அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில் சர்வதேச அளவில் இன்று முன் நிற்பவை சிறுதானியங்கள்தான். இவை இயற்கை நமக்கு அளித்த சத்தான உணவு.
சிறுதானிய உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை 2023 ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அரிசி, கோதுமை, பார்லி போன்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் அதிக ஆற்றலைத் தரக்கூடியவை. அதிக அளவு நார்ச்சத்தும், கால்சியம், இரும்பு, புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளது. மற்ற தானியங்களை விட இவற்றில் பைடிக் அமிலம் குறைந்து காணப்படுகிறது.
நெல்லரிசியைக் காட்டிலும் ஏழுமடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. சிறுதானியங்களில் அதிக வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது வரகு. 65 முதல் 75 நாட்களில் விளையக்கூடியது பனிவரகு. குறைந்த தண்ணீரில் நிறைந்த விளைச்சலையும், லாபத்தையும் தரக்கூடிய ஒரே பயிர். பனிவரகில் சோளம், கம்பு, அரிசியைவிடக் கூடுதலான புரதச்சத்துள்ளது.
சிறு தானியங்கள் இயற்கையாகவே வறட்சியைத் தாங்கி வளரும். பூச்சி, நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். உரம், இடுபொருள் செலவும் குறைவு தான். மானாவாரியில் குறைந்தளவு மகசூல் கிடைத்தாலும் ஓரளவு தண்ணீர் வசதியிருந்தால் விளைச்சல் அதிகரிக்கும். எந்த விதையாக இருந்தாலும் அவற்றின் முளைப்புத்திறனை பரிசோதிப்பது அவசியம். விதைப்பதற்கு முன், அவற்றின் புறத்துாய்மை 97 சதவீதம், ஈரப்பதம் 12 சதவீதம்; முளைப்புத்திறன் 75 சதவீதம் இருக்க வேண்டும்.
விதைப் பரிசோதனை நிலையத்தில் 25 கிராம் விதைகளை கொடுத்தால் முளைப்புத்திறன் கண்டறிந்து தரப்படும். கட்டணம் ரூ.80. முளைப்புத்திறன் சோதனைக்கு பின் விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஒரு எக்டேருக்கு 10 கிலோ தேவைப்படும். விதைகளுடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரி தலா 3 பாக்கெட் அளவு கலக்க வேண்டும். அல்லது அசோபாஸ் 1200 கிராம் பவுடர் கலந்து விதைநேர்த்தி செய்தால் நைட்ரஜன், பாஸ்பரஸ் சத்துகள் கிடைக்கும்.
அடுத்ததாக பூஞ்சாணங்களில் இருந்து பாதுகாக்க பாலித்தீன் பையில் ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது 4 கிராம் கேப்டான் கலக்க வேண்டும். அல்லது 2 கிராம் கார்பன்டசிம் கலந்து விதைகளை கலக்க வேண்டும்.
விதைப்படுக்கை தயார் செய்த பின் விரலால் படுக்கையின் மீது கோடிட்டு அதன் மீது விதைகளை துாவவேண்டும். கையால் மண்ணை துாவி விதைகளை மூடவேண்டும். 500 கிலோ தொழுஉரத்தை பாத்திகளின் மேல் துாவி விதைகளை மூடி மேற்பரப்பை இளக்கமாக்க வேண்டும். விதைகளை ஆழமாக விதைத்தால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.
மகாலெட்சுமி,
விதைப் பரிசோதனை அலுவலர்
சத்தியா, மகிஷா தேவி
வேளாண்மை அலுவலர்கள்
விதைப்பரிசோதனை அலுவலகம்,
தேனி.
96775 31161
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!