மழை ஆரம்பித்ததும் கெட்டுப்போன உணவு, அசுத்தமான நீர் வாயிலாக பரவும் டைபாய்டு, பாரா டைபாய்டு தொற்று பரவுவது அதிகரித்து உள்ளது.
ஊரடங்கு அமலில் இருந்த போது, வீட்டிலேயே இருந்தோம்; அதனால், தொற்று நோய்களின் தாக்கம் அப்போது குறைவாக இருந்தது. தற்போது அனைவரும் வெளியில் வந்து விட்டதால், அதிகம் பேர் பாதிக்கப்படுகிறோம்.
டைபாய்டு, பாரா டைபாய்டு என, இரு வகை காய்ச்சல் உள்ளது. இவை, பாக்டீரியா தொற்றால் வருகின்றன. காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், வயிற்று வலி, பசியின்மை, தோலில் தடிப்பு, மயக்கம், நீர்ச்சத்து குறைபாடு போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள். அரிதாக தொண்டை வறட்சி, வறட்டு இருமல் வரலாம்.
பொதுவாகவே தீவிர காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். முதல் நாளில் லேசான காய்ச்சலாக துவங்கி, மூன்றாவது, நான்காவது நாளில், 102 - 104 டிகிரி, 'பாரன்ஹீட்' என்ற அளவிற்கு அதிகரிக்கும்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் குறையாமல் இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
சிகிச்சை
ரத்த பரிசோதனை மூலம் மட்டுமே டைபாய்டை உறுதி செய்ய முடியும்; ஆனால், முடிவு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகலாம் என்பதால், அறிகுறிகளை வைத்தே சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது.
இன்றைய சூழலில், டைபாய்டு காய்ச்சலுக்கு தரப்படும் ஆன்டி பயாடிக் மருந்துகள் தான், நம் முன் இருக்கும் சவால். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, சில வகை ஆன்டி பயாடிக் மருந்துகளை பயன்படுத்தினோம். இந்த மருந்துகளுக்கு எதிராக, டைபாய்டை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் வீரியம் பெற்று விட்டன.
அதன்பின், வேறு சில மருந்துகளை பயன்படுத்தி வந்தோம். சமீப ஆண்டுகளில் இந்த மருந்துகளும், அந்த அளவு வீரியத்துடன் செயல்படவில்லை.
வழக்கமாக குணமாகும் நாட்களை விடவும், அதிக நாட்கள் ஆகிறது. கூடுதலாக, ஆன்டி பயாடிக் மருந்துகள் கொடுத்த நான்கைந்து நாட்களுக்கு பிறகே, காய்ச்சல் குறைய ஆரம்பிக்கிறது.
எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், சுயமாக மருந்துகளை சாப்பிட்டதால், ஆன்டி பயாடிக் மருந்துகளுக்கு எதிராக, பாக்டீரியா கிருமிகள் வீரியம் பெற்று விட்டன. இந்த நிலை, மற்ற நாடுகளை விடவும், நம் நாடு உட்பட ஆசிய நாடுகளில் அதிகம்.
எங்கு, எந்த அளவு தேவையோ, அந்த அளவில் மட்டும் ஆன்டி பயாடிக் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.
தேவைக்கு அதிகமாக தருவது, தவறுதலாக தருவது, ஐந்து நாட்களுக்கு எடுக்க வேண்டிய ஆன்டிபயாடிக் மருந்துகளை, இரண்டு நாட்கள் மட்டும் சாப்பிட்டு விட்டு விடுவது, டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிடுவது இவற்றை எல்லாம் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் ஆன்டி பயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மட்டும் இல்லை. எந்த தொற்றும் நம்மை அணுகாமல் இருக்க வேண்டும் எனில், அடிக்கடி கை கழுவுவதும், வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் முக்கியம்!
டாக்டர் ஸ்பூர்த்தி அருண்,
பொது நல மருத்துவர், சென்னை.
95000 77678
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!