மறைந்த ஒருவரை, கயிலாய பதவி அடைந்தார் என்கிறோம். இதற்கு காரணம் தெரியுமா?
சேலை உடுத்திய பெண் சிவலிங்கத்தின் வரலாறு தெரிந்தால், விடை கிடைத்து விடும்.
சிவலிங்கத்துக்கு வேட்டி அணிவதே வழக்கம். ஆனால், அதிசயமாக, மயிலாடுதுறையிலுள்ள மாயூரநாத சுவாமி கோவிலில், அனவித்யாம்பிகை என்ற பெண் பெயர் கொண்ட சிவலிங்கம் உள்ளது. தன் மீது அபார பக்தி கொண்ட ஒரு பெண்ணுக்கு, தன் வடிவமான லிங்கத்தையே அர்ப்பணித்திருக்கிறார், சிவன்.
திருவையாறில் வசித்தவர் நாதசர்மா. இவரது மனைவி அனவித்யா. அனவித்யா என்றால், அனைத்தும் கற்றவள் என பொருள். இந்தப் பெண்மணி, அனைத்தும் சிவனே என்ற மந்திரத்தைக் கற்றவள்.
நடந்தால், எழுந்தால், ஓடினால், உறங்கினால்... இப்படி, எப்போதுமே சிவன் நினைப்பு. அவள் மனதுக்கேற்றாற் போல், வாய்த்த கணவனும் சிவபக்தர். கருத்தொருமித்து வாழ்ந்தனர், தம்பதியர்.
இவர்களுக்கு நீண்ட காலமாக, காவிரிக்கரையிலுள்ள, மயிலாடுதுறை மாயூரநாத சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்பது ஆசை. அங்கே ஐப்பசி மாதம் நடக்கும் துலா ஸ்நானம் விழா முக்கியம்.
ஐப்பசி மாதத்தில், சூரியன் துலாம் ராசியில் நுழைவார். இதனால், இம்மாதத்தை, துலா மாதம் என்பர். இந்த மாதத்தில், காவிரியில் நீராடி, மாயூரநாதரை வழிபட்டால், எப்பேர்பட்ட பாவமும் நீங்கும் என்பது ஐதீகம்.
பிறவி என்பதே, பாவம் தானே! இந்தப் பிறவி, இனி தங்களுக்கு வரக் கூடாது. சிவனுடன் கலந்து விட வேண்டுமென்பது, தம்பதியின் விருப்பமாக இருந்தது. எனவே, அவர்கள், மயிலாடுதுறைக்கு வந்தனர்.
காவிரியில் நீராடி, 'எம்பெருமானே... எங்களுக்கு பிறவா வரம் வேண்டும்...' என கதறி அழுதனர். பக்தர்களின், இந்த கதறல், மாயூரநாதரை உருக்கி விட்டது. அந்த இடத்திலேயே, அவர், அந்த தம்பதியை தன்னோடு இணைத்துக் கொண்டார். அத்துடன் அனவித்யாவுக்கு, தனக்குரிய லிங்க வடிவையும் கொடுத்தார்.
பெண் லிங்கமான இதற்கு, அன வித்யாம்பிகை என்ற பெயரும் சூட்டப்பட்டது. இந்த லிங்கத்துக்கு சேலை அணிவிக்கும் வழக்கமும், இன்று வரை உள்ளது. கயிலாயபதியான சிவனுடன் ஐக்கியமானதால் தான், மறைந்தவர்களை கயிலாய பதவி அடைந்தார் என்கின்றனர்.
இங்கே அம்பாள், மயில் வடிவில் சிவன் அருகில் இருப்பது மற்றொரு விசேஷம். பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் இவளை, அபயாம்பிகை என்பர்.
பிறவி எடுத்தால் தான் மனிதனுக்கு கஷ்டம். பணம் வேண்டும், பொருள் வேண்டும், உறவு வேண்டும்... இப்படி பல தேவைகள் இருக்கும். பிறவி இல்லையெனில், தெய்வப்பணி மட்டுமே. பசிக்கக் கூட செய்யாது. இந்த அரிய வாய்ப்பைப் பெற, மாயூரநாதரை வணங்கி வாருங்கள்.
தி. செல்லப்பா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!