பற்களின் ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று இணைந்தது. 40 வயதிற்கு மேல், ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்வது எப்படி அவசியமோ, அதேபோல் வயது வேறுபாடின்றி, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் பரிசோதனை செய்வதும் அவசியம்.
குழந்தையின் முதல் பல் பரிசோதனை, பால் பல் முளைக்கத் துவங்கிய, முதல் ஆறு மாதத்திற்குள் இருக்க வேண்டுமென்று எத்தனை பேருக்கு தெரியும்?
அடிக்கடி பல் பரிசோதனை மேற்கொள்ளும் போது, எந்த பிரச்னையும் ஆரம்ப கட்டத்திலேயே தெரிய வரும்; அப்போதே எளிமையான முறையில் சரி செய்யலாம்.
பொதுவான பிரச்னையாக பலரும் என்னிடம் கூறுவது... மஞ்சள் நிற பற்கள், ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, வாய் துர்நாற்றம், பல் சொத்தை, பற்கள் வலிமையின்றி ஆடுவது, பல் விழுந்து விடுவது போன்றவை தான். இவை அனைத்திற்கும் சிகிச்சை உண்டு.
இன்று ஜனவரி 22... 'உலக புரோஸ்தடான்டிக்ஸ்' தினமாகக் கொண்டாடப்படுகிறது. புரோஸ்தடான்டிக்ஸ் எனப்படுவது, செயற்கை பல் பொருத்துவதற்கான சிறப்பு பிரிவு.
பற்கள் இல்லாதவர்கள், பற்கள் இருப்பவர்களைக் காட்டிலும், ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்களாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
பல் இல்லாமையால், பல உணவுகளை மென்று சாப்பிட இயலாமல் போகிறது; இதன் விளைவாக, உடலில் சத்து குறைபாடு உருவாகிறது; ஆரோக்கியக் குறைபாட்டால், உடல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு இது வழிவகுக்கிறது.
குறிப்பாக, ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் சொத்தை அல்லது பற்கள் வலிமையின்றி ஆடுவது போன்ற பிரச்னைகளே, பற்கள் விழுவதற்கு காரணம். அது மட்டுமின்றி புகை பிடித்தல், சர்க்கரை கோளாறு, எதிர்ப்பு சக்தி இல்லாததால், உடல் நலம் குறைபாடு உள்ளவர்கள், கேன்சர் பாதிப்பு உள்ளவர்கள், பற்களை இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
பற்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, சாப்பிட்டதும் வாய் கொப்பளிப்பது, ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது, பல் சொத்தை இருந்தால், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்வதால், பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.
ஏற்கனவே பற்களை இழந்தவர்கள் என்ன செய்வது என்ற அச்சம் வேண்டாம்.
மற்றவர்கள் போலவே கடினமான உணவுகளை மெல்லுவதற்கு பற்கள் இல்லையே என்ற கவலையில்லாமல், மகிழ்ச்சியாக வாய் விட்டு சிரிக்கலாம்; இதற்கு புரோஸ்தடான்டிஸ்ட் - செயற்கை பல் வைக்கும் சிறப்பு மருத்துவ முறை உள்ளது.
செயற்கை பற்கள் எடுத்து மாட்டுவது, நிரந்தரமாக வைப்பது என, இரு வகைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானோர் விரும்புவது, நிரந்தர பற்களே.
ஒரு பல் இல்லையென்றால் அதற்கு முன்னும், பின்னும் உள்ள பற்களின் துணையுடன், 'ப்ரிட்ஜ்' எனப்படும் நிரந்தர பல் பொருத்தலாம்.
நிரந்தர பற்களின் மற்றொரு வகை, 'இம்ப்ளாண்ட்!' இவ்வகை செயற்கை பற்கள், அடுத்துள்ள பல் துணை இல்லாமல், எலும்பின் துணையுடன் பொருத்தப்படும்.
இது மட்டுமின்றி, எல்லா பற்களையும் இழந்தவர்கள், பல் செட் அல்லது இம்ப்ளாண்ட் பொருத்திக் கொள்ளலாம்.
டாக்டர் சவுமியா கிருஷ்ணமூர்த்தி,
பல் மருத்துவர், சென்னை.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!