் தான், மாமியார் - மருமகள் பிரச்னைக்கு துாபம் போடுகின்றனரா?

பிரச்னையை பலுான் போல் ஊதி பெரிதாக்கி விட்டாய். இனி, நீ செய்ய வேண்டியவைகளை கூறுகிறேன். கவனமாய் கேட்டு அதன்படி நடந்து, பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வை.

* உனக்கும், கணவருக்கும் திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகும் என, யூகிக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், நீ, என்னென்ன, 'நெகடிவ்' விஷயங்களை செய்து, புகுந்த வீட்டு பகையை உருவாக்கினாய் என்பதற்கு சுய அலசல் செய்.

உன் தீய குணங்களிலிருந்து விடுபட சங்கல்பம் கொள். இனி, இதுபோல செய்ய மாட்டேன் என, உறுதி எடு. மாமனார், மாமியார், நாத்தனாரிடம் போனிலோ, கடிதம் மூலமாக அல்லது நேரிலோ சந்தித்து மன்னிப்பு கேள்.

இனி, மாமியாருடன் நீ சேர்ந்து வாழ வேண்டாம். தனித்தனியே இருந்தாலும், மனக்கசப்பு இல்லாமல் வாழ வழி செய்

* கணவரிடம் புகுந்த வீட்டாரை பற்றியோ, தினசரி வீட்டு பிரச்னைகள் பற்றியோ, குழந்தைகள் நடத்தை பற்றியோ புலம்புவதை அடியோடு நிறுத்து. அவருக்கு தேவையான மன நிம்மதியை கொடு

* கணவருக்கு குடி பழக்கமோ, புகை பிடிக்கும் பழக்கமோ இருந்தால், படிப்படியாக குறைக்க வை. எடை அதிகமாக இருந்தால், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் எடையை குறை

* மாமனார், மாமியார், நாத்தனார் விஷயத்தில், நீ மாறி விட்டாய் என்ற செய்தியே, கணவரின் மன நோயை போக்கும். 37 வயது, சாக வேண்டிய வயதல்ல; இன்னும், 40 ஆண்டுகள் வாழலாம் என்ற நம்பிக்கையை அவருக்குள் ஏற்படுத்து. இனிமையான தாம்பத்யம் மூலம் அவரை உன் வசப்படுத்தி, சிகிச்சைக்கு சம்மதிக்க வை

* அலோபதியோ, சித்தாவோ, நல்ல மருத்துவரிடம், கணவரை அழைத்து போய் தேவையான மருத்துவ ஆலோசனை பெறு. உணவில் இனிப்பு, உப்பு, எண்ணெய், கொழுப்பு மிதமாக்கு

* வாரம் ஒரு முறை, கணவன், குழந்தைகளுடன் கோவிலுக்கு போ. மாதத்திற்கு ஒரு முறை, குடும்பத்துடன் சினிமாவுக்கு போ. ஆண்டுக்கு இருமுறை, சுற்றுலா போங்கள்

* கணவருக்கு முழு உடல் பரிசோதனை செய். அவரை, மன நல மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனைகள் பெறு. நீயும் கூட யோசனை பெறலாம்

* அலுவலக பிரச்னைகள் இருந்தால், அவற்றை உன்னிடம் கொட்டி தீர்க்க வைத்து, கணவரை அமைதிப்படுத்து

* சண்டைக்கோழி மனோபாவம் தவிர். ஒரு பொட்டலம் நிறைய அவித்த நிலக்கடலை வாங்கி சாப்பிடுகிறாய். சொத்தை கடலையை சாப்பிட நேர்ந்தால், அதை துப்பிவிட்டு மீதி கடலைகளை சாப்பிடு. மொத்த கடலையும் சொத்தை எனக்கூறி கொட்டி விடாதே. இறுதி வெற்றி உனக்கே!

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.வாசகர் கருத்து (3)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    இந்த மாதிரி பிரச்சினைகள் தீர அரசு ஊழியர் எப்படி இறந்தாலும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அந்த வேலையை கொடுக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்....

  • V.B.RAM - bangalore,இந்தியா

    கணவரை வற்புறுத்தி தனிக்குடித்தனம் வந்து விட்டேன்...சூப்பர் சூப்பர் சூப்பர் 'நான் சீக்கிரம் இறந்து விடுவேன். அதன்பின், என் வேலை உனக்கு கிடைக்கும். ...??/ அப்புறம் என்ன உனக்கு கவலை செய்யறாயெல்லாம் செய்துவிட்டாய். அரசாங்க வேளைக்கு போய் உன் இஷ்டத்துக்கு வாழ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement