Load Image
Advertisement

சிந்துவெளி புனல் முதல் கீழடி மணல் வரை... - நினைவலையில் 'தொன்மை தூதுவர்' பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.,

சிந்துவெளி நாகரிகம் தொடர்பாக 35 ஆண்டுகால ஆய்வாளர், எழுத்தாளர், கவிஞர், என பன்முகத் திறமை கொண்டவர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.,
திண்டுக்கல் நத்தத்தை சேர்ந்த இவர், ஒடிசா மாநில தலைமைச் செயலாளராக இருந்து பணி ஓய்வு பெற்றார். இப்போதும் ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகராக உள்ளார். இவரது நுால்களான 'இடப்பெயர், இந்தியவியல், சங்க இலக்கிய ஆய்வுகள்' அதிகம் அறியப்பட்டவை.
'ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்து முதல் வைகை வரை' போன்ற ஆங்கில நுால்கள் நம் பெருமையை உலக அளவில் கொண்டு சேர்த்துள்ளது. 'தமிழர்களின் பெருமை'யான இவர், 'தினமலர்' பொங்கல் மலருக்காக நம்மிடம்… பேசியதாவது...

படித்தது மதுரையில் தான். தமிழில் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று ஒடிசாவில் 1988ல் பணியில் சேர்ந்தேன். அங்கு கோயா, குயி, கோண்டி மொழி பேசும் பழங்குடி மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் தமிழ் பண்பாட்டின் பல ஒற்றுமைகள் இருந்தன. அது என் ஆய்வுக்கு தொடக்க களமாக அமைந்தது.
அந்த பழங்குடி வாழ்க்கை முறை, சொற்கள், மொழி ஒற்றுமை எல்லாம் நமது சங்க இலக்கியத்தின் 'குறிஞ்சி திணை'யின் மலைவாழ் மக்களிடம் நடக்கும் நிகழ்வுகளை ஒத்து இருந்தன.

ஐ.ஏ.எஸ்., டூ ஆய்வு சிந்தனை
அன்று முதல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் எண்ணம் தோன்றியது. 1990ல் சட்டீஸ்கரின் பஸ்தர் மாவட்ட மக்கள் வாழ்க்கை முறை நம் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டது போல் இருந்தது. இதனால் கோண்டு மொழி பழங்குடி மக்கள் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் எண்ணம் தோன்றியது.
அந்த பகுதியில் உள்ள இடப் பெயர்கள் (ஓனோமாஸ்டிக்ஸ்) குறித்தும் ஆய்வு செய்தேன். பஸ்தர் மாவட்டத்தில் மட்டும் 280 ஊர்கள் தமிழ் சொல்லான 'நாடு' என்பதில் முடிந்துள்ளன. இந்த தாக்கமும் ஆய்வு ஆர்வத்தை அதிகரித்தது.

சிந்துவாரா நிலவரம்
மத்திய பிரதேசத்தில் உள்ள சில பழங்குடி பகுதிகளிலும் 'சிந்துவாரா' பகுதியிலும் நம் தமிழகத்தில் உள்ள குமுளி, பழநி, கேரளாவின் தேக்கடி, இடுக்கி போன்ற ஊர் பெயர்களை பார்க்க நேர்ந்தது. இது எதேச்சையாக நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் 'சிந்துவாரா சிண்ட்ரோம்' (சிந்துவாரா நிலவரம்) என்ற எனது முதல் ஆங்கில கட்டுரை 1997ல் வெளியானது.
இது இடப்பெயர்கள் ஆய்வுகளுக்கு சான்றாகவும், திருப்புமுனையாகவும் அமைந்தது. 2000ல் சூரிய வழிபாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டேன். பாகிஸ்தான் பகுதிகளில் சூரிய வழிபாடு குறித்த ஆராய்ச்சியின் போது தான் என் பார்வை இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும் 'இடப்பெயர்' குறித்தும் சென்றது.
அந்த ஆய்வில் சங்க இலக்கியத்தில் உள்ள பல நிலப்பகுதிகள், குறுநில மன்னர்கள், இடப்பெயர்கள் இன்றும் இருப்பது வியப்பு. இதுதொடர்பாக சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற 'கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்' (கே.வி.டி., காம்ப்ளக்ஸ்) என்ற எனது கோட்பாடு குறித்த ஆய்வை 2010ல் கோவை செம்மொழி மாநாட்டில் அறிவித்தேன்.
சிந்து வெளி ஆய்வுகள் 1924ல் துவங்கி தற்போது நுாறு ஆண்டுகளை எட்டியுள்ளது. இங்கு கிடைத்த மொழியை நாம் படிக்க முடியவில்லை என்றாலும் அது திராவிட நாகரிகமாக இருந்திருக்கும் என்ற கருத்து வேரூன்றி உள்ளது. வங்காள மொழி ஆய்வாளர் சட்டர்ஜி, ஐராவதம் மகாதேவன் ஆகியோர் கூற்றாக இது உள்ளது. இந்த வழித்தடத்தை பின்பற்றியே என் ஆய்வும் நடக்கிறது.

சிந்துவெளியும் சங்க இலக்கியமும்
இயற்கை, பூகோள அடிப்படையில் 'சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' என்பது என் முன்மொழிவு. இது தொடர்பான 'ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்து முதல் வைகை வரை' என்ற நுாலில் நான் பல ஆதாரங்களை குறிப்பிட்டுள்ளேன்.
இந்தியாவின் தொன்மங்கள் குறித்த ஆய்வில், சிந்து வெளி நாகரிகத்தை படைத்தவர்கள் யார். அவர்கள் பேசிய மொழி எது. அந்த மக்கள் அந்த பண்பாட்டின் அழிவிற்கு பின் எங்கே போனார்கள் என்பதும், தமிழர்கள் தொன்மங்கள் எங்கு தொடங்கியது என்பதும் புதிராக உள்ளது. இதுதான் என் நீண்ட கால ஆராய்ச்சியின் புரிதல்.

கீழடியும் சாட்சியும்
தமிழகத்தின் கீழடி, மொகஞ்சதாரோ, ஹரப்பா, குஜராத் லோத்தலில் கிடைத்த பகடைகள் ஒன்றோடென்று தொடர்புடையதாக இருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் ஒன்றான 'கலித்தொகை'யில் பாடல்களில் 'பகடையாட்டம்' தொடர்பான வர்ணிப்பும் உள்ளது.

சிந்து வெளியில் ஏறு தழுவுதல்
விளையாட்டும் நடைமுறையில் இருந்தை அங்கு கிடைத்த உருவபொறிப்பு பொருட்கள் உறுதி செய்கிறது. இது சங்க இலக்கியத்தில் உள்ள ஏறு தழுவல் பண்பாட்டையம் இப்போதும் உள்ள ஜல்லிக்கட்டையும் நினைவுப்படுத்துகிறது.
இதன் மூலம் சிந்துவெளி பண்பாட்டு தொடர்புகள், மீள் நினைவாக சிந்து வெளியில் இருந்து சங்க இலக்கிய காலத்தில் வந்துள்ளதை நாம் அறிய முடிகிறது.

'வடமேற்கில் நிலவிய சிந்துவெளி
பண்பாட்டையும், தென் பகுதியில் நிலவும் தமிழ் பண்பாட்டையும் இணைக்கும் பாலமாக சங்க இலக்கியம் திகழ்கிறது ஒவ்வொரு காலத்திற்கும் இதுபோன்ற ஆய்வுகள் நடக்க வேண்டும். தமிழர்களின் வீரம், பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் இச்சூழலில் தமிழ் மொழி, பண்பாட்டு ஆய்வுகள் தேவை. இது குறித்து இளைஞர் சமுதாயத்திடம் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும் என்கிறார் இந்த 'தொன்மை துாதுவர்'.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement