கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகர கடற்கரை பரந்து விரிந்தது. அலை ஓசை கேட்டபடியே இருக்கும். அங்கு நின்று உரக்க பேசிக்கொண்டிருந்தார் டெமாஸ்தனிஸ்.
முகம், எட்டு கோணலாக மாறி இருந்தது; சளைக்காமல், 'ஏதென்ஸ் நகரமே... அறியாமை இருள் நீக்க உலகத்திற்கே அறிவு ஒளி வீசும் அழகிய திருநாடே... உனக்கே தலைகுனிவை உருவாக்குவதா... அதை மக்கள் சகித்து இருப்பதா...' என மடை திறந்தது போல் பேசினார்.
மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் இது போல் பேசினார். அவருக்கு திக்குவாய் குறைபாடு இருந்தது. அது பற்றி கவலைப்படாமல் பயிற்சியால் பேச்சுக் கலையில் தேர்ச்சி பெற்று விட்டார். விரும்பும் வண்ணம் கருத்துக்களை எடுத்து வைத்தார். நீதிமன்ற வழக்குகளில் வாதாடினார். கடும் உழைப்பு அவரை உயர்த்தியது.
சிறு வயதிலே தந்தையை இழந்தார். குடும்ப சொத்துக்களை அபகரித்து கொண்டனர் உறவினர்கள். இதனால், நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றார்; திறமையாக வாதிட்டு வெற்றி பெற்றார். கிரேக்க நாட்டில் சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார்.
மாசிடோனிய நாட்டு மன்னன் பிலிப், கிரேக்க நாட்டை அடிபணிய வைக்க முயன்றான். இந்த செய்தி டெமாஸ்தனிசுக்கு எட்டியது; சீறி எழுந்து எதிராக பிரசாரம் செய்தார். இதை கேட்டு கொதித்தெழுந்த மக்கள், போர்க்களம் புகுந்தனர். பின்வாங்கி ஓடினான் பிலிப்.
ஏதென்ஸ் நாட்டில் ஒரு பகுதி பெயர் ஒலின்டஸ். அதை பிடிக்க திடீரென படை எடுத்து வந்தான் பிலிப். ஏதென்ஸ் படை கடுமையாக போராடி தடுத்தது. உடனே, யூபியா என்ற பகுதியை தாக்கினான். அதை தடுக்க ஏதென்ஸ் படை விரைந்தது. இவை, டெமாஸ்தனிஸ் நிகழ்த்திய எழுச்சி உரையால் தான் நடந்தது!
யூபியா விடுதலை பெற்றது; ஆனால், ஒலின்டஸ் பிலிப் வசமாயிற்று.
அதை மீட்க ஏதென்ஸ் நிர்வாகம் சமாதானப் பேச்சு துவங்கியது. அதன் பிரதிநிதியாக இருந்தார் டெமாஸ்தனிஸ். சமாதானம் என்ற பெயரில் தன் விருப்பத்தை நிறைவேற்ற முயன்றான் பிலிப். இதற்கு சம்மதிக்காததால் கோபத்துடன் நாடு திரும்பினான். சமாதானப் பேச்சு முறிந்தது.
இதற்கு டெமாஸ்தனிஸ் தான் காரணம் என, புரளி கிளப்பினர் எதிரிகள். சமாதானப் பேச்சு நடந்த போது, பதவி கேட்டு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டினர். விசாரணையில் அது பொய் என நிரூபணமானது.
பிலிப் இறந்தபின், மாசிடோனிய தலைவனாக பொறுப்பேற்ற ஆன்டி பேடர், 'டெமாஸ்தனிஸ் உள்ள வரை, ஏதென்சைக் கைப்பற்ற முடியாது' என்று கருதினான். அவருக்கு எதிராக, பேச்சு திறனால், மக்களை களப்பலி ஆக்குவதாக குற்றம் சுமத்தினான்.
'ஏதென்ஸ் - மாசிடோனியா இடையே, சமாதான ஒப்பந்தம் ஏற்பட, டெமாஸ்தனிசை கைதியாக ஒப்படைக்க வேண்டும்' என்றது ஆன்டி பேடர் படை.
அந்த நிபந்தனை ஏற்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ஒரு கோவிலுக்குள் ஒளிந்தார் டெமாஸ்தனிஸ்; கொடிய நஞ்சை நாவில் தடவி உயிர் துறந்தார்.
ஏதென்ஸ் நாட்டில், இதற்கு முன், ஒருவர் இதுபோல் தண்டிக்கப்பட்டார். அவர் பெயர் சாக்ரடீஸ். அவரும் புரட்சிக்காக பகுத்தறிவுப் பிரசாரம் செய்தார்; ஏதென்ஸ் அரசு, அவரைக் குற்றவாளியாக்கி, விஷம் கொடுத்து கொன்றது.
பின்னாளில், ரோமாபுரியில் சிறந்த பேச்சாளராக விளங்கிய சிசரோ, 'என் பேச்சு கலைக்கு குருநாதர் டெமாஸ்தனிஸ் தான்...' என்றார். உலகின் முதல் பேச்சாளர் டெமாஸ்தனிஸ் தான் என்று, போற்றியுள்ளார், நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!