தமிழக கிராமங்களில் முன்னோர் முன்மொழிந்து, இளையோர் வழிமொழிந்து, உருவான பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பல உண்டு. அதில் ஒன்றாக 'விளக்கிடு கல்யாண' முறை திகழ்கிறது. மதுரை, திருநெல்வேலி உட்பட பல ஊர்களில் இன்றும் இப்பாரம்பரிய நிகழ்வு பொங்கலுக்கு முதல் நாள் நடக்கிறது.
சிவனின் அம்சமான பவள மணிகள் பத்து, நவசக்தி அம்சமான தங்க உருண்டைகள் ஒன்பதை நுாலில் கோர்ப்பர். இந்த 19 மணிகள் கோர்த்த மாலையை 'நவதாலி' என்பர். பொங்கலுக்கு முதல் நாள் சூரிய பகவான் முன், குடும்பத்தில் உள்ள 5 வயது நிரம்பிய ஏழு வயதிற்கு உட்பட்ட சிறுமி கழுத்தில் நவதாலியை தாய் வழி பாட்டனார் அணிவிப்பார்.
திருமணமாகும் வரை அவள் அணிந்த நவதாலி கற்பை காக்கும். மாந்தீரிகம், தந்திரம், தீய செயல்களால் தீங்கு ஏற்படாமல் தடுக்கும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற சொல்படி 5 வயதிலேயே சிறுமிக்கு ஒழுக்கம், கல்வி, அறிவு, பொறுமை, தியாகம், அன்பு, அடக்கம், பக்தி, பெரியோர்களை மதிக்கும் பாங்கு அமைய வேண்டும்.
இப்பண்புகளை பெண்ணிற்கு சிறுவயதிலேயே கற்று தந்து குடும்ப விளக்காக ஒளிவீச விளக்கு பூஜையும் செய்வர். அதற்காக 108 திரி நுால் இழை எடுத்து, 3 பாகமாக பிரித்து ஜடை போல பின்னுவர். அதை சிவன் வடிவமான அகல் விளக்கு, சக்தி வடிவமான கை விளக்கிலிட்டு ஒளி ஏற்றுவர்.
இது குறித்து மதுரை குடும்பத் தலைவி லதா கூறியதாவது: சிறு வயதில் அழைப்பிதழ் அச்சிட்டு சுற்றமும் நட்பும் சூழ விளக்கிடு கல்யாணம் நடக்கும்.அந்த பெண் பெரியவளாகி திருமணம் ஆகும் போது நவதாலியில் உள்ள பவள மணி, தங்க உருண்டையை மாங்கல்யத்தில் கோர்ப்பர்.
இதற்காக பெண்ணின் பெற்றோர் விளக்கு திரிகள், பணம் அனுப்பி விடுவர். இதற்குரிய விளக்குகளை அன்று மட்டும் தான் ஏற்றுவோம். வீட்டில் வறுமை, நோய், மனக்குழப்பம் அகற்றி, நல்வழி காட்ட வழிபட வேண்டும். ஒரு குடும்பத் தலைவி கணவருடன் இணைந்து சிவசக்தி அம்சமாக விளங்க வேண்டும்; எல்லா வளமும், நலமும் பெற்று சீரும், சிறப்புமாக வாழ வேண்டும் என்பது தான் விளக்கிடு கல்யாணத்தின் கருப்பொருள் என்றார்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!