காட்டுக்கு ராஜா சிங்கம். அதன் நடவடிக்கைகள், சில நாட்களாக மாறியிருந்தன. அரசவைக்கு, குறித்த நேரத்திற்கு வருவதில்லை; எந்த விஷயத்தையும் மனம் விட்டு பேசுவதில்லை. எதையோ, இழந்தது போல், முகம் வாடி, குகை மூலையில் முடங்கி இருந்தது.
முன்பெல்லாம், மாமிச உணவை விரும்பி உண்டது. இப்போது, அதை பார்த்தால் வேப்பங்காயை உண்டது போல், வெறுப்புடன் கடக்கிறது.
சிங்க ராஜாவின் இந்த மாற்றம், விலங்கினங்களுக்கு கவலையளித்தது.
'ஏன் இப்படி நடந்து கொள்கிறார்... சிங்க ராஜாவுக்கு, என்ன நிகழ்ந்திருக்கும்...'
காட்டு விலங்குகள் ஒன்றையொன்று விசாரித்தன.
சிங்க ராஜாவின் உற்ற நண்பன் கரடி; அது விலங்குகள் பேசியதை கேட்டு, என்ன நிகழ்ந்தது என்பதை கூறியது.
அந்த நிகழ்வு...
அன்று சிங்க ராஜாவுடன், காட்டில் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்போது, ஓநாய்க்கு பயந்து, புதரை தாண்டி ஓடி வந்த மான் குட்டி, சிங்க ராஜாவின் பின்னங்காலில் மோதி நின்றது.
மோதிய வேகத்தில், அதன் கூர்மையான கொம்புகள், பின்னங்காலை பதம் பார்த்து விட்டது. ரத்தம் பீறிட்டது; வலி பொறுக்க முடியாமல் அலறியது; இதற்கெல்லாம் காரணம், இந்த மான் குட்டி என்று, பற்களால் குதறி தள்ளியது சிங்க ராஜா; எதுவும் அறியாத அந்த மான் குட்டி உயிரிழந்தது.
மறுநாள் -
'என் மகன், உயிரை காப்பாற்றி கொள்ள ஓடி வந்தான். உங்களிடம் அகப்பட்டு விட்டான்; அவனை கொன்றீர்; ஆசைத் தீர்ந்ததா உங்களுக்கு; இனி, என் மகனை என்னால் காண முடியாது. இதற்கு நீங்கள் ஒருவரே காரணம்...'
சிங்கத்தின் மீது குற்றம் சாட்டியது தாய்மான்.
'அறியாமல் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடு...'
கெஞ்சிய சிங்க ராஜா அதை எண்ணியபடியே வருத்தத்துடன் வாழ்கிறது.
இவ்வாறு எடுத்துக் கூறியது கரடி.
விலங்குகள் வியப்புடன் கடந்து சென்றன.
நாட்கள் கடந்தன -
மேய்ச்சலுக்கு போன, தாய்மானை, நரி ஒன்று, துரத்தி வருவதை, குகை வாசலில் நின்ற சிங்க ராஜா கவனித்தது. அந்த மானை காப்பாற்ற ஓடி வந்தது.
சிங்க ராஜாவை கண்டதும் விலகி சென்று விட்டது நரி.
ஆபத்து விலகியதால், 'என்னை காப்பாற்றி இருக்கிறீர்; தவறுக்கு பரிகாரம் செய்து விட்டீர்...' என சிங்க ராஜாவிடம் மென்மையாக கூறியது தாய்மான்.
வருந்தியிருந்த சிங்க ராஜாவின் மனம் மாறியது. பரிகாரம் செய்து விட்டதாக எண்ணி தெளிந்தது.
குழந்தைகளே... தவறை எண்ணி வருந்தினால், நிச்சயம் மன்னிப்பு உண்டு என்று புரிந்து கொள்ளுங்கள்!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!